2023 மே 24ஆந் திகதி முதல் 27ஆந் திகதி வரை ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டோக்கியோவில் நடைபெறும் 28வது நிக்கேய் ஆசியாவின் எதிர்காலம் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி விக்கிரமசிங்க, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, நிதி அமைச்சர் சுசுகி ஷூனிச்சி, வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான அமைச்சர் டாரோ கோனோ ஆகியோருடன் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
பரஸ்பர நன்மை பயக்கும் கலாச்சார உறவுகளை ஊக்குவிக்கும் அதே வேளையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள ஜப்பான் - இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் கழகத்தின் அதிகாரிகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இந்த விஜயத்தின் போது, டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக மாநாட்டின் போது, ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு மற்றும் ஜப்பான் - இலங்கை வர்த்தக ஒத்துழைப்பு சபையுடன் இணைந்து, வர்த்தக சமூகத்தினருடன் கலந்துரையாடுவதற்கும், அதனைத் தொடர்ந்து, இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்கான வழிகளை அடையாளம் காண்பதற்காக ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக சபையுடன் கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2023 மே 22