மூலோபாய ஆய்வுகளுக்கான பிராந்திய மையம் ஏற்பாடு செய்த தெற்காசியாவிற்கான கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கங்கள் - சிவில் சமூக முன்னோக்கு குறித்த ஜி.பி.பி.ஏ.சி - பட்டறையில் வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆற்றிய சிறப்பு உரை - 2020 நவம்பர் 26

மூலோபாய ஆய்வுகளுக்கான பிராந்திய மையம் ஏற்பாடு செய்த தெற்காசியாவிற்கான கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கங்கள் – சிவில் சமூக முன்னோக்கு குறித்த ஜி.பி.பி.ஏ.சி – பட்டறையில் வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆற்றிய சிறப்பு உரை – 2020 நவம்பர் 26

ஆயுபோவன்,

பேராசிரியர் காமினி கீரவெல்ல அவர்களே, இன்று காலை உங்களுடன் இருப்பதற்கு என்னை அழைத்தமைக்காக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மூலோபாய ஆய்வுகளுக்கான பிராந்திய மையத்துடன் இணைந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். நீங்கள் 'தெற்காசியாவில் கோவிட்-19 இன் தாக்கம்' எனும் மிகவும் பொருத்தமான தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.

நீங்கள் எவ்வாறு வரையறுக்கின்றீர்கள் என்பதைப் பொறுத்து, ஏறக்குறைய 1.7 பில்லியன் மக்கள் வசிக்கும் தெற்காசியப் பிராந்தியமானது, அதிக ஆற்றலைக் கொண்டுள்ளதுடன், வேகமாக வளர்ந்து வரும், எதிர்காலம் நிறைந்த பகுதியாகும். இந்தப் பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்கு உண்மையில் தடையாக இருக்கும் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவசியம். தற்போதைய சூழலில், வைரஸ் கிட்டத்தட்ட முழு உலகத்தையும் மூழ்கடித்துள்ளமையினால், கோவிட்-19 தொற்றுநோய் இப்பகுதிக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கலந்துரையாடல் சிவில் சமூக முன்னோக்குகளில் தெற்காசியாவிற்கான கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கங்களை விரிவாக விளக்குகின்றது. கோவிட்-19 பரவலின் ஆரம்பத்தை நாம் உற்று நோக்கினால், உண்மையில், கோவிட் தெற்காசியாவிற்குத் தாமதமாக வந்தது, ஆனால் அது தெற்காசியாவை கடுமையாகத் தாக்கியது. இந்த சூழலை நன்கு புரிந்து கொள்ள, புள்ளிவிவரங்களை பகுப்பாய்வு செய்வது அவசியம். இன்று இலங்கை தொடர்பான கோவிட்-19 புள்ளிவிவரங்களில் கவனம் செலுத்தும்போது, எண்ணிக்கை கடினமானது, எனினும் மேலும் சற்று பகுப்பாய்வு செய்தால், குறைந்தபட்ச சதவீதங்களைக் கொடுப்பதன் மூலம், நிலைமை அவ்வளவு இருண்டதாக இல்லை எனத் தெரிகின்றது.

2020 நவம்பர் 26ஆந் திகதி காலை நிலவரப்படி, இலங்கையில் மொத்தம் 20,967 கோவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த எண்ணிக்கையில், வெளிநாட்டிலிருந்து வந்த தொற்றாளர்கள் 7.7% மட்டுமே என்பதை முன்னிலைப்படுத்த வேண்டியதுடன், இது வெளிநாட்டிலிருந்து வந்த தொற்றாளர்களின் மிகக் குறைந்த சதவீதம் மட்டுமே இலங்கையில் பதிவாகியுள்ளது என்பதை நிரூபிக்கின்றது. இலங்கை முன்னர் மற்றும் இப்போது சில கோவிட் தொடர்பான கொத்தணிகளை அனுபவிக்கின்றது. அவற்றில் சிலவற்றை ஒழுங்காக பெயரிட்டால், அவை கடற்படைக் கொத்தணி, கந்தக்காடு கொத்தணி, மினுவாங்கொடை மற்றும் பேலியாகொட கொத்தணிகள் ஆகும். இருப்பினும், இந்தக் கொத்தணிகளில், துரதிர்ஷ்டவசமாக, மினுவாங்கொடை மற்றும் பேலியாகொட கொத்தணிகள் வேகமாகப் பரவி வருவதால் மொத்த பாதிக்கப்பட்ட விகிதம் 85.1% ஆக உயர்வடைந்துள்ளது.

