கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு முக்கிய அபிவிருத்திகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி விளக்கம்

கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு முக்கிய அபிவிருத்திகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி விளக்கம்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் 2022 ஆகஸ்ட் 01ஆந் திகதி, திங்கட்கிழமை இடம்பெற்ற இராஜதந்திரிகளுக்கான முதலாவது மாநாட்டில், புதிய ஜனாதிபதியின் தெரிவு மற்றும் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட முக்கிய அபிவிருத்திகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, கொழும்பில் உள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு விளக்கமளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்வதற்கும் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கும் இட்டுச் சென்ற இலங்கையின் அண்மைக்கால அரசியல் நிகழ்வுகளை அமைச்சர் சுட்டிக் காட்டினார். இது தொடர்பான செயன்முறைகள் ஜனநாயக அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் இடம்பெற்றன. நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை சர்வதேச சமூகத்திலுள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் மிக அதிக முன்னுரிமையுடன் கலந்துரையாடி விரைவாகத் தீர்ப்பதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். தற்போதைய சமூகப் பொருளாதார சூழலில் பொருத்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சர்வதேச சமூகத்திற்கு தனது ஆழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் பரந்த அடிப்படையிலான, கலந்தாலோசனை அணுகுமுறையை விரிவாகக் குறிப்பிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பாக நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் குறித்துக் குறிப்பிட்டார். மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப முற்போக்கான சட்டச் சீர்திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படுவது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆகஸ்ட் 03ஆந் திகதி, புதன்கிழமையன்று பாராளுமன்றம் அதன் அடுத்த அமர்வுக்காக மீண்டும் கூடும் போது ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் புதிய அரசாங்கத்தின் கொள்கை முன்னுரிமைகள் தொடர்பாக, அனைவருக்கும் நட்பு என்ற கொள்கையின் அடிப்படையில் இலங்கையின் நடுநிலை மற்றும் அணிசேரா வெளியுறவுக் கொள்கையை அமைச்சர் சப்ரி மீண்டும் வலியுறுத்தினார்.

அமைதியான போராட்டத்திற்கான உரிமை, ஒன்று கூடும் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட இலங்கையின் நீண்டகால ஜனநாயக நற்சான்றிதழ்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எடுத்துரைத்தார். இந்த உரிமைகள் அரசியலமைப்பு ரீதியில் அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கம் திறம்பட செயற்படுவதை உறுதி செய்வதற்காக, சட்டத்தின் கட்டமைப்பிற்குள் நாட்டில் இயல்பு நிலையை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் இராஜதந்திர சமூகத்திற்கு விளக்கினார். ஜூலை 2022 இல் இயற்றப்பட்ட அவசரகால சட்டங்கள் வழக்கமான மற்றும் அவ்வப்போது மீளாய்வுக்கு உட்பட்டவை என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டமைக்காக இராஜதந்திர சமூகத்தின் உறுப்பினர்கள் அன்புடன் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், பயனுள்ள புதுப்பித்தலுக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஆகஸ்ட் 02

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close