கோவிட்-19 தொடர்பான உப வெளிநாட்டு அமைச்சர்கள் மட்ட வீடியோ மாநாட்டில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக்க பாலசூரிய அவர்களின் 'கோவிட்-19 க்கான இலங்கையின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பு' குறித்த அறிக்கை - 2020 நவம்பர் 10

கோவிட்-19 தொடர்பான உப வெளிநாட்டு அமைச்சர்கள் மட்ட வீடியோ மாநாட்டில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக்க பாலசூரிய அவர்களின் ‘கோவிட்-19 க்கான இலங்கையின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பு’ குறித்த அறிக்கை – 2020 நவம்பர் 10

சீனா, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை வெளிநாட்டு அமைச்சுக்களின் உயர் மட்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் 2020 நவம்பர் 10 ஆந் திகதி பிரதி அமைச்சர்கள் மட்ட உரையாடல் நடைபெற்றது.

பிரதி அமைச்சர் லுயோ ஜாஹூய் சீனாவை பிரதிநிதித்துவப்படுத்திய அதே வேளை, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய உரையாற்றினார்.

தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியிலான ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட பரஸ்பர அக்கறை மற்றும் ஒத்துழைப்பின் பல பகுதிகளை இந்த உரையாடல் உள்ளடக்கியிருந்தது. அனுபவம், நிபுணத்துவம் மற்றும் உதவிகளை முன்னோக்கி நகர்த்துவதற்கான அர்ப்பணிப்புடன், அனைத்து நாடுகளும் எதிர்கொள்ளும் பரஸ்பர சவால்கள் பற்றிய கலந்துரையாடல்களையும் இந்த உரையாடல் உள்ளடக்கியிருந்தது.

தற்போதைய நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு ஒரு கூட்டான பிரதிபலிப்பு அவசியம் என்றும், தற்போதைய சூழ்நிலையில் பயணிப்பதில் நாடுகள் 'பங்காளிகளாக' இருக்க வேண்டும் என்றும் இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பாலசூரிய வலியுறுத்தினார்.

வீடியோ மாநாட்டின் போது இராஜாங்க அமைச்சர் பாலசூரிய வழங்கிய முழுமையான அறிக்கை பின்வருமாறு.

கோவிட்-19 தொடர்பான உப வெளிநாட்டு அமைச்சர்கள் மட்ட வீடியோ மாநாட்டில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக்க பாலசூரிய அவர்களின் 'கோவிட்-19 க்கான இலங்கையின் ஒட்டுமொத்த பிரதிபலிப்புகுறித்த அறிக்கை - 2020 நவம்பர் 10

அறிமுகம்

சீனாவின் உப வெளிநாட்டு அமைச்சர் அதிமேதகு லுயோ ஜாஹூய் அவர்களே மற்றும் மேன்மை தங்கியவர்களே,

ஆரம்பத்தில், மிக முக்கியமானதொரு தலைப்பில் சரியான நேரத்தில் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக சீன வெளிவிவகார அமைச்சிற்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதன் மூலம் எனது உரையை ஆரம்பிக்கின்றேன்.

22 மில்லியன் மக்கள் தொகையையுடைய அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இலங்கை குறைந்த அளவிலான வளங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட வெளியக உதவிகளுடன் வைரஸ் பரவுவதை திறம்பட கட்டுப்படுத்தியது. இன்றைய நிலவரப்படி இலங்கையில் 36 மரணங்களும், 14,000 கோவிட் தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட கொத்தணியைச் சார்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களாவர்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஆரம்பத் தலையீட்டின் காரணமாக, சுகாதாரத் துறை, இலங்கை ஆயுதப்படைகள், பொலிஸ் மற்றும் புலனாய்வு சேவைகள், வெளிநாட்டு அமைச்சு மற்றும் பல அரச முகவர்களை ஒன்றிணைத்து 2020 ஜனவரியில் கோவிட்-19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டது. இது அரசின் அனைத்து முகவர்களும் ஒத்துழைத்து, ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதொரு சவால் ஆவதுடன், சுகாதாரத் துறையால் மட்டும் கையாளக்கூடிய ஒரு பணி அல்ல என்பதை இலங்கை ஆரம்பத்தில் புரிந்து கொண்டது.

