பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகம், பிரேசிலில் உள்ள பேட்டியோ பிரேசில் ஷொப்பிங் சங்கிலியுடன் இணைந்து முதன்முறையாக இலங்கை வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வை பிரேசிலியாவில் உள்ள பேட்டியோ பிரேசில் ஷொப்பிங் மோலில் 2022 பிப்ரவரி 19ஆந் திகதி நடாத்தியது.
பேடியோ பிரேசில் ஷொப்பிங் பிரேசிலில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகங்களில் ஒன்றாகும். இலங்கைத் தேயிலை, கறுவா மற்றும் சுவையூட்டிப் பொருட்கள், தேங்காய்ப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், மேசை விரிப்புகள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் போன்ற பல்வேறு வகையான இலங்கைத் தயாரிப்புக்கள் இலங்கைக் கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
800 க்கும் மேற்பட்ட பிரேசிலியர்கள் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட கூடத்துக்கு விஜயம் செய்ததுடன், சிலோன் தேயிலை மற்றும் இலங்கை விரல் உணவுகளின் பல்வேறு சுவைகளை சுவைக்கும் வாய்ப்பைப் பெற்றனர். அதே சமயம், இலங்கையின் சுற்றுலாத் துறையின் பன்முகத்தன்மை குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கப்படுத்தப்பட்டது. பங்கேற்பாளர்களிடையே இலங்கை சுற்றுலா பற்றிய தகவல்களை போர்த்துகீசிய மொழியில் வழங்கும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், இலங்கை சுற்றுலா தொடர்பான வீடியோக்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
பிரேசிலியாவில் உள்ள பாட்டியோ பிரேசில் ஷொப்பிங் மோலின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி மற்றும் உயர் நிர்வாகத்தினர், வர்த்தக அறைகளின் பிரதிநிதிகள், சுற்றுலா நடத்துபவர்கள், பிரேசிலியாவில் உள்ள இராஜதந்திரத் தூதரகங்களின் வர்த்தக அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் நிகழ்வின் தொடக்கத்தில் இலங்கைத் தூதுவர்களுடன் இணைந்து கொண்டனர்.
பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவர் சுமித் தசநாயக்க தனது ஆரம்ப உரையில், பிரேசிலிய தொழில்முனைவோருக்கு இலங்கையில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையின் சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்தார். பிரேசில் தேசமானது தனித்துவமான சுற்றுலா அனுபவங்களை வழங்குவதால், இலங்கையை தமது அடுத்த பயண இடமாகத் தெரிவு செய்யுமாறு பிரேசில் பொதுமக்களிடம் தூதுவர் சுமித் தசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். பேடியோ பிரேசில் ஷாப்பிங்கின் அகஸ்டோ பிராண்டோ, இந்நிகழ்வை இணைந்து நடத்துவது தனது நிறுவனத்திற்குக் கிடைத்த பெருமை மற்றும் பாக்கியம் என்றும், பிரேசிலியாவில் உள்ள சூப்பர் மார்க்கெட் சங்கிலியில் இலங்கைத் தயாரிப்புக்கள் ஊக்குவிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
பிரேசிலிய வர்த்தக சமூகம் இலங்கையின் கூட்டாண்மைகளைக் கண்டறியும் கோரிக்கைகள் தூதரகத்தின் வர்த்தகப் பிரிவினால் உரிய காலத்தில் ஏற்பாடு செய்யப்படும்.
இலங்கைத் தூதரகம்,
பிரேசிலியா
2022 பிப்ரவரி 24