'நவுருஸ் சீசன்-2023 இல் அற்புதமான இலங்கைக்கு விஜயம்' - தெஹ்ரானில் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சி

‘நவுருஸ் சீசன்-2023 இல் அற்புதமான இலங்கைக்கு விஜயம்’ – தெஹ்ரானில் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சி

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் ஈரானில் உள்ள விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா முகவர் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம், 2022 நவம்பர் 07ஆந் திகதி சான்சரி வளாகத்தில் 'நவுருஸ் சீசன் - 2023 (பாரசீக புத்தாண்டு) இன் போது அற்புதமான இலங்கைக்கு விஜயம்' என்ற சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

ஈரானியப் பயணிகளிடையே ஒரு சாத்தியமான சுற்றுலாத் தலமாக இலங்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் ஈரானிய சுற்றுலாப் பயணிகள் தமது பாரசீகப் புத்தாண்டின் போது இலங்கைக்கு வருவதற்கு வசதியாக ஈரானில் உள்ள அனைத்து சுற்றுலாப் பங்குதாரர்களையும் ஊக்குவித்தல் ஆகியன இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

தனது ஆரம்ப உரையின் போது, ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் ஜி.எம்.வி. விஸ்வநாத் அபோன்சு, இலங்கையை இயற்கை அதிசயங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, சுவையான உணவு வகைகள் மற்றும் நட்பு மனிதர்களைக் கொண்ட தனித்துவமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட பாதுகாப்பான நாடாக அறிமுகப்படுத்தினார். இலங்கைக்கான ஈரானிய சுற்றுலாப் பயணிகளின் அண்மைய வளர்ச்சியை எடுத்துரைத்த இலங்கைத் தூதுவர், சுற்றுலாப் பயணிகளின் வருகையின் தற்போதைய முன்னேற்றத்தை அடைவதில் சுற்றுலா நடத்துநர்கள், பயண முகவர் நிலையங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய ஏனையவர்களின் குறிப்பிடத்தக்க பங்கைப் பாராட்டினார். மேலும், ஈடு இணையற்ற விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற இலங்கைக்கு தொடர்ந்தும் விஜயம் செய்யுமாறு ஈரானின் நட்பு மக்களை ஊக்குவிக்குமாறு ஊக்குவிப்புத் திட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாப் பங்குதாரர்களுக்கும் அவர் கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச விவகாரங்கள், ஈரான் வர்த்தக சபை, தொழில்கள், சுரங்கங்கள் மற்றும் விவசாயத்திற்கான துணைத் தலைவர் கலாநிதி அலிரேசா யாவாரி, ஈரான் வெளியுறவு அமைச்சின் நிபுணர் முகமது டெல்தாரி, விமான சேவை நிபுணர் மஜித் சிங் மற்றும் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா முகவரமைப்பின் முன்னாள் செயலாளர் நாயகம் ஃபாரமர்ஸ் சயீதி ஆகியோர் நிகழ்ச்சியின் குழு உறுப்பினர்களாகக் கலந்து கொண்டதுடன், அவர்கள் இலங்கையை தனித்துவமான மற்றும் மலிவு சுற்றுலாத் தலமாக எடுத்துரைத்தனர். ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி வான்வழி இணைப்பை இயக்குதல், இரு அறைகளுக்கும் இடையே வணிக சந்திப்புக்களைக் கூட்டுதல், நியாயமான பயணப் பொதிகளை அறிமுகப்படுத்துதல், பழக்கப்படுத்துதல் சுற்றுப்பயணப் பிரச்சாரங்களைத் தொடங்குதல், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்தல் மற்றும் இருதரப்பு கருவிகளை எளிதாக்குதல் போன்ற வழக்கமான சுற்றுலா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துதல் உள்ளிட்ட பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு பதிலளித்த தூதுவர் விஸ்வநாத் அபோன்சு, தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை மற்றும் ஈரானின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, இரு நாடுகளுக்கும் இடையே இருவழி சுற்றுலாப் போக்குவரத்தை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி முன்மொழிவுகளை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டினார். இரு நாடுகளின் சுற்றுலா தொடர்பான அனைத்து பங்குதாரர்களும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், 'யாரையும் பிற்படுத்த வேண்டாம்' என்ற பொன்மொழியைப் பின்பற்றுவதன் மூலம் சுற்றுலாவின் விரைவான வளர்ச்சியை அடைய முடியும் எனக் குறிப்பிட்டார். ஈரான் சுற்றுலா சங்கத்தின் சார்பில், விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா முகவர் நிலையங்களின் முன்னாள் செயலாளர் நாயகம் சயீதி, சுற்றுலா நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக இலங்கைத் தூதரகத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஈரான் சுற்றுலாத் துறை, வர்த்தக மற்றும் தொழில்துறை, வெளியுறவு அமைச்சு, விமான நிறுவனங்கள், ஊடகப் பணியாளர்கள் மற்றும் முக்கிய வர்த்தகர்கள் என 65க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அழைக்கப்பட்டவர்களுக்கு உண்மையான இலங்கை உணவு மற்றும் சிலோன் தேநீர் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

இலங்கைத் தூதரகம்,

தெஹ்ரான்

 

2022 நவம்பர் 08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close