நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவர் ஹிமாலி அருணதிலக்க இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் வாழ்த்துச் செய்தியுடன் 2021 அக்டோபர் 06ஆந் திகதி புதிய வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி. நாராயண் கட்காவை வெளிநாட்டு அமைச்சில் சந்தித்தார். அமைச்சர் பீரிஸ் தனது வாழ்த்துச் செய்தியில், ஆழமான வேரூன்றிய கலாச்சார மற்றும் மத உறவுகளுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான தொடர்புகளை நினைவு கூர்ந்தார்.
பேராசிரியர் பீரிஸுக்கு தனது உண்மையான பாராட்டுக்களைத் தெரிவித்த அமைச்சர் கட்கா, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை அடிக்கோடிட்டுக் காட்டினார். 2015 நிலநடுக்கத்தில் சேதமடைந்த இரண்டு விகாரைகளை புனரமைப்பதற்காக உதவியமைக்காக அவர் இலங்கைக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளிலானஇருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான வணிக ஒத்துழைப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக கட்டுமானம், சுற்றுலா, நீர் மின் மற்றும் இரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஆகிய துறைகளில் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் போன்ற சமீபத்திய மாதங்களில் இலங்கை மற்றும் நேபாளத்தின் தனியார் துறைகளுக்கு இடையிலான ஆக்கபூர்வமான ஈடுபாட்டை தூதுவர் அருணதிலக்க நினைவு கூர்ந்தார்.
கொழும்பு மற்றும் காத்மாண்டுக்கு இடையே நேரடி விமான இணைப்பை முன்னெடுப்பதற்கான முயற்சிகளைப் பாராட்டிய அமைச்சர் கட்கா, சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கு ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸால் இயக்கப்படும் நேரடி விமானம் உதவும் எனக் குறிப்பிட்டார். மக்கள் பரிமாற்றங்கள் மற்றும் அதிகரித்த சுற்றுலாவிற்கு இரு நாடுகளுக்கிடையேயான வரலாற்று ரீதியான பௌத்த உறவுகள் ஊக்கமளிப்பதாக அவர் அடிக்கோடிட்டுக் காட்டி அதே நேரத்தில், லும்பினி இந்த விடயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.
நேபாளத்தின் வெளிநாட்டு அமைச்சின் தெற்காசியப் பிரிவின் இணைச் செயலாளர் திரு. தீர்த்த ராஜ் வாக்லே மற்றும் இலங்கைத் தூதரகத்தின் ஆலோசகர் நிலுஷா தில்மினி ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
இலங்கைத் தூதரகம்,
காத்மாண்டு
12 அக்டோபர் 2021