ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது குழுவின் தலைவராக நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, தூதுவர் மொஹான் பீரிஸ் நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது குழுவின் தலைவராக நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, தூதுவர் மொஹான் பீரிஸ் நியமனம்

ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான விடயங்களைக் கையாளும் ஐக்கிய  நாடுகள் சபையின் முதலாவது குழுவானது இலங்கையின் தூதுவரும் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதியுமான மொஹான் பீரிஸை 2022 செப்டெம்பர் 29ஆந் திகதி அதன் தலைவராக நியமித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் பணி முதன்மையாக ஆறு (6) முக்கிய குழுக்களால்  மேற்கொள்ளப்படுகின்றது. முதலாவது குழு ஆயுதக் குறைப்பு, உலகளாவிய சவால்கள் மற்றும் அமைதிக்கான அச்சுறுத்தல்கள், சர்வதேச சமூகத்தைப் பாதிக்கும் மற்றும் சர்வதேச பாதுகாப்பில் உள்ள சவால்களுக்கு தீர்வுகளைத் தேடுகின்றது. இந்தக் குழு ஐக்கிய நாடுகளின் ஆயுதக் குறைப்பு ஆணைக்குழு மற்றும் ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஆயுதக் குறைப்பு மாநாட்டுடன் நெருக்கமான ஒத்துழைப்பில் செயற்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது குழு 2022 அக்டோபர் 03ஆந் திகதி அதன் முக்கிய  பணியைத் தொடங்கும்.

தூதுவர் பீரிஸ் 2021 ஜனவரியில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப்  பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அவர் இலங்கை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதியரசராகவும் அதற்கு முன்னர் இலங்கையின் சட்டமா அதிபராகவும் பதவி வகித்துள்ளார். தூதுவர் பீரிஸ் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் ஆயுதக் குறைப்பு விடயங்கள் உட்பட ஐக்கிய நாடுகள் சபையிலும் அதற்குள்ளும் பணியாற்றிய விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவர் பலஸ்தீனிய மக்கள் மற்றும் ஏனைய ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் அரேபியர்களின் மனித உரிமைகளைப் பாதிக்கும் இஸ்ரேலிய நடைமுறைகளை விசாரணை செய்வதற்கான ஐ.நா. விஷேட குழுவின் தற்போதைய தலைவராக செயற்பட்டு வருகின்றார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம்,

நியூயோர்க்

2022 செப்டம்பர் 30

 

Please follow and like us:

Close