பெப்ரவரி 01 ஆந் திகதி புதன்கிழமை ஜெனீவாவில் இடம்பெற்ற உலகளாவிய காலாந்தர மீளாய்வு செயற்குழுவின் 42 ஆவது அமர்வின் போது இலங்கை தனது 4 ஆவது உலகளாவிய காலாந்தர மீளாய்வு சுழற்சியை பூர்த்தி செய்தது. இந்த சுழற்சிக்கான இலங்கையின் தேசிய அறிக்கையானது, சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் இலங்கையின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசிக்கப்பட்டதன் பேரில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் உள்ளீட்டை உள்ளடக்கிய மற்றும் பரந்த அடிப்படையிலான செயன்முறையின் மூலம் தயாரிக்கப்பட்டது.
உலகளாவிய காலாந்தர மீளாய்வு நான்கு வருட சுழற்சிகளில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலாந்தர மீளாய்வு பணிக்குழுவால் மீளாய்வுப் பொறிமுறையாக நடாத்தப்படுகின்றது. இலங்கையின் கடைசி உலகளாவிய காலாந்தர மீளாய்வு 2017 இல் இடம்பெறறிருந்தது.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அறிக்கையின் ஊடாக ஆரம்ப அறிக்கையை வழங்கிய தூதுக்குழுவின் தலைவரான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் உட்பட இலங்கையின் கடைசி மீளாய்வின் பின்னர் அடைந்துள்ள முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகளை எடுத்துரைத்தார். இலங்கை சுதந்திரமடைந்ததன் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் 2023ஆம் ஆண்டை சமூகப் பொருளாதார ஸ்திரத்தன்மை, நல்லிணக்கம் மற்றும் மீட்சியின் ஆண்டாகக் கருதுவதாகவும், 'கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டு, மேலும் சிறப்பாகவும் வலுவாகவும் கட்டியெழுப்புவதும் முக்கியமானதாகும்' என அமைச்சர் தெரிவித்தார்.
21வது அரசியலமைப்புத் திருத்தம், நல்லிணக்கச் செயற்பாடுகள் மற்றும் தேசிய சுயாதீன நிறுவனங்களின் முயற்சிகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட இலங்கையால் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்ட மற்றும் கொள்கை நடவடிக்கைகளை ஜெனீவாவிலுள்ள ஐ.நா. விற்கான நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க எடுத்துரைத்தார்.
கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், பயங்கரவாதத் தடைச் சட்டம், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறுபான்மையினரின் உரிமைகள், ஊழலுக்கு எதிரான போராட்டம், சமூகப் பாதுகாப்பு, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் அடையப்பட்ட முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான கேள்விகள் மற்றும் கருத்துக்களுக்கு இலங்கைப் பிரதிநிதிகள் பதிலளித்தனர்.
106 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று, தமது பாராட்டு, கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதன் மூலம், பரந்த அளவிலான பிரச்சினைகளை உள்ளடக்கியதாக, மீளாய்வு ஆக்கபூர்வமான சூழலில் நடாத்தப்பட்டது. கோவிட் தொற்றுநோய் மற்றும் உலகளாவிய நெருக்கடி ஆகியவற்றால் சமூகப் பொருளாதார சவால்களை எதிர்கொண்ட போதிலும், 3வது சுழற்சியில் இலங்கையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியமைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
செர்பியா, சம்பியா மற்றும் கியூபா ஆகியவை கடந்த சுழற்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதை வரவேற்றன.
'பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கும், பாலின அடிப்படையிலான வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கும்' மேற்கொள்ளப்படும் முயற்சிகளை பங்களாதேஷ் வரவேற்றது. 'பாரிய சமூகப் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், மனித உரிமைக் கடமைகளை நடைமுறைப்படுத்துவதில் அதன் ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் முன்னேற்றத்திற்காக' இலங்கையை பூட்டான் பாராட்டியது. தேசிய ஊட்டச்சத்து கொள்கையை ஏற்றுக்கொண்டமையை நேபாளம் வரவேற்றது. 'இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை மற்றும் நல்லிணக்கப் பிரச்சினைகளின் பல்வேறு அம்சங்களில் சர்வதேச சமூகம் மற்றும் ஏனைய அமைப்புக்களின் உறுப்பினர்களுடன் இலங்கை அரசாங்கத்தின் ஈடுபாட்டை இந்தியா கவனத்தில் கொண்டது.' 'பாலின மையப் புள்ளிகள், பாலின பிரதிபலிப்பு வரவு செலவுத் திட்டம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்புக் குழுக்களை நிறுவுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்து துறை சார்ந்த அமைச்சுக்களிலும் பாலின முதன்மை நீரோட்டத்திற்கான கொள்கையை அறிமுகப்படுத்தியதற்காக' இலங்கை அரசாங்கத்தை மாலைதீவு வாழ்த்தியது. 2022 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பயங்கரவாதத் தடை (திருத்தம்) சட்டம், அரசியலமைப்பின் 21வது திருத்தம் மற்றும் தேசிய ஆட்கடத்தல் எதிர்ப்பு பணிக்குழுவின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்ற சட்டமியற்றும், நிர்வாக நடவடிக்கைகளை வரவேற்ற பாகிஸ்தான், ஐ.நா மனித உரிமைகள் பொறிமுறைகளுடனான இலங்கையின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பாராட்டியது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலக்குகளை விட இலக்கு மக்கள் தொகையில் கோவிட் தடுப்பூசி செயற்றிட்டத்தை அடைந்ததற்காக இலங்கையை தாய்லாந்து பாராட்டியது.
'பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை நடைமுறைப்படுத்துதல் உட்பட, முந்தைய மீளாய்வு சுழற்சியில் இருந்து இலங்கை எடுத்த நேர்மறையான நடவடிக்கைகளை' ஜப்பான் பாராட்டியது. நாட்டில் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான இலங்கையின் சொந்த முயற்சிகளுக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிப்பது முக்கியமாகக் கருதப்படுவதாக ஜப்பான் குறிப்பிட்டது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய திருத்தங்களை சிலி, எகிப்து மற்றும் அயர்லாந்து ஆகியன பாராட்டின.
'அனைத்து மத மற்றும் இனக் குழுக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில் இலங்கையின் அர்ப்பணிப்புக்களை' இங்கிலாந்து வரவேற்றதுடன், 'அரசியல் சேர்க்கை மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை வளர்ப்பதற்கான இலங்கையின் சமீபத்திய முயற்சிகள் குறிப்பாக வரவேற்கத்தக்கவை' என மேலும் குறிப்பிட்டது.
பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்புக்கான தேசிய செயற்றிட்டத்தை ஏற்றுக்கொண்டதை கத்தார் பாராட்டியது. இதை ஸ்பெயினும் வரவேற்றது. அல்ஜீரியா, '2022 இன் அரசியலமைப்புத் திருத்தத்தை' வரவேற்றது.
'இலங்கை பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்து, நல்லிணக்கச் செயன்முறையைப் புதுப்பிப்பதற்காக சர்வ கட்சி மாநாட்டை நடாத்தியதைக் கண்டு துருக்கி மகிழ்ச்சியடைந்தது.'
'வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான அலுவலகத்தை நிறுவுவதற்கான சமீபத்திய ஒப்புதலை' பிலிப்பைன்ஸ் வரவேற்றது.
'சர்வதேச மனித உரிமைக் கடமைகள் மற்றும் மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்பதிலான உறுதிப்பாட்டை' நைஜீரியா அரசாங்கம் பாராட்டியது.
இலங்கையின் 'நிலையான அபிவிருத்தி மற்றும் ஆட்கடத்தலுக்கு எதிரான இலக்குகளை அடைவதற்கான அயராத உழைப்பை' சவூதி அரேபியா பாராட்டியது.
'சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் தனது கடமைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் இலங்கையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சட்டமியற்றுதல், கொள்கை மற்றும் நிறுவன நடவடிக்கையை' நமீபியா பாராட்டியது.
ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய செயற்றிட்டத்தை ஓமான் பாராட்டியது.
சீனா, ரஷ்யா, கியூபா, வெனிசுலா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிட்டன.
'உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்கப் பாதையை' ஐக்கிய அரபு இராச்சியம் பாராட்டியது.
மக்களின் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள், குறிப்பாக அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளுதல், சுயாதீன ஆணைக்குழுக்களின் பணிகள் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளை பல நாடுகள் பாராட்டின. குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆகியோரின் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் நாடுகள் சுட்டிக் காட்டின. உலகளாவிய காலாந்தர மீளாய்வு செயன்முறை மற்றும் தேசிய அறிக்கையை தயாரிப்பதில் எடுக்கப்பட்ட முயற்சிகளுடன் இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை பல நாடுகள் பாராட்டின.
மீதமுள்ள சவால்களைக் குறிப்பிட்டு, 'பாலின அடிப்படையிலான வன்முறையைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை' பெல்ஜியம் பாராட்டியது.
அஸர்பைஜான், எத்தியோப்பியா, ஹங்கேரி மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை பாராட்டின. சவால்களுக்கு மத்தியிலும் சமூகப் பொருளாதார ஸ்திரப்படுத்தல், நல்லிணக்கம் மற்றும் மீட்சிக்கான இலங்கையின் முயற்சிகளை பல நாடுகள் வரவேற்றன.
உலகளாவிய காலாந்தர மீளாய்வுச் செயற்பாட்டில் ஈடுபட்ட அனைத்து அரசாங்க மற்றும் சிவில் சமூகப் பங்காளிகளுக்கும், மீளாய்வின் போது பேசிய பிரதிநிதிகளுக்கும் நன்றி தெரிவித்த ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, பெறப்பட்ட பரிந்துரைகளை இலங்கை கவனமாக பரிசீலிக்கும் எனக் குறிப்பிட்டார்.
மீளாய்வின் முடிவில், சபையின் தலைவரும் அமர்வின் தலைவருமான செக் மக்கள் குடியரசின் அனைத்து கேள்விகள் மற்றும் கருத்துக்களு பதிலளிப்பதற்கும் தயாராக இருந்தமைக்கும் இலங்கைத் தூதுக்குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.'
இலங்கையின் பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்கினார். ஜெனீவாவில் உள்ள பிரதிநிதிகள் குழுவில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, ஜனாதிபதி செயலகம், சட்டமா அதிபர் திணைக்களம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் ஐ.நா. விற்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இடம்பெற்றிருந்ததுடன், கொழும்பில் இருந்து 20 க்கும் மேற்பட்ட அமைச்சுக்கள் இணைய வழியில் மெய்நிகர் ரீதியாக இணைந்திருந்தன.
ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம்,
ஜெனீவா
2023 பிப்ரவரி 02