'இலங்கை தினம் - 2021' - புத்தகம் மற்றும் கலாச்சாரக் கண்காட்சி

 ‘இலங்கை தினம் – 2021’ – புத்தகம் மற்றும் கலாச்சாரக் கண்காட்சி

இலங்கையின் கலாச்சாரம், சிலோன் தேயிலை, சுற்றுலா மற்றும் இலங்கைத் தயாரிப்புக்களை மேம்படுத்தும் நோக்கத்துடன், ரஷ்ய  அரச நூலகத்துடன் இணைந்து ரஷ்யக் கூட்டமைப்பில் உள்ள இலங்கைத் தூதரகம் 'இலங்கை தினம் – 2021' ஒன்றை 2021 நவம்பர் 23ஆந் திகதி ரஷ்ய அரச நூலகத்தின் ஓரியண்டல் இலக்கிய நிலையத்தின் மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்வில் இலங்கையின் புராதனக் கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியங்கள் மற்றும் தனித்துவமான பழக்கவழக்கங்கள், இலங்கைத்  தீவின் அற்புதமான காட்சிகள் மற்றும் கவரக்கூடிய இடங்கள் மற்றும் சிலோன் தேயிலை ஆகியவை தூதரக ஊழியர்களால் வழங்கப்பட்டன. நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கான பயணத்தின் இலகு நிலையை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் பிரதிநிதி ஒருவர் எடுத்துக்காட்டினார். இலங்கையின் பாரம்பரிய நடனங்கள், ரஷ்ய இளைஞர்கள் மற்றும் தூதரகத்தால் நடாத்தப்படும் இணையவழி சிங்களப் பாடநெறி மாணவர்களால் இசைக்கப்பட்ட சிங்களப் பாடல்கள், பட்டிக் ஆடைகள் மற்றும் இலங்கை திருமண ஆடைகள் அடங்கிய பெஷன் ஷோ நிகழ்ச்சி ஆகியன பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இடம்பெற்றன.

கலாச்சாரம், வர்த்தகம், சுற்றுலா மற்றும் தேயிலை தொடர்பான துறைகள் மற்றும் ரஷ்ய ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 30 விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனித ஏ. லியனகே, ரஷ்ய அரச  நூலகத்தின் பிரதிப் பணிப்பாளர் நடால்யா சமோலென்கோ, ரஷ்ய அரச நூலகத்தின் ஓரியண்டல் இலக்கிய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் மிகைல் மிலானின் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் உள்ள தேசிய கைவினைப் பேரவையிடமிருந்து பெறப்பட்ட பல கலாச்சாரப் பொருட்களை அரச ஓரியண்டல் கலை  அருங்காட்சியகம் மற்றும் மானுடவியல் மற்றும் இனவியலுக்கான பீட்டர் தி கிரேட் மியூசியம் (குன்ஸ்ட்கமேரா) ஆகிய இரண்டிற்கும் நிகழ்வின் போது இலங்கைத் தூதரகம் வழங்கி வைத்தது. ரஷ்ய அரச நூலகத்திற்கும், ரஷ்ய அரச நூலகத்தின் ஓரியண்டல் இலக்கிய நிலையத்திற்கும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்யப் புத்தகங்களை நன்கொடையாக வழங்கியது.

2021 நவம்பர் 23 முதல் 30 வரை திறந்திருக்கும் ரஷ்ய அரச நூலகத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியின் போது, ரஷ்ய அரச நூலகத்தின் சிங்களம், தமிழ், ரஷ்யன் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட வெளியீடுகளை பார்வையாளர்களை அறிமுகப்படுத்தி வைக்கும். இலங்கையிலிருந்து பாரம்பரிய ஆடைகள், சடங்குகள் மற்றும் நாடக நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும்  மர முகமூடிகள், இசைக்கருவிகள், ஆபரணங்கள், பித்தளைப் பொருட்கள் மற்றும் பட்டிக் ஓவியங்கள் போன்ற கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அன்றாட வாழ்வின் பல பொருட்களை கண்காட்சிக்காக தூதரகம் வழங்கியது.

தொற்றுநோய் சார்ந்த கட்டுப்பாடுகளின் காரணமாக, தளத்திற்கான அனுமதி மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன், இந் நிகழ்வைப்  பார்வையிட முடியாதவர்களால் தூதரகத்தின் சமூக ஊடகத் தளங்களின் வாயிலாக இணையவழியில் பார்வையிட முடிந்தது.

இலங்கைத் தூதரகம்,

மொஸ்கோ

2021 டிசம்பர் 03

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close