இன்று (16/11) பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்ற 21வது ஐயோரா அமைச்சர்கள் கூட்டத்தின் பக்க அம்சமாக, பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல்லுடன் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கலந்துரையாடினார்.
இலங்கை தலைமைப் பொறுப்பை வகித்த போது, பிம்ஸ்டெக் சாசனத்தை இறுதி செய்வதிலும், பிம்ஸ்டெக்கின் எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் வகையில் உறுப்பு நாடுகளுக்கு இடையே வரையறுக்கப்பட்ட ஒத்துழைப்புக்கான பகுதிகளை ஒதுக்கீடு செய்வதிலும், நிறுவனக் கட்டமைப்பிலும் கவனம் செலுத்தியதாக அமைச்சர் பீரிஸ் மீண்டும் வலியுறுத்தினார். 5வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொழும்பில் நேரடிப் பங்கேற்புடன் நடாத்த இலங்கை ஆர்வமாக உள்ளதாகவும், கோவிட்-19 தொற்றுநோயின் விளைவுகளைத் தணிக்கும் முகமாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான தடுப்பூசித் திட்டத்தைக் கருத்தில் கொண்டு, உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து கூட்டத்திற்கான திகதி அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2021 டிசம்பர் 5 முதல் 9 வரை இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான அழைப்பை விடுத்தமைக்காக நன்றிகளைத் தெரிவித்த செயலாளர் நாயகம், தனது விஜயத்தின் போது உயர் பிரமுகர்கள் மற்றும் வரிசை முகவர்களைச் சந்தித்து விஞ்ஞானம், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் துணைத் துறைகளான சுகாதாரம் மற்றும் மனித வள அபிவிருத்தி போன்ற இலங்கையின் கீழ் வரும் முன்னணித் துறைகள் குறித்து கலந்துரையாடுவதற்குத் திட்டமிட்டுள்ளார். வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் சில வரிசை நிறுவனங்களைச் சந்தித்து பிராந்தியத்திற்கு நன்மை பயக்கும் துறைகளுக்கான செயற்றிட்டங்களை வகுத்து வருவதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.
டாக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பேராசிரியர் எஸ்.டி.எஸ். செனவிரத்ன, வெளிநாட்டு அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான பதில் பணிப்பாளர் நாயகம் (பல்தரப்பு) அன்சுல் ஜான் மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ருவந்தி தெல்பிட்டிய ஆகியோர் வெளிநாட்டு அமைச்சருடன் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 நவம்பர் 16