ஓமான் நாட்டில் 2021 டி 20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடக்க விழாவில் அமைச்சர் நாமல் ராஜபக்ச சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

 ஓமான் நாட்டில் 2021 டி 20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடக்க விழாவில் அமைச்சர் நாமல் ராஜபக்ச சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

ஓமானின் கலாச்சார, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் செய்யத் தியாசின் பின்  ஹைதம் பின் தாரிக் அல் சயீத் விடுத்த அழைப்பின் பேரில் ஓமான் சுல்தானேற்றுக்கு விஜயம் செய்த இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ச, முதன் முறையாக ஓமான் அனுசரணை வழங்கும் 2021 அக்டோபர் 17ஆந் திகதி அல் அமரேட்டில் உள்ள ஓமான் கிரிக்கெட் அக்கடமி மைதானத்தில் நடைபெற்ற 2021 உலகக் கிண்ண இறுதித் தகைமையாளர்கள் போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அமைச்சருடன் இணைந்து தொடக்க விழாவில் கலந்து கொண்டார். ஓமான் சுல்தானேற்றின் வெளிநாட்டு அமைச்சர் சையத் பத்ர் அல்புசைதி, ஓமான் மத்திய வங்கியின் ஆளுநர் குழுவின் தலைவர் சையத் தைமூர் பின் அசாத் பின் தாரிக் அல் சையத், இராஜாங்க அமைச்சரும் மஸ்கட் ஆளுநருமான சையத் சவுத் பின் ஹிலால் அல் புசைதி மற்றும் சர்வதேச கிரிக்கட் சபையின் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் ஏனைய பிரமுகர்களும் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவின் போது அமைச்சர் நாமல் ராஜபக்ச ஓமான் அமைச்சர் சையத் தியாசின் பின்  ஹைதம் பின் தாரிக் அல் சயீத் உடன் இருதரப்பு சந்திப்பில் ஈடுபட்டார். கலந்துரையாடலின் போது அவர்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களில் குறிப்பாக கவனம் செலுத்தி பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளை ஆராய்ந்தனர். இரு நட்பு நாடுகளுக்குமிடையிலான விளையாட்டுத் துறையில் விரிவானதொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் இந்த சந்திப்பின் போது பரிந்துரைக்கப்பட்டது.

விஜயம் செய்திருந்த அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கான தொடர் சந்திப்புக்களை மஸ்கட்டில்  உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்தது. ஓமான் சுல்தானேற்றின் போக்குவரத்து, தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சயீத் பின் ஹமூத் பின் சயீத் அல் மாவலி மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு இடையே 2021 அக்டோபர் 18ஆந் திகதி இருதரப்பு சந்திப்பொன்று நடைபெற்றதுடன், அதன்போது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், கடல்சார் இணைப்பு மற்றும் துறைமுக ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.

ஓமான் ஹொக்கி சங்கத்தின் தலைவர் மர்வான் அல் ஜுமாவுடன் ஆக்கபூர்வமான சந்திப்பில்  ஈடுபட்ட அமைச்சர் நாமல் ராஜபக்ச, இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையே கிளப் அளவிலான ஹொக்கி போட்டிகளை இந்த வருடம் ஏற்பாடு செய்வது போன்ற புதிய முயற்சிகளை முன்மொழிந்தார். ஹொக்கி விளையாடும் நாடுகளிடையேயான எதிர்காலத் திறமைகளை அடையாளம் கண்டு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஹொக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளை நான்கு நாடுகளுக்கு இடையில் ஏற்பாடு செய்ய அமைச்சர் முன்மொழிந்தார்.

அரசுக்கு சொந்தமான ஆங்கிலச் செய்தி நாளிதழான 'ஓமான் ஒப்சேர்வர்' க்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ச, ஓமானின் கிரிக்கெட் வளர்ச்சியை பாராட்டியதுடன், மகளிர் தினத்தையொட்டி ஓமான் ரோயல் குதிரைப்படையைச் சார்ந்த பெண்கள் நடாத்திய இசை நிகழ்ச்சியுடன், ஓமான் சுல்தானேற்றில் முதன்முறையாக வண்ணமயமான ஐ.சி.சி. டி 20 உலகக் கிண்ணம் 2021 தொடக்க விழாவை நடாத்திய ஓமான் அரசாங்கத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கைப் பாடசாலை மஸ்கட்டுக்கு விஜயம் செய்த அமைச்சர் நாமல் ராஜபக்ச,  பாடசாலையில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு தேசிய அளவில் வாய்ப்புக்களை வழங்குதல் ஆகியன குறித்து பயனுள்ள கலந்துரையாடல்களை நடாத்தினார்.

கொழும்புத் துறைமுக நகர விஷேட பொருளாதார வலயம் உட்பட இலங்கையில் காணப்படும்  முதலீட்டு வாய்ப்புக்களை ஊக்குவிக்கும் நோக்கில் சாத்தியமான முதலீட்டாளர்களுடன் ஹோர்முஸ் கிராண்ட் மஸ்கட்டில் மதிய உணவுக் கூட்டத்தையும் தூதரகம் ஏற்பாடு செய்தது.

ஓமான் சுல்தானேற்றின் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன் தம்மை அறிமுகப்படுத்திக்கொள்வதற்காக, ஓமான் தேசிய அருங்காட்சியகத்திற்கான சுற்றுப்பயணமொன்றும் அமைச்சர் மற்றும் தூதுக்குழுவினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ஆண்டு இலங்கைக்கும் ஓமான் சுல்தானேற்றுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளைத்  தாபித்த 40வது ஆண்டு நிறைவு விழாவிற்று இணையாக தற்செயலாக இடம்பெறுகின்ற, முதல் முறையாக ஓமானில் நடைபெறும் 2021 டி 20 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதி தகுதித் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்தமைக்காக, ஓமானின் கலாச்சார, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சையத் தியாசின் பின் ஹைதம் பின் தாரிக்கிற்கு தூதுவர் அமீர் அஜ்வத் தனது உண்மையான பாராட்டுக்களைத் தெரிவித்தார். இந்த உயர்மட்ட விஜயம், இரு நாடுகளுக்கும் இடையேயானஇருதரப்பு உறவுகளை எதிர்வரும் ஆண்டுகளில் புதிய உயரத்திற்கு உயர்த்துவதற்கு ஒரு ஊக்கியாக செயற்படும் என தூதுவர் அமீர் அஜ்வத் குறிப்பிட்டார்.

இலங்கைத் தூதரகம்,

மஸ்கட்

2021 அக்டோபர் 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close