கோவிட்டின் ஆரம்பக் கட்டத்தில், இலங்கை அதை மிகச் சிறப்பாக நிர்வகித்தது. இருப்பினும், இரண்டாவது அலை தாக்கியபோது, கண் சிமிட்டும் தருணத்தில் தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்தது. கோவிட் வளைவானது எப்போதும் சுத்தியலையும் நடனத்தையும் செய்வதாக கூறப்படுகின்றது. இந்தச் சூழலில், ஆரம்பத்தில் இலங்கையால் சுத்தியல் போல் பலத்தினால் அதைக் குறைக்க முடிந்தது, ஆனால் இப்போது அதன் நடனம் நடைபெறுகின்றது. இந்த நடனமாடும் கோவிட் நிலைமையை மீண்டும் ஒரு சுத்தியல் நிலைக்குக் கொண்டு வர இலங்கை அரசாங்கம் பொறுப்பான அதிகாரிகளுடன் இரவும் பகலும் உழைத்து வருகின்றது.

எண்ணிக்கைகளை மேலும் பகுப்பாய்வு செய்யும் போது, ஏனைய புள்ளிவிவரங்களில் கவனம் செலுத்தப்படுகின்றது. இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் மொத்த குணப்படுத்துகை விகிதம் 74% ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும். கோவிட்டைப் பொறுத்தவரை இறப்பு விகிதம் குறித்தும் கவனம் செலுத்தப்படுவதுடன், அது 0.4% மட்டுமேயாகும் - இது நிச்சயமாக ஒரு சதவீதத்தில் கூட இல்லை. நிச்சயமாக, கோவிட் தொடர்பான சிக்கல்களால் இலங்கை குறைவான இறப்புகளைக் கண்டது, அவை தடுத்து நிறுத்த முடியாதவை. மேலும், தற்போதுள்ள மருத்துவமனைகளில், சுமார் 5400 தொற்றாளர்களுக்கு இலங்கை சிகிச்சை அளிக்கின்றது. இதன் பின்னணியில் உள்ள ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ஐ.சி.யூ. படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்களில் 02 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர், இது 0.0095% சதவீதத்தைக் குறித்து நிற்கின்றது.

தெற்காசியப் பிராந்தியத்தை ஆராயும்போது, இலங்கையின் மூலோபாயத்தைக் கருத்தில் கொள்வது அவசியம். இலங்கையின் மூலோபாயத்தின் மேல் தூண் 'தடுப்பு' ஆகும். இலங்கைத் துறைமுகங்களுக்குள் உள் நுழைவது தடைசெய்யப்பட்டதுடன், கோவிட் நாட்டிற்குள் வருவதைத் தடுப்பதில் அதிக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. கோவிட் சமூகத்திற்குப் பரவாமல் தடுப்பதற்கு உடனடியாக எவ்வாறு செயற்பட வேண்டும் என இலங்கை அரசாங்கம் பொறுப்பான அதிகாரிகளுடன் சேர்ந்து திட்டமிட்டது. பல நாடுகள் கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தை கைவிட்டு, அதை சொந்தமாக குடியேற அனுமதித்தாலும், இலங்கை தனது குடிமக்களுக்காக 'உயிர் முக்கியமானது' என்ற தாரக மந்திரத்துடன் நின்று கடினமாக உழைத்தது. உயிர் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற உண்மையை இலங்கை புரிந்துகொண்டு இதை ஒரு மனிதாபிமானப் பணியாக மேற்கொண்டது.

