பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது, முன்னணி சீன சுற்றுலா இயக்குனர்கள் மற்றும் முகவர்கள் இலங்கை  சந்தையை இலக்கு வைப்பதற்கு எதிர்பார்ப்பு

 பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது, முன்னணி சீன சுற்றுலா இயக்குனர்கள் மற்றும் முகவர்கள் இலங்கை  சந்தையை இலக்கு வைப்பதற்கு எதிர்பார்ப்பு

சீனாவின் பயணத் துறை சார்ந்த பிரதிநிதிகளை பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுடன் இணைந்து 2021 டிசம்பர் 30ஆந் திகதி நகர மண்டபக் கூட்டத்தில் சந்தித்தது. சுற்றுலா நடத்துநர்கள், முக்கிய சுற்றுலா முகவர்கள் மற்றும் ஊடகப்  பணியாளர்கள் உட்பட 60 அழைக்கப்பட்ட விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை வழங்கும் தனித்துவமான அனுபவங்கள் குறித்த அவர்களது கவனத்தை தூதுவர் கலாநிதி பாலித கொஹொன ஈர்த்தார்.  இலங்கையின் பாரம்பரியமற்ற சுற்றுலா அம்சங்களான சுதேச மருத்துவம், படகோட்டம், நீர்ச் சறுக்கு, பட்டம் விடுதல், மலையேற்றம், பலூனிங், திமிங்கலத்தைப் பார்த்தல், யானை சவாரி மற்றும் சஃபாரி உள்ளிட்ட சாகச வாய்ப்புக்கள் இளம் பயணிகளின் ஆர்வத்திற்காக சிறப்பித்துக் கூறப்பட்டன. இலங்கை ஆண்டு முழுவதும் பசுமையான மற்றும் வெப்பமான காலநிலையால் ஆசீர்வதிக்கப்படுகின்றது.

சீன எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்படும் போது அதிகமான சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பை மேம்படுத்துவதற்காக தூதரகம்  ஏற்கனவே பல சீன விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் அனைத்து முக்கிய சுற்றுலா இயக்குனர்களையும் சந்திப்பதற்கு அவர் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வழங்கும் சுகாதார நெறிமுறைகள் மற்றும் விமான சேவைகள் குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பிராந்திய முகாமையாளர் சிந்தக வீரசிங்க விளக்கினார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சீனாவுக்கான விமானங்களின் எண்ணிக்கையை தேவைக்கேற்ப அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் போது, ஸ்பிரிங் டிரவல் உள்ளிட்ட சுற்றுலா முகவர்கள் இலங்கையின் அழகு குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். உத்தியோகபூர்வ நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர், இலங்கை மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் காணொளிகள் திரையிடப்பட்டன.

பங்கேற்பாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தூதுவர் கலாநிதி பாலித கொஹொன மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்  பிராந்திய முகாமையாளர் சிந்தக வீரசிங்க ஆகியோர் பதிலளித்தனர்.

வாத்திய இசை மற்றும் சீன முன்னணிக் கலைஞரின் நிகழ்ச்சியுடன் விருந்தினர்கள் மகிழ்விக்கப்பட்டனர்.

வெற்றியாளருக்கு இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான இலவச விமானப் பயணச்சீட்டை வழங்கும் வகையிலான அதிர்ஷ்ட ரேஃபிள் போட்டியுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

உள்நாட்டு கிரேக்க உணவகத்தின் மூலம் உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டன.

இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்

2022 ஜனவரி 03

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close