செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான 5வது தெற்காசிய மன்றத்தின் முக்கிய உரையை ஆற்றிய வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, தற்போதைய கோவிட்-19 தொற்றுநோயின் சவால்களுக்கு மத்தியிலும் நிலையான அபிவிருத்தி அறிக்கை 2021 இன் படி, இலங்கை தனது உலகளாவிய தரவரிசையில் 7 இடங்களால் முன்னேறி 165 நாடுகளில் 87 வது இடத்தில் உள்ளது எனத் தெரிவித்தார். அரசாங்கத்தினால் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதை எடுத்துரைத்த அவர், உலகளாவிய ரீதியான இலட்சியங்களால் உந்தப்பட்டு, இலங்கை தனது சொந்த தேசிய அபிவிருத்தி இலக்குகளை நிர்ணயித்துள்ளதாகக் குறிப்பிட்டார். நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளில் தேசிய சூழல், முன்னுரிமைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அதிக கவனம் செலுத்தும் தலையீடுகள் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவைப்படும் பகுதிகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான அர்ப்பணிப்புத் தளங்களை இலங்கை நிறுவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நிலையான அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை அடைந்து கொள்வதில் தெற்காசியப் பிராந்தியத்திற்கு கோவிட்-19 இன் சமூகப் பொருளாதாரத் தாக்கங்கள் மிகப் பாரிய சவாலாக இருக்கும் என்றும், அதற்கேற்ப, அபிவிருத்திக்குப் போதுமான மற்றும் நிலையான நிதியுதவியை உறுதி செய்வது சவாலாக இருக்கும் என்றும் வெளியுறவுச் செயலாளர் சுட்டிக்காட்டினார். தொற்றுநோய்க்குப் பின்னர் இலங்கை தனது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நிலையில், நிலையான அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கான உருமாறும் பாதைகளைக் கண்டறியும் நோக்குடன் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதிலும் ஈடுபாட்டுடன் இருப்பதிலும் இலங்கையின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வெளியுறவுச் செயலாளர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசிய அலுவலகம், இலங்கையின் நிலையான அபிவிருத்தி சபை மற்றும் வெளிநாட்டு அமைச்சு ஆகியன இணைந்து இந்த மன்றத்தை '2030 நிகழ்ச்சி நிரலை முழுமையாக செயற்படுத்துகையில், கோவிட்-19 இலிருந்து சிறப்பாக மீண்டும் உருவாக்குதல்' என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்திருந்தன. தொற்றுநோய்க் காலப்பகுதியில் இலங்கையில் நடைபெற்ற முதலாவது சர்வதேச நிகழ்வான இதில், 6 நாடுகளைச் சேர்ந்த 36 பிரதிநிதிகள், பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசிய அலுவலக அதிகாரிகள், இலங்கையிலுள்ள ஐ.நா. அதிகாரிகள், அரச அதிகாரிகள், சிவில் சமூகத்தினர், சிந்தனையாளர்கள், வல்லுநர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் கலந்துகொண்டனர். அனுபவங்கள் மற்றும் அறிவைப் பகிரந்து கொள்;வதன் மூலம் பிராந்திய துணை நிகழ்ச்சி நிரலை ஆதரித்து, பூர்த்தி செய்வதற்கும், 2030 நிகழ்ச்சி நிரல் மற்றும் பிராந்திய வரைபடத்தை செயற்படுத்துவதில் உள்ள முக்கிய சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் குறித்த புரிதலை மேம்படுத்துவதற்கும் இது வழி வகுத்தது.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2021 நவம்பர் 19