மேலும், இலங்கையின் மூலோபாயம் '3Tகள்' ஐ அடிப்படையாகக் கொண்டது, அதாவது சோதனை, தடமறிதல் மற்றும் சிகிச்சை. சோதனை பற்றி குறிப்பிட்டால், ஆரம்பக் கட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் 30 - 40 சோதனைகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன, எனினும் ஒரு வாரத்திற்குள், இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 300 ஆக அதிகரித்ததுடன், இப்போது அது ஒரு நாளைக்கு சுமார் 15,000 முதல் 20,000 வரை சென்றுள்ளது. தடமறிதல் பற்றி குறிப்பிடுகையில், இலங்கை தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தவில்லை. மனித உளவுத்துறையின் அடிப்படையில் தான் தடமறிதல் நடாத்தப்பட்டதுடன், பொலிஸ், பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை பற்றி குறிப்பிடுகையில், கோவிட்டுக்கு முறையான சிகிச்சையோ அல்லது மருந்துகளோ இல்லை என்பது வெளிப்படையான உண்மையாகும். இருப்பினும், அதிர்ஷ்டமான உண்மை என்னவென்றால், கோவிட் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மக்கள், இந்த விடயத்தில் எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லாமல் உயிர் பிழைக்கின்றார்கள், வெளியே வருகின்றார்கள்.

நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் தொற்றுநோய்களைக் குறைப்பது முக்கியம் என்ற அடிப்படையில் இலங்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. கோவிட்டின் ஆரம்பக் கட்டத்தில் சுமார் 7 - 8 மாதங்களுக்கு இலங்கை மிகவும் சிறப்பாக செயற்பட்டது. இதற்கிடையில், பாதிக்கப்படக்கூடிய குழுக்கள், சமூகங்கள், பகுதிகளை அடையாளம் காணும் பணியில் இலங்கை ஈடுபட்டதுடன், அவர்களை இலக்கு வைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. கோவிட்-19 ஒரு தொற்றுநோய் ஆதலால், இந்த திடீர் தொற்றுநோய்க்கு எதிராக போராடுவதற்காக சுகாதார அமைப்பில் தனது திறன்களையும் திறமைகளையும் பொது சுகாதார அவசரநிலை மற்றும் சாத்தியமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் இலங்கை மேம்படுத்தியது. பின்னர், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளிலிருந்து விலகாமல் இலங்கை உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளைப் பின்பற்றியது.

இதற்கிடையில், நாடு முடக்கப்பட்ட கட்டத்தில் இருந்தபோது இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தன. உணவு, மருந்து, நிதி உதவி மற்றும் நிவாரணப் பொதிகளின் விநியோகத்தை இலங்கை எப்படியாவது சமாளித்தது. வர்த்தகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் மூடப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கும் போது, இலங்கை அரசாங்கத்தின் உடனடியான கவனம் இணையவழிக் கற்றல் மற்றும் வீட்டிலிருந்து பணியாற்றுதல் போன்றன மீது ஈர்க்கப்பட்டது. அரச மற்றும் தனியார் துறையில் உள்ள பெரும்பாலான பணியிடங்களில், சுமார் 25% மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்தல் என்ற இந்த கருத்தாக்கத்துடன் பணிபுரிய பௌதிக ரீதியாக ஏற்பாடுகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பி அழைத்து வருவதில் இலங்கை பெரும் முயற்சிகளை முன்னெடுத்தது. இதுவரை, வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உதவியுடன் 126 வெவ்வேறு நாடுகளில் இருந்து சுமார் 46,500 இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்து வரும் பணிகளை இலங்கை கையாண்டுள்ளதுடன், இது உண்மையில் ஒரு சிறிய நாட்டிற்குக் கிடைத்த மிகப்பெரிய சாதனையாகும். அத்துடன், பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையான மருந்துகள், பரிசோதனைக் கருவிகள் மற்றும் தேவையான அனைத்தையும் பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. துரதிர்ஷ்டவசமாக, குறிப்பாக கோவிட் சிகிச்சைக்கு மருந்துகளை உற்பத்தி செய்யும் பணியில் இலங்கை ஈடுபடவில்லை.

