ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் காலித் கியாரி வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் காலித் கியாரி வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. வின் அரசியல், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமாதான  நடவடிக்கைகளுக்கான உதவிச் செயலாளர் திரு. காலித் கியாரி வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை 2021 நவம்பர் 23ஆந் திகதி, செவ்வாய்க் கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, தொற்றுநோய்க்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் மற்றும் இலங்கையில் நிலையான அபிவிருத்தி  இலக்குகளை அடைந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் உள்ளிட்ட இலங்கையின் கோவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய  மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் கலந்துரையாடினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உட்பட, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக  உள்நாட்டு செயன்முறைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றத்தை சுட்டிக் காட்டிய வெளிநாட்டு அமைச்சர், உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீள உறுதிப்படுத்தினார்.

இலங்கை தாமாக முன்வந்து ஏற்றுக்கொண்ட சர்வதேசக் கடமைகளுக்கு அமைவாக, நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியையும் அடைந்து கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என வெளிநாட்டு அமைச்சர்  சுட்டிக்காட்டினார்.

உதவிச் செயலாளர் நாயகம் கியாரியுடன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி ஹனா  சிங்கர் ஹம்டி மற்றும் ஏனைய ஐ.நா. அதிகாரிகள் இணைந்திருந்தனர். வெளியுறவுச் செயலாளர் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 76ஆவது கூட்டத் தொடரின் பக்க அம்சமாக இடம்பெற்ற அதிமேதகு ஜனாதிபதி மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பின் தொடர்ச்சியாக, இலங்கை அரசாங்கத்தின்  அழைப்பின் பேரில் உதவிச் செயலாளர் நாயகம் கியாரி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 நவம்பர் 24

 

Please follow and like us:

Close