தோஹாவில் நடைபெறும் விருந்தோம்பல் கத்தார் - 2021 இல் இலங்கை குறிப்பிடத்தக்கவகையில் முன்னிலை

தோஹாவில் நடைபெறும் விருந்தோம்பல் கத்தார் – 2021 இல் இலங்கை குறிப்பிடத்தக்கவகையில் முன்னிலை

2021 நவம்பர் 08 முதல் 11 வரை தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற விருந்தோம்பல் கத்தார் - 2021 இல் 'இலக்கு காட்சிக் கூடத்தில்' இலங்கை குறிப்பிடத்தக்க முன்னிலை வகித்தது. விருந்தோம்பல் கத்தார் என்பது கத்தாரின் முதன்மையான சர்வதேச விருந்தோம்பல் மற்றும் ஹொரேகா நிகழ்ச்சியாகும்.

கத்தார் எயார்வேஸ் அனுசரணை வழங்கும் 'இலக்கு காட்சிக் கூடம்' முதன்முதலில் 2019 இல் தொடங்கப்பட்டதுடன், பங்கேற்கும் நாடுகள், சர்வதேச சுற்றுலா ஊக்குவிப்பு சபைகள் மற்றும் பயண முகவர்கள் தமது சுற்றுலா இடங்கள், திட்டங்களை அறிமுகப்படுத்த மற்றும் தமது நாட்டை சிறந்த பயணத் தலமாக மேம்படுத்துவதற்கான ஒரு நியமிக்கப்பட்ட தளமாக இந்த காட்சிக் கூடம் செயற்படுகின்றது.

கத்தார் சுற்றுலாத்துறையின் தலைவரும், கத்தார் எயார்வேஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகியுமான மாண்புமிகு அக்பர் அல் பேக்கர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் முன்னிலையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரின் துணைச் செயலாளரான மாண்புமிகு சுல்தான் பின் ரஷித் அல்-காதர் உத்தியோகபூர்வமாக நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இலங்கைத் தூதரகம் இரண்டாவது முறையாக இந்தக் கண்காட்சியில் பங்கேற்றது. இலங்கையை ஒரு துடிப்பான மற்றும் தனித்துவமான பயண இடமாக ஊக்குவிக்கும் முகமாக, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் இலங்கை தேயிலை சபையுடன் இணைந்து தூதரகம் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றது. கத்தாருக்கான இலங்கைத் தூதுவர் மாண்புமிகு மஃபாஸ் மொஹிதீன் உட்பட பங்குபற்றும் நாடுகளின் தூதுவர்கள் மற்றும் சில இலங்கை சமூகத் தலைவர்கள் இந்த விருந்தோம்பல் கத்தார் கண்காட்சியில் இலங்கையின் சாராம்சத்துடன் கூடிய துடிப்பான மற்றும் கலாச்சார அம்சங்களால் அமைக்கப்பட்டிருந்த இலங்கையின் காட்சிக் கூடத்தை திறந்து வைக்கும் விழாவில் கலந்துகொண்டனர்.

உலகத்தரம் வாய்ந்த ஆரோக்கிய உல்லாச விடுதிகள், ஆடம்பர, வரலாற்று மற்றும் சமகால அதிசயங்கள், இயற்கை மற்றும் செழுமையான கலாச்சாரத்துடன் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு பிரியமான பிரயாண இலக்குத் தலமாக தனிநபர்கள் மற்றும் சுற்றுலா நடத்துனர்களுக்கு இலங்கையை ஊக்குவிப்பதே இந் நிகழ்வில் பங்குபற்றியதன் முக்கிய நோக்கமாகும்.

இலங்கையின் காட்சிக் கூடத்தை பெருமளவிலான பயணிகள் மற்றும் பயண நடத்துனர்கள் பார்வையிட்டனர். இந் நிகழ்வில் அதிகம் கவர்ந்த இலங்கையின் பாரம்பரிய நடனங்கள் தோஹா ஸ்டாஃபோர்ட் இலங்கை பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டன.

இலங்கைத் தூதரகம்,

தோஹா

2021 நவம்பர் 19

Please follow and like us:

Close