ஈரானில் கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

 ஈரானில் கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன், ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகம், 2022 செப்டம்பர் 21ஆந் திகதி  தெஹ்ரானில் உள்ள சான்செரி வளாகத்தில் கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. ஈரானில் உள்ள பல்கலைக்கழகங்கள், வெளியுறவு அமைச்சு, உயர்கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுமார் 45 பேர் கலந்து கொண்டனர். இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் கல்வி மற்றும் கலாச்சாரத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், அந்தந்த துறைகளில் கிடைக்கும் வாய்ப்புக்களைப் பரிமாறிக் கொள்வதற்குமான ஒரு தளத்தை உருவாக்குவதே இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.

ஆரம்ப உரையை ஆற்றிய ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் ஜி.எம்.வி. விஷ்வநாத் அபோன்சு, கலந்துகொண்ட பிரமுகர்களை வரவேற்றதுடன், இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கு தூதரகத்துடன்  கைகோர்ப்பதற்கான அவர்களது ஆர்வத்தைப் பாராட்டினார். இலங்கையில் கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் உள்ள வாய்ப்புக்களை எடுத்துரைத்த தூதுவர், இரு நாடுகளினதும் மாணவர்கள், அறிஞர்கள், கல்விமான்கள் மற்றும் கல்விசாரா பிரிவினரிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புகள், தகுதிக்கான அளவுகோல்கள், விண்ணப்பிக்கும் முறை, பாடநெறிக் காலம்,  வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அதிகாரி கெடட்களின் சேர்க்கை மற்றும் ஏனைய தொடர்புடைய விவரங்கள் அடங்கிய ஒரு மெய்நிகர் விளக்கக்காட்சியை துணைப் பதிவாளர் கெமாண்டர் எச்.பி.எச். தீஷன வழங்கினார். பல்கலைக்கழகத்தின் கல்வி பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழ், வெளிநாட்டு மாணவர்கள் செலுத்த வேண்டிய படிப்புகள் தவிர பட்டப்படிப்புகளில் புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான துணைப் பீடாதிபதி பேராசிரியர் ரூடாபே பஹ்ரம்சோல்டானி ஈரானில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மருத்துவம் மற்றும் மருந்துத் துறைகளில் வெளிநாட்டு மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களை  அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் 'பாரசீக மருத்துவப் பாடசாலை' பற்றிய விரிவான விளக்கத்தை அளித்தார். மேலும், ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உயர் கல்வித் துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வகையில் வலையமைப்புக்கள் மற்றும் கூட்டாண்மைகளை கட்டியெழுப்புவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கிடைக்கக்கூடிய பட்டப்படிப்புக்களின் தகவல்களை ஈரானில்  உள்ள பல்கலைக்கழகங்கள், உயர்நிலைப் பாடசாலைகள் மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையில் பகிர்ந்து கொள்வதாகக் குறிப்பிட்ட கல்வித்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல ஈரானிய அறிஞர்கள், ஆர்வமுள்ள மாணவர்கள் இலங்கையில் பொருத்தமான பட்டப்படிப்புகளைப் பின்பற்ற முடியும் எனக் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த இலங்கைத் தூதுவர் அவர்களின் உண்மையான ஆர்வத்தைப் பாராட்டியதுடன், அவர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில்  தமக்கு விருப்பமான பட்டப்படிப்புகளில் இணைய விரும்பும் மாணவர்களுக்கு வசதி செய்ய தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் எப்போதும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஈரான் வெளியுறவு அமைச்சின் நிபுணர் முகமது டெல்தாரி, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக தூதுவர் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, ஈரான் அரசாங்கத்தின் முழுமையான ஆதரவையும் உறுதி செய்தார்.

'இலங்கை-ஈரான்  உறவுகளை' மையப்படுத்தி, வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஒத்துழைப்பின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சியின் அதிதியாக கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அறிஞரான கலாநிதி சமீர் கரீம் கலந்து கொண்டார்.

தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர் தேநீர் நிகழ்வும் அழைக்கப்பட்டவர்களுக்கு  வழங்கப்பட்டது.

இலங்கைத் தூதரகம்,

தெஹ்ரான்

2022 செப்டம்பர் 29

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close