நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது அமர்வில் பங்குபற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி நாடு திரும்பினார்.
செப்டெம்பர் 24, சனிக்கிழமையன்று நடைபெற்ற பொதுக் கலந்துரையாடலில் உரையாற்றிய அமைச்சர் சப்ரி, அரசியல், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை இலங்கையர்கள் எதிர்கொள்ளும் வெளியக மற்றும் உள்ளக சவால்கள் வழங்குவதாகக் குறிப்பிட்டார். இந்த முயற்சிக்கு சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கைக்கு உதவ வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். சிக்கலான மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நெருக்கடிகளை நாடுகள் தாங்களாகவே செயற்படுவதன் மூலம் தீர்க்க முடியாது என்பதால், சர்வதேச சமூகத்தின் ஒற்றுமை மற்றும் கூட்டு முயற்சி தேவைப்படும் இது, வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம் என அவர் சுட்டிக் காட்டினார்.
தொற்றுநோய் மீட்பு செயற்பாட்டில் இலங்கைக்கான உதவிகளை திரட்டுவதில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆதரவை உறுதி செய்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸை அமைச்சர் சப்ரி சந்தித்தார். 77வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்விற்கான தூதுக்குழுக்களின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட அமைச்சர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார்.
தேசிய அல்லது இன, மத மற்றும் மொழி சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய பிரகடனத்தின் 30வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் கூட்டம், தற்போதைய தலைவரான அசர்பைஜான் குடியரசால் கூட்டப்பட்ட அணிசேரா இயக்கத்தின் அமைச்சர் கூட்டம், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசால் நடாத்தப்பட்ட 77வது குழுவின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் 46வது வருடாந்த கூட்டம் மற்றும் ஆசியாவில் தொடர்பாடல் மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் வெளியுறவு அமைச்சர்களின் முறைசாரா சந்திப்பு உட்பட ஏனைய உயர்மட்டக் கூட்டங்களிலும் அமைச்சர் அறிக்கைகளை வழங்கினார். 2030ஆம் ஆண்டின் நிலையான அபிவிருத்திக்கான நிகழ்ச்சி நிரலை அடைவதில் அதன் உறுப்பினர்களுக்கு இந்த முயற்சி எவ்வாறு சிறப்பாக உதவ முடியும் என்பதை அமைச்சர்கள் கலந்துரையாடிய சீன மக்கள் குடியரசினால் கூட்டப்பட்ட உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சி குறித்த நண்பர்கள் குழுவின் அமைச்சர்கள் கூட்டத்திலும் அவர் இணைந்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் உயர்மட்ட அமர்வின் ஒருபுறம், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் மற்றும் பலதரப்பு மன்றங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து, அமைச்சர் சவுதி அரேபியா, உஸ்பெகிஸ்தான், ஆர்மீனியா, சோமாலியா, காம்பியா, நமீபியா, ஐக்கிய அரபு இராச்சியம், சீனா, குவைத், பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் சூடான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்தார். ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் அமைச்சர் தாரிக் அஹமட் பிரபுவைச் சந்தித்த போது, இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளை வழங்குவதற்கு ஐக்கிய இராச்சியம் உறுதியளித்தது. அமைச்சரை சந்தித்த நேபாள வெளியுறவுச் செயலாளர் பாரத் ராஜ் பௌத்யால், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தின் துணைச் செயலாளர் விளாடிமிர் வொரோன்கோ, அரசியல் மற்றும் அமைதியைக் கட்டியெழுப்பும் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ரோஸ்மேரி டிகார்லோ மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் உதவிச் செயலாளர் கன்னி விக்னராஜா ஆகியோரையும் அமைச்சர் சந்தித்தார். பயங்கரவாத எதிர்ப்பு, சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளில் பரந்த ஐ.நா. அமைப்புடன் இலங்கையின் ஈடுபாட்டை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அமைச்சரைச் சந்தித்த அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளரும், யுஎஸ்எய்ட்டின் பிரதி நிர்வாகியுமான ஐசோபெல் கோல்மேன், இலங்கையின் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான அமெரிக்கா - இலங்கை ஈடுபாடு குறித்து கலந்துரையாடினர்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சப்ரி, முக்கோண பிரதேசத்தில் உள்ள இலங்கை சமூகத்தின் பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றினார்.
அமைச்சர் சப்ரி தலைமையிலான 77வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரக அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம்,
நியூயோர்க்
2022 செப்டம்பர் 29