வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இன்று (ஜனவரி 11) கனேடிய உயர்ஸ்தானிகர் டேனியல் பூட்டை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்ததுடன், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட நான்கு நபர்களுக்கு எதிராக கனடா அரசாங்கம் கொண்டுவந்துள்ள ஒருதலைப்பட்சமான தடைகளை அறிவித்தமைக்காக அரசாங்கத்தின் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார்.
கனேடிய அரசாங்கத்தின் இத்தகைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கையானது, கனடாவில் உள்ள உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்களால் தூண்டப்பட்டு, ஆபத்தான முன்னுதாரணமாக அமைவதுடன், குறிப்பாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற இலங்கையின் நலன்களுக்கு பாதகமானது என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி வலியுறுத்தினார். கனடாவின் இந்த அறிவிப்பானது, தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாதகமானது என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு மற்றும் அபிவிருத்திப் பங்காளித்துவத்தை கருத்தில் கொண்டு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி, இந்தத் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்து இலங்கையுடன் ஆக்கபூர்வமாக ஈடுபடுமாறு பதில் உயர்ஸ்தானிகரை வலியுறுத்தினார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 ஜனவரி 11


