உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி பங்கேற்பு

 உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி பங்கேற்பு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது கூட்டத்தொடரையொட்டி, 2023 செப்டம்பர் 19ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சி ஒத்துழைப்பு விளைவுகளின் உயர்மட்டக் கூட்டத்தில்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பங்கேற்றார். 'நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சி: நடவடிக்கை மற்றும் முன்னேற்றம்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்தக் கூட்டம் சீனாவின் துணை ஜனாதிபதி ஹான் ஜெங் தலைமையில் நடைபெற்றது.

உலக அபிவிருத்திக் கூட்டாண்மைகளுக்கு புத்துயிரளிப்பதன் மூலமும், வலுவான, பசுமையான மற்றும் ஆரோக்கியமான உலகளாவிய அபிவிருத்தியை  ஊக்குவிப்பதன் மூலமும், நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அடைவதற்கான முயற்சிகளை நிறைவு செய்யும் வகையிலான சீனாவின் இந்த முயற்சியின் மூலம், கடந்த 2 ஆண்டுகளில் வழங்கப்பட்ட உறுதியான முடிவுகள் மற்றும் பலன்களை அமைச்சர் தனது அறிக்கையில் பாராட்டினார். இரண்டாவது பாதி ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்காக என்னென்ன புதிய உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா. வின் உறுப்பு நாடுகள் யோசித்துக்கொண்டிருக்கும்போது, உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சி 2030 நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்கு புதிய உத்வேகத்தை அளிக்கின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி மேலும் தெரிவிக்கையில், உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியானது அபிவிருத்திக்கு முன்னுரிமை அளித்தல்,  மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை, அனைவருக்கும் நன்மைகளை வழங்கி, எந்தவொரு நாட்டையும் எந்த நபரையும் பின்னோக்கி விட்டுச் செல்லாதிருத்தில், புதுமை உந்துதல் அபிவிருத்தி, மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான நல்லிணக்கம் மற்றும் முடிவு சார்ந்த செயல்கள் போன்ற சில அடிப்படைக் கொள்கைகளுக்கு அடித்தளம் அமைத்துள்ளதாகத் தெரிவித்தார். உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் கீழ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பில் இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான உதவிகளையும் அவர் பாராட்டினார்.

உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியை 2021 இல் ஐ.நா. பொதுச் சபையின் போது ஜனாதிபதி ஜி ஜின்பிங் முன்மொழிந்தார். இது அபிவிருத்திக்கான  உலகளாவிய சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், அபிவிருத்தி மற்றும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளை, நிலையான அபிவிருத்திக்கான ஐ.நா.வின் 2030 நிகழ்ச்சி நிரலை விரைவாக செயற்படுத்த முயற்சிக்கின்றது. கடந்த 2 வருடங்களில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சிக்கு ஆதரவளித்துள்ளதுடன், இலங்கை உட்பட 60 க்கும் மேற்பட்ட நாடுகள் உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் நண்பர்கள் குழுவில் இணைந்துள்ளன.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 செப்டம்பர் 20

...............................................

உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சி ஒத்துழைப்பு விளைவுகள் குறித்த உயர்மட்டக் கூட்டம்

2023 செப்டம்பர் 19

மாண்புமிகு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் அறிக்கை

கௌரவ சீனாவின் துணை ஜனாதிபதி ஹான் ஜெங் அவர்களே,

மேன்மை தங்கியவர்களே,

கனவாட்டிகளே மற்றும் கனவான்களே,

இந்த உயர்மட்ட முன்முயற்சியை மிக சரியான நேரத்தில் கூட்டியதற்காக சீனாவின் பிரதிநிதிகளுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.

எமது உலகம் எவ்வளவு பலவீனமானது என்பதை கோவிட்-19 தொற்றுநோய் எமக்கு நிரூபித்துள்ளது. காலநிலை மாற்றம், நிதி நெருக்கடிகள், டிஜிட்டல் பிளவு  மற்றும் மோதல்கள் உள்ளிட்ட தற்போதைய உலகளாவிய சவால்களுடன் இணைந்த தொற்றுநோய் சமத்துவமின்மையை அதிகப்படுத்தி, வடக்கு - தெற்கு பிரிவினையை விரிவுபடுத்தியுள்ளது. நிலையான அபிவிருத்தி இலக்குகளை செயற்படுத்தும் பாதி வழியில், நாம் இப்போது நிலையான அபிவிருத்தி இலக்குகளை மீட்பது குறித்து பேசுகின்றோம். இந்தச் சவால்களை எதிர்கொண்டால், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள்தான் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன.

கடந்த வாரம் கியூபாவில் நடைபெற்ற ஜி77 மாநாடு மற்றும் சீனா கூட்டத்தில், உலகளாவிய நிதிக் கட்டமைப்பு, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் தேவைகளுக்கு அதிக பிரதிநிதித்துவமாகவும், பதிலளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் குறிப்பிட்டார். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இருந்த யதார்த்தங்களுக்குப் பதிலாக இன்றைய யதார்த்தங்களைப்  பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச அமைப்பு மற்றும் சர்வதேச நிறுவனங்களை மறுவடிவமைக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தச் சூழலில், உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் நண்பர்கள் குழுவின் உறுப்பினராக, கடந்த 2 ஆண்டுகளில், சீன முயற்சியின் மூலம் வழங்கப்பட்ட  உறுதியான முடிவுகள் மற்றும் நன்மைகளை இலங்கை பாராட்டுகின்றது. உலகளாவிய அபிவிருத்திக் கூட்டாண்மைகளை புத்துயிர் பெறச் செய்வதன் மூலமும், வலுவான, பசுமையான மற்றும் ஆரோக்கியமான உலகளாவிய அபிவிருத்தியை ஊக்குவிப்பதன் மூலமும் நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அடைவதற்கான முயற்சிகளை இது நிறைவு செய்கின்றது.

உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியானது அபிவிருத்திக்கு முன்னுரிமை அளித்தல், மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை, அனைவருக்கும் நன்மைகள் மற்றும் எந்த நாட்டையும் யாரையும் பின்தள்ளாமல் இருத்தல், புதுமை உந்துதல் வளர்ச்சி, மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான நல்லிணக்கம் மற்றும்  முடிவு சார்ந்த செயல்கல் போன்ற சில அடிப்படைக் கொள்கைகளுக்கு அடித்தளம் அமைத்துள்ளது. தலைவர் அவர்களே, இலங்கை அந்தக் கொள்கைகளுக்கு அர்ப்பணிப்புப் பூணுகின்றது.

ஐ.நா.வின் உறுப்பு நாடுகளாகிய நாம், இரண்டாம் பாதியில் ஆட்டத்தில் வெற்றி பெற என்ன புதிய உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சி 2030 நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்கு புதிய உத்வேகத்தை அளிக்கின்றது. முதலாவதாக,  அபிவிருத்திக்கான சர்வதேச ஒத்துழைப்பை மறுசீரமைப்பதன் மூலமும், அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக சர்வதேச ஒருமித்த கருத்தை உருவாக்குவதன் மூலமும், அபிவிருத்தியை மீண்டும் சர்வதேச நிகழ்ச்சி நிரலின் மையத்திற்கு கொண்டு வருவதன் மூலமும் பொதுவான அபிவிருத்திக்கான தெளிவான அழைப்பை இது ஒலிக்கின்றது. இரண்டாவதாக, வளங்களை சேகரிப்பதற்கும், அபிவிருத்தியைத் தடுப்பதில் உள்ள சிரமங்களை நிவர்த்தி செய்வதற்கும், அதிக செயற்றிறனுக்கான ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்கும் இது வலுவான உத்வேகத்தை அளிக்கின்றது. மூன்றாவதாக, எட்டு முன்னுரிமைப் பகுதிகள் மற்றும் 2030 நிகழ்ச்சி நிரலை விரைவாகச் செயற்படுத்துவதற்கான சாத்தியமான பாதைகளை வழங்குவதன் மூலம் ஒத்துழைப்பு வாயிலான அபிவிருத்திக்கான விரைவான பாதைகளை இது நிறுவுகின்றது. நான்காவதாக, சிந்தனைக் குழுக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தமது வகிபாகங்களை ஆற்றுவதற்கும், உலகளாவிய அபிவிருத்தி மற்றும் 2030 நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்கும் நுண்ணறிவு மற்றும் அறிவுசார் ஆதரவை வழங்குவதற்காக அழைக்கப்படுகின்றன.

மேன்மை தங்கியவர்களே,

கடந்த ஆண்டில் இலங்கை அடைந்த பொருளாதார, சமூக மற்றும் நிதி நிலைப்படுத்தல் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் பொருளாதார மீட்சிக்கான வாய்ப்புக்கள் குறித்து அவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இலங்கை 163 நாடுகளில் 70.0 என்ற மேம்பட்ட மதிப்பெண்களுடன் 76 வது இடத்தில்  உள்ளதுடன், இது பிராந்திய சராசரியை விட உயர்வானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. யுனெஸ்கெப் மேற்கொண்ட சமீபத்திய பகுப்பாய்வின்படி, நிலையான அபிவிருத்தி இலக்கு தரவு கிடைப்பதில், ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 53 நாடுகளில் இலங்கை 10வது இடத்தில் உள்ளது.

உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் கீழ் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் உணவுப் பாதுகாப்பில் இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான உதவிகளை நாங்கள் பாராட்டுகின்றோம். அதன் நிதியத்தின் கீழ் செயற்படுத்தப்பட்ட திட்டங்களை நாம் பாராட்டுக்களுடன் குறிக்கும் அதே வேளையில், உலகளாவிய  அபிவிருத்தி முன்முயற்சியை நடைமுறைப்படுத்துவதற்காக சீன மக்கள் குடியரசின் புதிய 10 பில்லியன் அமெரிக்க டொலர் விஷேட நிதியை இலங்கை வரவேற்கின்றது.

உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியானது தெற்கு - தெற்கு ஒத்துழைப்புக்கான எமது நிறுவனத் திறன்களை அதிகரிப்பதை நாங்கள் அவதானிக்கின்ற  அதே வேளை, தெற்கு - தெற்கு ஒத்துழைப்புக்கான உயர்மட்டக் குழுவின் தலைமைத்துவத்தின் போது, இலங்கை இத்துறையில் ஈடுபடுவதற்கு எதிர்பார்க்கின்றது.

அனைவரும் பாதுகாப்பாக இருந்தாலன்றி, எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை கடந்த தொற்றுநோய் எமக்கு தெளிவாகக் கற்றுத் தந்த போதிலும்,  அபிவிருத்தி இலக்குகளைத் தொடர்வதற்காக ஒத்துழைப்பதற்கும் ஒன்றாக செயற்படுவதற்கும் பதிலாக, சில சமயங்களில் துருவமுனைப்பு இந்த முக்கியமான பணியின் உண்மையான முன்னேற்றத்தைத் தடுக்கின்றது.

நன்றி.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close