ஒலிம்பிக்கில் பங்கேற்பதன் மூலமான இலங்கையின் மனிதாபிமான ஒத்துழைப்பிற்கு ஜப்பான் பாராட்டு

 ஒலிம்பிக்கில் பங்கேற்பதன் மூலமான இலங்கையின் மனிதாபிமான ஒத்துழைப்பிற்கு ஜப்பான் பாராட்டு

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த இலங்கையில் உள்ள ஜப்பானியத் துதுவர் மாண்புமிகு  அகிரா சுஜியாமா, ஜப்பான், டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இலங்கை காட்டிய மனிதாபிமான ஒத்துழைப்புக்கு நன்றிகளைத் தெரிவித்தார். இந்த சந்திப்பு ஆகஸ்ட் 09ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்றது.

அதிமேதகு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வேண்டுகோளின் பேரில், 1.45 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கிய ஜப்பான் அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும், இலங்கை அரசாங்கமும் அதன் மக்களும் நல்குகின்ற நன்றிகளை ஜப்பான் பிரதமருக்கு அமைச்சர் குணவர்தன தெரிவித்தார். இலங்கைக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு விரைவில் கிடைக்கச் செய்வதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த உடனடி நடவடிக்கைகளால் ஜப்பான் அரசாங்கம் மிகவும்  மகிழ்ச்சியடைவதாக ஜப்பானியத் தூதுவர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையேயான இராஜதந்திர உறவுகள் தாபிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெறுவதால், இரு நாடுகளினதும் இணைந்த நினைவேந்தல் விழாவை நடாத்துவது குறித்து விரிவாகக்  கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஜப்பானிய முதலீட்டின் கீழ் இலங்கையில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்த தகவல்களையும் இரு தரப்பினரும் பரிமாறிக் கொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஆகஸ்ட் 10

Please follow and like us:

Close