கோவிட்-19 ஆல் முன்வைக்கப்படும் பல பரிமாண அச்சுறுத்தல் மற்றும் தெற்காசியாவிற்கான அதன் உள்ளார்ந்த தன்மையை மையமாகக் கொண்டு, கோவிட்-19 எமது திறன்களுக்கு, குறிப்பாக சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் எமது உணவு உற்பத்திப் பகுதிகளிலும் பெரும் சவால்களை அளித்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

பிராந்தியத்தின் பொருளாதாரங்களில் கோவிட்-19 இன் பேரழிவு மிகுந்த தாக்கங்கள் நீடிக்கும் நிலையில், தெற்காசியா 2021ஆம் ஆண்டில் அதன் மிக மோசமான மந்தநிலையில் மூழ்குவதற்குத் தொடங்குகின்றது. இதன் விளைவாக, நாளாந்த ஊதியம் பெறும் முறைசாரா தொழிலாளர்கள் ஆபத்தில் உள்ளதுடன், மில்லியன் கணக்கான தெற்காசியர்கள் தீவிர வறுமையினால் வீழ்ச்சியடையலாம். இலங்கை சுற்றுலாத்துறையில் அதிக வருமானம் ஈட்டும் ஒன்றான ஹோட்டல் தொழில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இப்போது ஒரு மெய்நிகர் பூஜ்ஜிய நிலைமைக்கு வந்துள்ளது. மேலும், நாட்டின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்கள் அவற்றின் செயன்முறையை இலகுவாக்க வேண்டியிருந்தது.

ஒருவர் தனது வாழ்நாளில் ஒருபோதும் இத்தகையதொரு தொற்றுநோயை அனுபவித்திருக்காததால், இது ஒரு வகையான ‘உளவியல் சார்ந்த அதிர்ச்சியாக’ அமைவதுடன், இது இந்த கோவிட்-19 தொற்றுநோயின் மோசமான முடிவுகளில் ஒன்றாகும். இதேபோல் நினைவு கூர்ந்தால், 2004ல் இலங்கை சுனாமியால் பாதிக்கப்பட்டபோது மக்களுக்கு இந்த வகையான அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த மன அளவிலான அதிர்ச்சியின் காரணமாக, மக்கள் அமைதியற்றவர்களாகவும், கிளர்ச்சியுடனும், நம்பிக்கைகளை இழந்தவர்களாகவும் செயற்படுகின்றார்கள். இந்த எதிர்மறை மனப்பான்மை ஒருவரின் மனதில் முன்னேறுவதற்கான பார்வையை முடக்குவதுடன், அது நாட்டின் சமூக முன்னேற்றத்தைப் பெரிதும் பாதிக்கும்.

மறுபுறம், சிலர் கோவிட் தொற்றுக்குள்ளான நபர்களுக்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்து, அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்குவதற்கு முனைகின்றார்கள். அடிப்படை ஊடக நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு, உண்மையில் துன்பப்படுகிற மக்கள் மீது இந்த வகையான உளவியல் தாக்கத்தை உருவாக்கியதற்கு ஊடகங்கள் உண்மையில் குற்றம் சாட்டப்பட வேண்டும். வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரிடமிருந்தும் ஆதரவும் நல்ல பிரார்த்தனையும் தேவை, மாறாக அவர்கள் களங்கப்படுவதை விரும்பவில்லை.

