தனது சான்றாதாரப் பத்திரங்களை பாலஸ்தீன அரச தலைவரிடம் கையளித்த பாலஸ்தீன  அரசாங்கத்திற்கான இலங்கைப் பிரதிநிதி

 தனது சான்றாதாரப் பத்திரங்களை பாலஸ்தீன அரச தலைவரிடம் கையளித்த பாலஸ்தீன  அரசாங்கத்திற்கான இலங்கைப் பிரதிநிதி

 பாலஸ்தீன அரசாங்கத்திற்கான இலங்கைப் பிரதிநிதியாக புதிதாக நியமிக்கப்பட்ட திரு நவாலகே பேர்னெட்  கூரே, 14 அக்டோபர் 2021 அன்று, இதற்கென ரமல்லாவிலுள்ள அரச தலைவர் மாளிகையில் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வொன்றில் தனது சான்றாதரப் பத்திரத்தை பாலஸ்தீன அரச தலைவரிடம் சமர்ப்பித்தார்.

அரச தலைவர் மாளிகையில், காவலர்களின் மரியாதை அணிவகுப்புடன் வரவேற்கப்பட்ட இலங்கைப் பிரதிநிதியை, அரச தலைவர் மௌமூத் அப்பாஸ் அவர்கள் அன்புடன் வரவேற்றார்.

இலங்கைப் பிரதிநிதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின்  வாழ்த்துக்களை அரச தலைவர் மௌமூத் அப்பாஸ் அவர்களிடம் தெரிவித்தார்.  இரு நாடுகளுக்குமிடையில் நீடித்திருக்கும் நட்புறவு மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இலங்கையில் ஏற்பட்டு வரும் மேம்பாடுகள்  தொடர்பில் இலங்கைப் பிரதிநிதி எடுத்துரைத்தார்.

அரச தலைவர் மௌமூத் அப்பாஸ் அவர்கள், இருதரப்பு ரீதியிலும் சர்வதேச மன்றங்களிலும் பாலஸ்தீன அரசிற்கு  ஆதரவளித்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கும் இலங்கை மக்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைப் பிரதிநிதியின் வெற்றிகரமான பதவிக்காலத்திற்காக வாழ்த்து தெரிவித்த பாலஸ்தீன அரச தலைவர், புதிய பிரதிநிதியின் பதவிக்காலத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகள் மேலும் விரிவாக்கப்படுமென்ற தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் குடிபெயர்ந்தோருக்கான அமைச்சர் கலாநிதி ரியாட் அல் மால்கி, அரச  தலைவரின் இராஜதந்திர ஆலோசகர் கலாநிதி மஜ்டி அல் கால்டி மற்றும் அரச தலைவரின் பாதுகாப்பு படைத்தளபதி பிரிகேடியர் முனீர் ஸூபி ஆகியோரும் இந்நிகழ்வில் சமூகமளித்திருந்தனர்.

சான்றாதாரப்பத்திரம் வழங்கும் நிகழ்வு முடிவடைந்ததும், இலங்கைப் பிரதிநிதியின் கோரிக்கையின் பேரில் அரச  தலைவரின் அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டவாறு, காலஞ்சென்ற அரச தலைவர் யசீர் அரஃபாட் அவர்களின் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பிரதிநிதி அலுவலகம்

ரமல்லா

20 அக்டோபர் 2021

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close