இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களுக்கு வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இரவு விருந்துபசாரமளிப்பு

 இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களுக்கு வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இரவு விருந்துபசாரமளிப்பு

இஸ்லாமிய நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நவம்பர் 30ஆந் திகதி கொழும்பில் இரவு  விருந்துபசாரமளித்தார். மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இந்த நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டார்.

இலங்கையில் வரலாற்று ரீதியாகவும் அண்மைக்கால அரசியல் மற்றும் சமூக வாழ்வியலிலும் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர்  ஆற்றிய ஆக்கபூர்வமான வகிபாகம் தொடர்பில் இஸ்லாமியத் தூதுவர்களுடன் அமைச்சர் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். இலங்கையின் முஸ்லிம் சமூகத்துடனான இந்த செழுமையான இடைத்தொடர்பானது, சர்வதேச சமூகத்தின் இஸ்லாமிய அரசுகளுடன் இலங்கை அனுபவிக்கும் மிகவும் சுமுகமான உறவுகள் வரை நீண்டுள்ளது.

எந்தவொரு மத, இன மற்றும் சாதிப் பாகுபாடின்றி ஒவ்வொருவரும் தமது சொந்த மதம், கலாசாரம் மற்றும் மொழியைக் கடைப்பிடிப்பதன் மூலம் தமது அடையாளத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை அனுபவிக்கும் சமூகமாக இலங்கை தனது வளமான ஜனநாயகப்  பாரம்பரியத்தை தொடர்ந்தும் பேணிவரும் என அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் முஸ்லிம், கண்டிய மற்றும் தமிழ் சமூகங்களுக்கான தனிப்பட்ட சட்டங்களை உள்ளடக்கும் இலங்கையின் வளமான மற்றும் மாறுபட்ட சட்ட மரபிலும் இது பிரதிபலிக்கின்றது.

சமீபத்திய ஆண்டுகளில், உலகின் ஏனைய பகுதிகளைப் போலவே, பல்வேறு நம்பிக்கைகளின் பெயரால், நவீன தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் சமூக ஊடகங்களுக்கான நிர்வாகமற்ற அணுகல் உட்பட தீவிரவாதிகளின்  குழுக்கள் இந்த சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும், எமது சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவும் முயன்றன. இவ்வாறான வெறுப்புணர்வைத் தடுக்கும் வகையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்தும் இஸ்லாமியத் தூதுவர்களுக்கு அமைச்சர் விளக்கினார்.

மதம் மற்றும் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை ஆகியன இலங்கையின் பலமாகும் என்பதை ஒப்புக்கொண்ட தூதுவர்கள், தீவிரவாதக் கூறுகளால் பரப்பப்பட்ட தெளிவற்ற தன்மைகளைத் தெளிவுபடுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் மற்றும் முஸ்லிம் சமூகத்துடன் சம்பந்தப்பட்ட ஏனைய சமீபத்திய முன்னேற்ற நடவடிக்கைகளில் நம்பிக்கையை வெளிப்படுத்தினர். இந்த முயற்சிகளில்  இலங்கையுடனான தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியதோடு, பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றம் தொடர்பான சவால்களை வெற்றிகொள்வதிலும் தமது ஒத்துழைப்பை வெளிப்படுத்தினர்.

வெளிப்படையான மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் மற்றும் இலங்கை மீதான நல்லெண்ணத்திற்காக தூதுவர்களுக்கு  மாண்புமிகு பிரதமரும், வெளிநாட்டு அமைச்சரும் நன்றிகளைத் தெரிவித்தனர்.

ஓமான் சுல்தானேற்று, பலஸ்தீனம், சவூதி அரேபிய இராச்சியம், ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு, கட்டார், துருக்கிக்  குடியரசு  ஆகியவற்றின் தூதுவர்கள், மலேசியா, மாலைதீவுக் குடியரசு, பங்களாதேஷ் மக்கள் குடியரசு ஆகியவற்றின் உயர்ஸ்தானிகர்கள், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் பதில் உயர்ஸ்தானிகர் மற்றும் லிபியா, எகிப்து அரபுக் குடியரசு, குவைத், ஈரான் இஸ்லாமியக் குடியரசு, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றின் தூதரகப் பொறுப்பாளர்கள் இந்த இரவு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 டிசம்பர் 02

Please follow and like us:

Close