அனைவரின் மனதிலும் உள்ள கேள்வி 'கோவிட் எல்லாவற்றையும் மாற்றுமா?' என்பதாகும். உலகமயமாக்கல் பயணத்தில் உலகம் இருந்தது, ஆனால் இப்போது 'ஸ்லோபலைசேஷன்' பற்றி கேள்விப்படுகிறோம். உலகமயமாக்கல் மற்றும் ஸ்லோபலைசேஷன் மற்றும் சர்வதேசமயமாக்கலுக்கு எதிரான தேசியவாதம் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் திறன்களை சந்தேகிப்பது பற்றிய விவாதங்கள் அதிகம் கேட்கப்படுகின்றன. உலக சுகாதார தாபனம் முன்னணி சக்திகளால் விமர்சிக்கப்பட்டதுடன், அவர்களின் நிதி திரும்பப் பெறப்பட்டது என்பது அனைவரும் அறிந்த உண்மை. உலகம் வேறுபட்ட சூழ்நிலையை எதிர்கொள்கின்றது, ஒருவேளை விடயங்கள் மாறும். உலக விநியோகச் சங்கிலிகளுக்கு உலக அளவில் பாரிய அளவிலான இடையூறு ஏற்படுகின்றது. விமானத் துறையில் ஏற்படும் பாதிப்பு மிகப்பெரியது. இப்போது, முழு உலகமும் தடுப்பூசி கிடைக்கப்பெறும் வரை காத்திருக்கின்றது. இந்தத் தடுப்பூசி மருந்து மாஃபியா என்று அழைக்கப்படுபவர்களால் பிடிக்கப்படுமா அல்லது ஆதிக்கம் செலுத்துமா என்பது சந்தேகமே. இலங்கை போன்ற குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு இந்தத் தடுப்பூசி மலிவான விலையில் கிடைத்தல், இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு இந்த தடுப்பூசி கிடைத்தல் தொடர்பில் நாங்கள் அதை உற்பத்தி செய்யாததால் நம் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றது.

இந்தத் தடுப்பூசிகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, ரஷ்யா மற்றும் சீனாவில் உருவாக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. எனவே, வரவிருக்கும் நேரத்தில் தடுப்பூசியுடன் என்ன நடக்கும் என்பது உண்மையில் ஒரு கேள்வி. மேலும், இந்தத் தடுப்பூசி கோவிட்-19 ஐ குணப்படுத்துமா அல்லது தடுக்குமா என்பது ஒரு கருதுகோள் ஆகும். இந்த சிகிச்சையின் பின்விளைவுகளைக் காண சிறிது நேரம் எடுக்கும் என்பதால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தடுப்பூசியின் வெற்றியை உலகம் இன்னும் காணவில்லை.

கோவிட் எம்மை குறிப்பாக எமது பொருளாதார மாதிரியை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளதுடன், பொது சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பான எமது அணுகுமுறைகளை மறுபரிசீலனை செய்யும்படி கட்டாயப்படுத்தியுள்ளது. இது ஒரு மிக முக்கியமான அம்சமாவதுடன், இலங்கை வேறு எந்த நாட்டையும் போல ஒரு மாற்றத்தை கடந்து வருகின்றது. இங்கே, வெளிநாட்டு அமைச்சு மற்றும் வெளியுறவுகளின் தோள்களில் இருக்கும் பொறுப்பு என்னவென்றால், சர்வதேச அரசியல் இராஜதந்திரத்தை கடைபிடிக்கும் போது பொருளாதார இராஜதந்திரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகும். ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டின் அபிவிருத்தி அதிக எதிர்பார்ப்புக்களில் இருப்பதால் இலங்கை பொருளாதார இராஜதந்திரத்திற்கு தனது மாற்றத்தை மையப்படுத்த விரும்புகின்றது. இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்திலிருந்து ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு மாற்றம் தேவை. எமது உற்பத்தியையும், எமது தொழில்களையும் மாற்றுவதற்கான கடுமையான தேவைக்கு கவனம் செலுத்தப்படுகின்றது. ஆரம்பத்தில் இலங்கை எந்தவொரு தனிப்பட்ட பாதுகாப்புக் கருவியையும் தயாரிக்கவில்லை, ஏனெனில் எமக்கு எந்த அவசியமும் இருக்கவில்லை. ஆனால், இப்போது தனிப்பட்ட பாதுகாப்புக் கருவிகளை உற்பத்தி செய்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் செயற்பாட்டில் இலங்கை ஈடுபட்டுள்ளது. எனவே, நாம் மாற வேண்டும் என நினைப்பதற்கு கோவிட் எமக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

விவசாயத்தைப் பற்றி பேசுகையில், இலங்கை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது. இந்த கோவிட் தொற்றுநோயால், இந்த ஆண்டு இலங்கையில் கூடுதலாக 400,000 ஹெக்டெயார் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மாதங்களில் ஒரு சிறந்த அறுவடை எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை விவசாயம் அடிப்படையிலான, ஏற்றுமதி சார்ந்த, பொருளாதார மாதிரியில் கவனம் செலுத்துகின்றது.