ஒரு தேசிய மூலோபாயம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவை செயலணியினால் தொடர்ந்தும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றது. மூலோபாயத்தை செயற்படுத்துவதற்காக கோவிட்-19 ஐ தடுப்பதற்கான ஒரு தேசிய செயற்பாட்டு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய மூலோபாயம் 04 முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது:

அ.      பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காணுதல்

ஆ.      தொடர்புகளைத் தடமறிதல்

இ.       தனிமைப்படுத்துதல்

ஈ.        மருத்துவ சிகிச்சைகள்

அடையாளம் காணப்பட்ட அனைத்து நோயாளிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரச மருத்துவமனைகள் நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ளன. அறிகுறியற்ற கோவிட் நோயாளிகளுக்காக இடைநிலைப் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நபர்களையும் அவர்களின் தொடர்புகளையும் அடையாளம் காணுவதற்காக, எமது பாதுகாப்புப் படைகள் மற்றும் உளவுத்துறை நிறுவனங்கள் பயன்படுத்தும் மிகச் சிறந்த தொடர்புத் தடமறிதல் முறை எமது மூலோபாயத்தின் மற்றுமொரு அம்சமாகும். அறிக்கையிடப்பட்ட கோவிட் நோயாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி, இந்தக் குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளது. வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் நியமிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படல் வேண்டும்.

கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளில், உள்நாட்டு முடக்கநிலை, மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் தனிநபர்களின் நடமாட்டங்களை தவிர்த்தல் போன்றன உள்ளடங்கும். மேலும், சமூகப் பரவலைத் தடுப்பதற்காக, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பணியிடங்களுக்காக 'வீட்டிலிருந்து வேலை செய்தல்' என்ற கருத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முடக்கநிலை மற்றும் ஊரடங்கு உத்தரவுகளின் போது, உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை வீடுகளில் விநியோகம் செய்வதை அரசாங்கம் திறம்பட மேற்கொள்கின்றது.

விமான நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் இருப்பதுடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை, குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் முதியவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வெற்றிகரமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை இதுவரை வெளிநாடுகளிலிருந்து 44,000 க்கும் மேற்பட்ட (44,121) இலங்கையர்களை மீள அழைத்து வந்துள்ளதுடன், அவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். வெளிநாட்டு அமைச்சுடன் ஒருங்கிணைந்து வெளிநாடுகளில் உள்ள 67 இலங்கைத் தூதரகங்கள் இலங்கையர்களை பதிவு செய்வதிலும், முன்னுரிமை அடிப்படையில் அவர்களை திருப்பி அனுப்புவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நாடு முழுவதும் மிகவும் பயனுள்ள பொது சுகாதார அமைப்பு இலங்கையின் கோவிட் நிர்வாகத்தின் மற்றுமொரு தூண் ஆகும். எமது பொது சுகாதார ஆய்வாளர்கள் தரை மட்டத்தில் மக்களுடன் தொடர்புகளைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன், தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்கின்றனர்.

அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதன் மூலமும், சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும் பொதுமக்கள் திறம்பட பங்களிப்பு செய்துள்ளனர். பல தன்னார்வ நிறுவனங்கள் நிதி திரட்டியதுடன், தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்புக் கருவிகளையும் வழங்கின.

சவால்கள்

அரசாங்கம் சமாளிக்க வேண்டிய சவால்களில் முதன்மையானது, குறிப்பாக முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களிடையேயான வேலை இழப்பு ஆகும். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் வாழ்க்கை மானியங்கள், சலுகைக் கடன்களை வழங்குவதுடன், வங்கிகள் மற்றும் குத்தகை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துகின்றது. உணவுப் பொதிகளை விநியோகிப்பதற்கான திட்டங்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவுகளை செலுத்துதல் ஆகியவை முடக்கப்பட்ட பகுதிகளில் செயற்படுத்தப்பட்டுள்ளன.

உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் சர்வதேச கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்தின் சீர்குலைவால் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய ஆடைத்துறை ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட இலங்கை நிறுவனங்களுக்கு கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான பாதுகாப்புக் கருவிகளுக்கான கோரல்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்வதன் மூலம் வெளிநாட்டு அமைச்சு மற்றும் இலங்கைத் தூதரகங்கள் உதவிகளை வழங்குகின்றன. முகமூடிகள், பி.பி.இ. மற்றும் ஏனைய அத்தியாவசிய பாதுகாப்புக் கருவிகளை தயாரிப்பதற்காக விரைவாக தமது உற்பத்திகளை மாற்றுவதன் மூலம் எமது நிறுவனங்கள் அவற்றின் விரிதிறன் மற்றும் புத்தாக்கத்தை நிரூபித்தன. ஆகவே, குறுகிய அறிவிப்பில் பாதுகாப்புப் பொருட்களை உலகெங்கிலும் வழங்குவதன் மூலம் உலகளவில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கு இலங்கை உதவியது என்றும் குறிப்பிடலாம். இது தொழிற்சாலைத் தொழிலாளர்களின் தொழில்களைப் பாதுகாக்கவும் உதவியது.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொழில் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் உள்ளிட்ட தொற்றுநோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கும் அரசாங்கம் நிவாரண நடவடிக்கைகளை வழங்கியுள்ளது.

சர்வதேச உதவி

இலங்கையைப் போலவே, ஏராளமான நாடுகளும் இந்தத் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக நெருக்கடி நேரத்தில் இலங்கைக்கு ஆதரவுகளை வழங்கி வரும் பாரம்பரிய நன்கொடை சமூகமும் இதில் உள்ளடங்கும். ஆகவே, தொற்றுநோய் நிலைமையின் போது, இலங்கைக்கு வெளியக நிதி மற்றும் பொருள் ஆதரவு ஆகியன குறைவாகவே உள்ளன. உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்கிய சீனா உள்ளிட்ட நன்கொடை நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஆதரவுகளை இலங்கை பாராட்டுகின்றது. இரண்டாவது அலையை அடுத்து வளங்களில் குறிப்பிடத்தக்க பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சாத்தியமான தடுப்பூசி தொடர்பான நேர்மறையான முன்னேற்றங்களைத் தொடர்ந்து உலகம் நம்பிக்கையில் இருப்பதனால், தற்போது ஒரு புதிய இயல்பான நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.

இருப்பினும், இந்தத் தொற்றுநோயின் கடுமையான சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் நீண்ட காலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால்தான், பிந்தைய கோவிட் உலகின் நீரோட்டத்தில் பயணிப்பதற்காக, முன்னெப்போதையும் விட இப்போது நாடுகள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் கூட்டாளர்களாக இருக்க வேண்டும்.

இந்தப் பின்னணியில், இலங்கை போன்ற நாடுகள் உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

  • விரைவான பரிசோதனை உபகரணங்கள், வென்டிலேட்டர்களைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் நோயறிதல், சிகிச்சை மற்றும் மருத்துவத்திலான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.
  • அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு மலிவாகக் கிடைக்கக்கூடிய தடுப்பூசிக்கான ஆரம்ப அணுகல்.
  • எல்லைக் கட்டுப்பாடு, எல்லை தாண்டிய பரிமாற்றம், நுழைவுப் புள்ளிகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் அவசரகாலப் பிரதிபலிப்பு தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.
  • கடன் நிவாரணம் உள்ளிட்ட பொருளாதார மீட்பு தொடர்பான அனுபவங்களின் உதவி மற்றும் பகிர்வு, மற்றும்,
  • தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளின் சீரான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு

எமது நாடுகளுக்கிடையில் ஒரு உரையாடலைத் திறக்கும் சரியான நேரத்தில் இந்தக் கூட்டத்தை ஒன்றிணைத்தமைக்காக அமைப்பாளர்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கும் அதே நேரத்தில், இந்தத் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நடைமுறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இந்த முயற்சியைத் தொடருவதற்கும், எதிர்காலத்தில் கோவிட் இல்லாத உலகத்தை எதிர்நோக்குவதற்கும் கோரிக்கை விடுக்கின்றேன்.

The full video can be viewed at:  https://youtu.be/LtwU5Ex0mdA

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close