கடமைகளைப் பொறுப்பேற்ற இலங்கைக்கான புதிய கனடா உயர்ஸ்தானிகர்

கடமைகளைப் பொறுப்பேற்ற இலங்கைக்கான புதிய கனடா உயர்ஸ்தானிகர்

 

கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்ட திரு ஹர்ஷ குமார நவரத்ன அவர்கள், 15 அக்டோபர் 2021 அன்று ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். உயர்ஸ்தானிகரகத்திற்கு வருகைபுரிந்த அவரை, அங்குள்ள அலுவலர்கள் வரவேற்றனர்.

புதிதாக தமது கடமைகளைப் பொறுப்பேற்றதும், உயர்ஸ்தானிகரக அலுவலர்கள் மத்தியில் உரையாற்றிய திரு நவரத்ன; கனடாவில் தனது முன்னுரிமைகளையும் அரசியல், பொருளாதாரம் மற்றும் இருநாட்டு மக்களுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தவேண்டிய தேவையையும் கோடிட்டுக் காட்டினார். மேலும் அவர், இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இணக்கப்பாட்டு முயற்சிகளைக் கட்டியெழுப்பவேண்டியதன் முக்கியத்துவத்தையும், இலங்கை பாரம்பரியத்தைக் கொண்ட அனைத்துச் சமூகத்தினருடனும் இணைந்து செயலாற்றவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய திரு நவரத்ன, உதவிகள் தேவைப்படும் அனைவருக்கும் உயர்ஸ்தானிகரகத்தின் கதவுகள் திறந்தேயிருக்கும் எனவும், அங்குள்ள அலுவலர்கள் அனைவரும் மக்களுக்குச் சேவையாற்றவேண்டிய தமது கடமைகளை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார். கனடாவிலிருந்து அதிக வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக இலங்கையின் இயலாற்றலை முன்னிலைப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

பரஸ்பர நன்மைகளுக்காக, வட அமெரிக்காவில் இலங்கையை ஒரு வர்த்தகச் சின்னமாக விருத்திசெய்வதில் இலங்கை ஜனாதிபதி ஒரு புதிய அணுகுமுறையைக் கொண்டுள்ளார் எனவும் புதிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். மேலும், மேற்கு நாடுகள் ஆசியா மீது கவனம் செலுத்திவருவதால், தெற்கு, தென் கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவிற்கான அமைதியான புகுவழியாக இலங்கை இருக்கக்கூடும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். தனது சான்றாதாரப் பத்திரங்களைச் சமர்ப்பித்தவுடனே, இருதரப்பு கூட்டுறவு மற்றும் ஒருங்கிணைப்பினை மேம்படுத்துவதற்காகத் தாம் கனடாவெங்கும் சுற்றுப்பயணம் செய்து, ஒரேமாதிரியான சிந்தனை கொண்ட மக்களைச் சந்திக்கவுள்ளதாகவும் புதிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

புதிய உயர்ஸ்தானிகர் தனது கடமைகளைப் பொறுப்பேற்பதைக் குறிக்கும்வண்ணம், உயர்ஸ்தானிகரக அலுவலர்களால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த ஒரு எளிமையான நிகழ்வில், இலங்கைப் பாரம்பரியத்தைப் பேணும் வகையில் பாற்சோறு மற்றும் சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டன. புதிய உயர்ஸ்தானிகரின் பாரியார் திருமதி நவரத்ன மற்றும் அவர்களது இளைய மகள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கனடாவிற்கான உயர்ஸ்தானிகராக புதிதாக நியமனம் பெற்றிருக்கும் திரு நவரத்ன அவர்களது சேவை வரலாறானது;  ‘சேவாலங்கா’ அறநிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் தலைவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், தாய்லாந்து, பாங்கொக்கிலுள்ள சர்வதேச பௌத்த ஈடுபாட்டு இணைப்புத்திட்டத்தின் தலைவர், ஜப்பான், டோக்கியோவிலுள்ள நிவானோ சமாதான அற நிறுவனத்தின் சமாதானப் பரிசுக்குழுவின் நிருவாக உறுப்பினர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என்பதாக புகழ்பெற்றதும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் உள்ளது.

இலங்கை உயர்ஸ்தானிகரகம்

ஒட்டாவா

18 அக்டோபர் 2021

Please follow and like us:

Close