ஜேர்மன் மாநிலமான பேடன்- ர்ட்டம்பேர்க்கின் சமூக விவகாரங்கள், சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சு, கோவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவாக ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட 300,000 ரேபிட் அன்டிஜென் பரிசோதனைக் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. சுமார் இலங்கை ரூபா 300 மில்லியன் பெறுமதியான இந்த நன்கொடை நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படவுள்ளன.
இலங்கைத் தூதரகம் மற்றும் பேடன்- ர்ட்டம்பேர்க்கில் உள்ள இலங்கையின் கௌரவத் தூதுவர் திரு. தர்மா விவேகச்சந்திரன் ஆகியோரால் வசதியளிக்கப்பட்ட ஜேர்மனின் நன்கொடை கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. உற்பத்தி, விநியோகம் மற்றும் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி. ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க ஆகியோரிடம் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இந்த நன்கொடையைக் கையளித்தார்.
கோவிட்-19 தொற்றுநோயைக் கண்டறிந்து அதன் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் பெறுமதிமிக்க இந்த நன்கொடையை வழங்கியமைக்காக ஜேர்மனிய மாநிலமான பேடன்-ர்ட்டம்பேர்க்கின் சமூக விவகாரங்கள், சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சிற்கு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அனுசரணையுடன் விமானத்தில் எடுத்து வரப்பட்ட இந்த நன்கொடையை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதுவர் மனோரி உனம்புவே மற்றும் தூதரக ஊழியர்கள் ஒருங்கிணைத்தனர்.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2021 நவம்பர் 16