மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் இலங்கைக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தூதுவர்களுடன் உயர்ஸ்தானிகர் மொரகொட கலந்துரையாடல்

 மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் இலங்கைக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தூதுவர்களுடன் உயர்ஸ்தானிகர் மொரகொட கலந்துரையாடல்

புதுடில்லியைத் தளமாகக் கொண்ட ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற தூதரக அதிகாரிகளுடனான ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கான உயர்ஸ்தானிகராலயத்தின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியத் தூதரகங்களின் தூதுவர்களுடன் இன்று (2) உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அஸர்பைஜான், பஹ்ரைன், கம்போடியா, கஸகஸ்தான், கொரிய மக்கள் குடியரசு, மங்கோலியா, சிரியா, தஜிகிஸ்தான், லெபனான், கிர்கிஸ்தான் மற்றும் பிஜி ஆகிய நாடுகளின் தூதரகத் தலைவர்கள் இந்த ஊடாடும் அமர்வில் கலந்து கொண்டனர்.

சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இலங்கையின் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதும், ஒத்துழைப்பிற்கான புதிய பகுதிகளை ஆராய்வதும் இந்த ஈடுபாட்டின் நோக்கமாகும். உயர்ஸ்தானிகர் மொரகொட 11 தூதர்களைக் கொண்ட குழுவை வரவேற்றதுடன் அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக உறுதியளித்தார். நாட்டின் அண்மைய பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கமளித்த அவர், இக்கட்டான காலகட்டத்தில் வழங்கப்பட்ட உதவிகள் மற்றும் ஊக்குவிப்புக்களுக்கு சர்வதேச சமூகத்திற்கு நன்றி தெரிவித்தார். வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஆகியன இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு உதவும் மூன்று முக்கிய துறைகளாகும் என அவர் சுட்டிக்காட்டினார். இந்தக் கலந்துரையாடலில் மீன்பிடி, இணைப்பு மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளதாகவும், 2023 பெப்ரவரி 04ஆந் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள கொண்டாட்டங்களில் இராஜதந்திரப் பிரதிநிதிகள் பங்கேற்பதை ஊக்குவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். புதிதாக நியமிக்கப்பட்ட உயர் ஸ்தானிகர்கள் ஃ தூதுவர்களுக்கான நற்சான்றிதழ் விழாவும் இதே காலகட்டத்தில் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயர்ஸ்தானிகர் மொரகொட இலங்கைக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற புதுடில்லியைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரப் பிரதிநிதிகளின் தூதுவர்களுடன் மேற்கொண்ட ஏழாவது அமர்வு இதுவாகும். முந்தைய சந்தர்ப்பங்களில் அவர் ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் மற்றும் ஆபிரிக்கப் பிராந்தியங்களின் தூதுவர்களுடன் கலந்துரையாடினார்.

ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற 94 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் இடையிலான முக்கிய ஒருங்கிணைப்புப் புள்ளியாக புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் செயற்படுகின்றது.

 

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புதுடில்லி

 

2022 டிசம்பர் 05

Please follow and like us:

Close