பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல் வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்து இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் குறித்து விளக்கினார். பிம்ஸ்டெக்கின் தலைவராக இலங்கை 2018 முதல் திகழ்வதுடன், பிராந்திய அமைப்பின் இலக்குகளை மேலும் மேம்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
தனது விஜயத்திற்கு ஆதரவளித்த இலங்கை அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்த பொதுச்செயலாளர், பிம்ஸ்டெக் சாசனத்தை இறுதிப்படுத்தல் மற்றும் அமைப்பின் அடித்தளமாக விளங்கும் உறுப்பு நாடுகளுக்கிடையே வரையறுக்கப்பட்ட ஒத்துழைப்புக்கான பகுதிகளை ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்டவற்றில் இலங்கை தனது பதவிக்காலத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ளதாகத் தெரிவித்தார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 5வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை இலங்கை நடாத்தவுள்ள அதே வேளை, தலைமைப் பதவி தாய்லாந்திடம் ஒப்படைக்கப்படும்.
சுகாதாரம் மற்றும் மனித வள அபிவிருத்தி ஆகிய உப துறைகளுடன் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களுக்கான முன்னணி நாடாக இலங்கை இருப்பதால், முக்கிய துறைகளான சுகாதார அமைச்சர் கலாநிதி. கெஹலிய ரம்புக்வெல்ல, சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் கலாநிதி. சீதா அறம்பேபொல மற்றும் பதில் வெளியுறவுச் செயலாளர் ஏ.எம்.ஜே. சாதிக் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளடங்கலானவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது செயலாளர் நாயகம் வெளிநாட்டு அமைச்சருக்கு விளக்கினார்.
செயலாளர் நாயகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்தித்ததுடன், கோவிட்-19 இன் தாக்கத்தைக் குறைத்தல் மற்றும் தடுப்பூசி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றிலான இலங்கை அரசாங்கத்தின் சாதனைகளைப் பாராட்டினார். பிராந்தியத்தில் பொருளாதாரம் புத்துயிர் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இந்தப் பகுதியில் பிம்ஸ்டெக் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார். பிராந்திய மக்களை சென்றடையும் வகையில் அனைத்து உறுப்பு நாடுகளும் தமக்கு வழங்கப்பட்டுள்ள துறைகளின் கீழ் செயற்றிட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ வலியுறுத்தினார்.
தனது விஜயத்தின் போது செயலாளர் நாயகம் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கும் பயணித்து வழிபட்டார்.
மேலதிக செயலாளர் சபருல்லா கான், பதில் பணிப்பாளர் நாயகம் அன்சுல் பானு ஜான் மற்றும் பொருளாதார விவகாரப் பிரிவின் நிறைவேற்று உதவியாளர் கலனி தர்மசேன ஆகியோரும் இந்த விஜயத்தின் போது இணைந்திருந்தனர்.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2021 டிசம்பர் 10