தீவுக்கூட்டம் மற்றும் தீவு அரசுகளின் மன்றத்தின் 3வது அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் இலங்கையின் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் வெளியிட்ட நாட்டின் அறிக்கை - 2020 நவம்பர் 25

தீவுக்கூட்டம் மற்றும் தீவு அரசுகளின் மன்றத்தின் 3வது அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் இலங்கையின் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் வெளியிட்ட நாட்டின் அறிக்கை – 2020 நவம்பர் 25

மேன்மை தங்கியவர்களே,

கௌரவ தலைவர் அவர்களே,

மரியாதைக்குரிய பிரதிநிதிகளே,

ஆயுபோவன்.

எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த மரியாதைக்குரிய கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டமை எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.

இந்த முக்கியமான நிகழ்வை ஏற்பாடு செய்த இந்தோனேசியாவின் கடல்சார் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் மாண்புமிகு லுஹூட் பி. பஞ்சைடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் தீவுக்கூட்டம் மற்றும் தீவு அரசுகளின் செயலகம் ஆகியவற்றை வாழ்த்தி எனது உரையை ஆரம்பிக்கின்றேன்.

நீங்கள் அறிந்துள்ளதன் படி, காலநிலை மாற்றத்தின் பாதகமான தாக்கங்களினால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடாக விளங்கும் இலங்கை, 2020ஆம் ஆண்டின் காலநிலை இடர் குறியீட்டில் ஆறாவது (6வது) இடத்தில் உள்ளது.

ஏனைய தீவுக்கூட்டம் மற்றும் தீவு நாடுகளைப் போலவே, இலங்கையும் காலநிலையினால் பல பேரழிவுகள், உயிர்ப்பல்வகைமையிலான குறைப்பு, மிதமான சுரண்டல், மாசு, எண்ணெய் மற்றும் இரசாயணக் கசிவு, கடல் அமிலமயமாக்கல் மற்றும் கடல் மட்ட உயர்வு போன்ற பல பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோயின் தொடரும் சூழ்நிலையானது இந்தப் பேரழிவுகளின் தாக்கத்தை மேலும் பல மடங்காக அதிகரித்துள்ளது.

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதில் சுற்றுச்சூழலை முக்கியமான முன்னுரிமைப் பகுதிகளில் ஒன்றாக அங்கீகரித்து, 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' என்ற நாட்டின் தேசிய அபிவிருத்திக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதன் மூலம், இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தொலைநோக்கு மிகுந்த தலைமைத்துவத்தின் கீழ், இந்தப் பிரச்சினைகள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கள் மற்றும் அச்சுறுத்தலிலுள்ள உயிரினங்களின் பாதுகாப்பு ஆகியவற்றிற்குப் பொருத்தமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, எமது தேசிய அபிவிருத்தித் தேவைகளில் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளாமல், நிகர பூஜ்ஜியம் அளவிலான கார்பனையுடைய நாட்டை நோக்கிச் செல்வதற்கான அதிகமான லட்சிய இலக்குகளுடன், 2016ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் தேசிய நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புக்கள் புதுப்பிக்கப்படுகின்றன.

பொதுநலவாய நீல சாசனத்தின் கீழ் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புக்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்த பணிக்குழுவின் செயல் உறுப்பினராகவுள்ள இலங்கை, 2020 செப்டம்பர் மாதத்தில் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புக்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு குறித்த தேசியக் கொள்கையை ஆரம்பித்தமை உ;ளடங்கலாக, சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்காக கணிசமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மேலும், பவளப்பாறைகளை மீட்டெடுத்தல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்தல், கடல் புற்களை மீண்டும் நடுகை செய்தல் மற்றும் மென்மையான பாதுகாப்பு வழிமுறைகளாக மணல் மேடுகளை மீளமைத்தல், நீண்ட மதில்களை நிர்மாணித்தல் மற்றும் கடல் களைகள், மீன்களுக்கான மிதக்கும் கடல் வளர்ப்பு முறைமைகள் உள்ளிட்ட சில முக்கியமான தழுவல் தொழில்நுட்பங்களை இலங்கை அடையாளம் கண்டுள்ளது.

மேலும், மீன்களின் கையிருப்பில் வேகமான வீழ்ச்சிக்கு பங்களிப்புச் செயதுள்ள மைக்ரோ பிளாஸ்டிக் மாசுபாட்டின் தாக்கத்தைக் குறைப்பதற்காக, ஒற்றை முறைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கின் பாவனையை அதிகமான முன்னுரிமை அடிப்படையில் தடை செய்துள்ளது.

மொன்ட்ரியல் நெறிமுறைக்கான தரப்புக்களின் 13வது கூட்டத்திற்கு 2001ஆம் ஆண்டில் தலைமை தாங்கிய வகையில், நைதரசன் கழிவுகளை அரைவாசியாகக் குறைத்து, அல்கல் பூ மலர்ச்சி, சமுத்திர இறப்பு வலயங்கள் மற்றும் தூர்ந்துபோதல் ஆகியவற்றிற்கான பாதகமான தாக்கங்களை குறைத்தல் என்ற லட்சியத்துடன், நிலையான நைதரசன் முகாமைத்துவம் குறித்த கொழும்புப் பிரகடனத்துடன் இலங்கை முன்னேறி வருவதாகத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

தீவுக்கூட்டம் மற்றும் தீவு அரசுகளின் மன்றத்தின் 1வது அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனாடோ கூட்டுப் பிரகடனத்தை இலங்கை வரவேற்பதுடன், கொள்கை மற்றும் சமூக அளவிலான அணுகுமுறைகளை பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் செயற்படுத்துவதன் மூலம் கடல் நிலைத்தன்மை சார்ந்த சவால்களை சமாளிப்பதற்கான லட்சியம் மிகுந்த வரைபடம் தொடர்பான கலந்துரையாடல்களை எதிர்காலத்தில் எதர்பார்க்கின்றோம்.

ஆயுபோவன்.

நன்றி.

 

The full video can be viewed at: https://youtu.be/5x5xUTQI-GM

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close