இது போன்ற தொற்றுநோய் நிலைமைகளில் சிவில் சமூகம் என்ன செய்ய முடியும் என்பதில் இப்போது கவனம் செலுத்துகின்றேன். சிவில் சமூகம், சமூகப் பின்னடைவை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளதுடன், இது முதலாவது உண்மையாக உள்ளது. இரண்டாவதாக, சமூக, அரசியல் மற்றும் புவிசார் அரசியல் தாக்கத்தை எவ்வாறு தணிப்பது என்பது சிவில் சமூகத்தின் பங்கு அல்லது பணியாகும். கோவிட் காரணமாக மக்களை பிளவு படுத்தாமல், நீங்கள் எவ்வாறு அவர்களை ஒன்றிணைக்கின்றீர்கள் என்பது மூன்றாவதாகும்.

தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை அடையாளம் காண்பது குறித்து குறிப்பிட்டால், சிறந்த நடைமுறைகளின் மாதிரிகள் பல்வேறு நாடுகளிலிலும் காணப்படுகின்றன. சிறந்த நடைமுறைகளை ஏனைய நாடுகளிடையே பகிர்ந்து கொள்ள வேண்டும். நாம் செயற்படுத்தக்கூடிய சிறந்த நடைமுறையை அடையாளம் காண வேண்டியதுடன், சமூகத் திறன்களை மேம்படுத்தவும் வேண்டும். எந்தவொரு நாட்டிலும், எந்த சமுதாயத்திலும் சிவில் சமூகத்திற்கு அதிக திறன் உள்ள அதே வேளை, இந்த கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு இந்த திறன்களை நாம் திரட்ட வேண்டும்.

அரசுக்கும் பொதுத்துறைக்கும், சிவில் துறைக்கும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான முயற்சிகளை ஒத்திசைப்பது சிவில் சமூகம் ஈடுபடக்கூடிய மற்றொரு முக்கிய வகிபாகமாகும். சிவில் சமூகம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் இவை. இலங்கையில் கோவிட்-19 இன் பரிணாம வளர்ச்சியில் பெறப்பட்ட கருத்து மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் இந்த உண்மைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இறுதியாக, ஒரு பிராந்தியமாக, இரண்டு விடயங்களை மேம்படுத்துவது மிக முக்கியமானது - ஒன்று உணவுப் பாதுகாப்பு, மற்றொன்று தெற்காசியப் பிராந்தியத்திற்கான மருந்துப் பாதுகாப்பு. மீண்டும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதும், பிராந்தியத்தில் முரண்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதும் முக்கியமாகும். தற்போது நாங்கள் நீண்ட காலமாக எல்லை மோதலில் சிக்கியுள்ளோம். இப்போதே, கோவிட் போரை விட அதிக எண்ணிக்கையில் மக்களைக் கொன்று வருவதால், இது மோதல்களினாலான இழப்பை விட அதிகமானதாகும். ஆனால், நாங்கள் இன்னும் தெற்காசியப் பிராந்தியத்தில் முரண்பட்ட பிரச்சினைகள் பற்றி பேசுகின்றோம். உடனடியான கவனம் தேவைப்படும் மோசமான நிலை எது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இறுதி சிந்தனை என்னவென்றால், கோவிட்-19 ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கின்றது. ‘வல்லரசு என்றால் என்ன?’ ஒரு வல்லரசு என்பது இராணுவ ரீதியாக வலிமை மிக்க, பொருளாதார ரீதியாக சக்தி வாய்ந்த அல்லது சர்வதேச அளவில் சக்திவாய்ந்த நாடு என்ற அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளதா அல்லது அது தனது சொந்த குடிமக்களின் உயிரைப் பாதுகாக்கக்கூடிய நாடா? இந்தச் சூழலில், இலங்கை உண்மையில் ஒரு வல்லரசாகும்.

நன்றி

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close