உஸ்பெகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சரிடம் தூதுவர் பேராசிரியர் எம்.டி. லமாவன்ச தனது நற்சான்றிதழ்களைக் கையளித்தார்

உஸ்பெகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சரிடம் தூதுவர் பேராசிரியர் எம்.டி. லமாவன்ச தனது நற்சான்றிதழ்களைக் கையளித்தார்

உஸ்பெகிஸ்தான் குடியரசிற்கான இலங்கைத் தூதுவராக அதிகாரமளிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் எம்.டி. லமாவன்ச, உஸ்பெகிஸ்தான் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் கமிலோவ் அப்துல்அஸிஸ் காபிசோவிச் அவர்களிடம் தனது நற்சான்றிதழ்களை 2020 டிசம்பர் 21ஆந் திகதி கையளித்தார். இது தொடர்பான உத்தியோகபூர்வ வைபவம் மொஸ்கோவில் உள்ள உஸ்பெகிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்றதுடன், அதன் போது பல்வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பன்னிரண்டு தூதுவர்கள் கலந்து கொண்டனர்.

வெளிவிவகார அமைச்சர் தனது உரையில் தூதுவர்களின் நியமனத்திற்கான தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, அவர்களது இராஜதந்திரக் கடமைகளை நிறைவேற்றுவதில் வெற்றிகளைப் பெற்றுக் கொள்வதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சமீபத்திய ஆண்டுகளில், தனது வெளிநாட்டுப் பங்குதாரர்களுடன் நட்பு ரீதியான, பரஸ்பரம் நன்மை பயக்கும் உறவுகளை அபிவிருத்தி செய்வதில் குறிப்பிடத்தக்க இலக்குகளை உஸ்பெகிஸ்தான் எய்தியுள்ளது.

இலங்கை குறித்து கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் கமிலோவ், இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட நட்பு ரீதியான உறவுகள் மற்றும் உஸ்பெகிஸ்தானில் உயர் கல்வியைத் தொடர்வதற்காக இலங்கையர்களுக்கு வசதிகளை வழங்குதல் போன்ற விடயங்கள் குறித்து குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபை போன்ற பலதரப்பு அமைப்புக்களிலான பரஸ்பர ஒத்துழைப்பை வலியுறுத்திய அமைச்சர், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பல்வேறு துறைகளில் நடைமுறைத் தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளில் கூட்டுத் திட்டங்களை செயற்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். செழிப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராயும் முகமாக, மத்திய மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த இராஜதந்திரிகள் மற்றும் முக்கிய நிபுணர்களுடன் உயர்மட்ட சந்திப்புக்கள் அடுத்த வருடத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உஸ்பெகிஸ்தான் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், வெளிவிவகார அமைச்சர் கமிலோவ் அவர்களின் அன்பான கருத்துக்களுக்கும், நேர்த்தியான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தமைக்காக தூதுவர் அசாடோவிற்கும் தனது நன்றிகளை தூதுவர் லமாவன்ச தெரிவித்தார். இலங்கைத் தேயிலையை ஊக்குவிப்பதற்கும், இலங்கையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கும் அதிகமான வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கலாச்சார மற்றும் மத உறவுகளை உருவாக்குவதும் அபிவிருத்திக்கான சாத்தியமான பகுதிகளாகும்.

இலங்கைத் தூதரகம்
மொஸ்கோ

 

2020 டிசம்பர் 24

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close