இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மீது தடைகளை விதிக்கும் கனடாவின் தீர்மானத்திற்கு இலங்கை வருத்தம் தெரிவிப்பு

இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மீது தடைகளை விதிக்கும் கனடாவின் தீர்மானத்திற்கு இலங்கை வருத்தம் தெரிவிப்பு

இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட நான்கு நபர்கள் மீது தடைகளை விதிக்கும்  அரசியல் உள்நோக்கம் கொண்ட கனடாவின் 2023 ஜனவரி 10ஆந் திகதிய தீர்மானம் குறித்து இலங்கை ஆழமாக வருந்துகின்றது. கனேடிய அரசாங்கத்தின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கை, கனடாவில் உள்ள உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்களால் தூண்டப்பட்டு, ஆபத்தான முன்னுதாரணத்தை அமைப்பதுடன், குறிப்பாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு அதிக முக்கியத்துவதடதை வழங்குகின்ற இலங்கையின் நலன்களுக்கு விரோதமானது. உலகப் பார்வையில், இத்தகைய செயல், இறையாண்மையுள்ள நாடுகளின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை, உரிய நடைமுறையைப் பின்பற்றாமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தன்னிச்சையான வெளிப்புற முடிவுகளுக்கு இணங்க செயற்படுவதான தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. இந்தச் செயல், கனடா நிலைநாட்டுவதாகக் கூறும் உரிமைகளை மீறுவதாகும்.

இலங்கை அரசாங்கம் முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியால் முன்வைக்கப்படும் பல  சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வரும் தருணத்தில் வெளியிடப்பட்டிருக்கும் கனேடிய அதிகாரிகளின் இந்த அறிவிப்பு கவலையளிக்கின்றது.

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் நாட்டின் ஜனநாயக மற்றும் நிர்வாகக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான மற்றும் அர்த்தமுள்ள முன்னேற்றத்தின் பின்னணியிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கை மேற்கொண்டுள்ள  முற்போக்கான நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளன. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி, கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்களைத் தீர்ப்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழு, இலங்கையின் பாரம்பரிய வெளிநாட்டு சமூகங்களை ஆக்கபூர்வமாக ஈடுபடுத்துவதற்காக வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் விவகார அலுவலகம் மற்றும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் ஆகியன அவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ள ஏனைய சில முக்கிய நடவடிக்கைகளாகும்.

இலங்கையின் நீண்டகால இருதரப்பு மற்றும் அபிவிருத்திப் பங்காளியாக கனடா இருந்து வருகின்றது. கனேடிய அதிகாரிகளின் இந்தத் தீர்மானம் குறித்த தகவல் பரிமாறப்பட்ட முறைமையானது, வழக்கமான  இருதரப்புத் தொடர்பாடல் முறைமைகளைப் புறக்கணித்து நிறுவப்பட்ட இராஜதந்திர நடைமுறைக்கு முரணான முறைமை என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.

மக்கள் தொடர்புகள் மற்றும் இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடும் இலங்கைப் பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க சமூகத்திற்கு கனடாவும் தாயகமாக உள்ளது. இலங்கை வம்சாவளி கனேடியர்களுக்கும் பிறப்பிடமான நாட்டிற்கும் இடையே வளமான மற்றும் மாறுபட்ட உறவு உள்ளது. இந்த சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் இலங்கைக்கு வழக்கமான வருகைகளை மேற்கொள்வதுடன்,  பலர் கனேடிய-இலங்கை இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். மேலே உள்ள அம்சங்கள் ஒரு துடிப்பான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைக்கு சான்றாகும்.

கனேடிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது சமூகங்களை துருவப்படுத்தலாம் என்பதுடன்,  சமூகப் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காக நடந்துகொண்டிருக்கும் செயன்முறைகளில் தீங்கு விளைவிக்கும் என்பது துரதிருஷ்டவசமானது. இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதில் இலங்கை தொடர்ந்தும் முன்னேற்றம் அடையும். கனடாவுடன் பேணப்படும் பன்முக ஈடுபாட்டை உணர்ந்து, இந்த இத் தீர்மானத்தை மீளாய்வு செய்வதற்கும், நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் இலங்கையுடனான இருதரப்பு பங்காளித்துவத்தில் பரந்த அடிப்படையிலான, செயலூக்கமான மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறையை நோக்கி நகர்வதற்கும் கனேடிய அதிகாரிகளைக் கோருவதற்கு இலங்கை விரும்புகின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 ஜனவரி 11

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close