சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் 2021 டிசம்பர் 21ஆந் திகதி சான்சரி வளாகத்தில் சமாதான செய்தியுடன் கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டது.
எழும்பூர் வெஸ்லி தேவாலயத்தின் போதகரும், தலைவருமான வணக்கத்திற்குரிய மனோவா சந்தோஷம் மற்றும் புனித ஜோர்ஜ் கோட்டையில் உள்ள புனித மேரி தேவாலயத்தின் பாதிரியார் மற்றும் ஆயர் வணக்கத்திற்குரிய ஆர்.எல். ரிச்சர்ட்சன் ஆகியோர் தேவ செய்தி மற்றும் பிரார்த்தனைகளை வழங்கினர்.
கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்காக சென்னையில் உள்ள சி.எஸ்.ஐ. காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பிரதி உயர்ஸ்தானிகராலயம் அழைத்திருந்தது. தூதரக ஊழியர்களின் நிதியுதவியுடன் சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளிக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கிறிஸ்மஸ் பரிசாக வழங்கப்பட்டன.
தூதரகத்தினால் வழங்கப்பட்ட இரவு விருந்துடன் நிறைவுபெற்ற இந் நிகழ்வில், மாணவர்கள், தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் கிறிஸ்மஸ் கரோல்கள் மற்றும் நடனங்கள் நிகழ்த்தப்பட்டன.
இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,
சென்னை
2021 டிசம்பர் 30