உயர்ஸ்தானிகர் அமரசேகர பொட்ஸ்வானாவின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சருடன் சந்திப்பு

 உயர்ஸ்தானிகர் அமரசேகர பொட்ஸ்வானாவின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சருடன் சந்திப்பு

அண்மையில் பொட்ஸ்வானா குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தென்னாபிரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர்  சிறிசேன அமரசேகர, பொட்ஸ்வானாவின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி லெமோகாங் குவாபேவுடன் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். உயர்ஸ்தானிகர் அமரசேகர, இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் வாழ்த்துக்களை கலாநிதி லெமோகாங் குவாப்பிற்குத் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை உயர்ஸ்தானிகர் அமரசேகர மதிப்பீடு செய்த அதே  வேளையில், பொட்ஸ்வானாவின் பொருளாதாரம் மற்றும் பொது நிர்வாக முறைமைக்கு இலங்கையின் தொழில் வல்லுநர்கள் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அமைச்சர் குவாபே பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

பொட்ஸ்வானாவின் வைரத் தொழில்துறைக்கும் இலங்கையின் இரத்தினம் மற்றும் ஆபரணத் தொழில்துறைக்கும் இடையிலான  ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி, அதிக தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காகவும், அதிகரித்த பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்வதற்காகவும் இந்தத் தொழில்களின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். பொட்ஸ்வானாவில் அகழ்தெடுக்கப்பட்ட உயர்தர வைரங்களை இலங்கையின் திறமையான ஆபரணக் கைவினைஞர்களால் உயர் ரக ஆபரணங்களாக வடிவமைக்க முடியுமாதலால், தொழில்துறை ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.

மேலும், இலங்கை மற்றும் பொட்ஸ்வானா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள தேயிலை கைத்தொழில்களுக்கு இடையேயான  ஒத்துழைப்பை ஊக்குவித்தல் குறித்து அமைச்சர் குவாபே கவனத்தை ஈர்த்தார்.

தென்னாபிரிக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் பொட்ஸ்வானா குடியரசிற்கும் ஒரே நேரத்தில் இணை அங்கீகாரம்  பெற்றதாகும்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

பிரிட்டோரியா

2021 டிசம்பர் 0​4

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close