வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இஸ்ரேல் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு வென்டிலேட்டர்களை (வி.ஜி. 70 வென்டிலேட்டர் மற்றும் விவோ 65 மேம்பட்ட வீட்டுப் பராமரிப்பு வென்டிலேட்டர்) சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர். எஸ்.எச். முனசிங்க அவர்களிடம் 2020 டிசம்பர் 24ஆந் திகதியாகிய இன்று வெளிநாட்டு அமைச்சில் வைத்து முறையாகக் கையளித்தார்.
இலங்கைக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள புதுடில்லியில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்தின் மூலம் இந்த இரண்டு வென்டிலேட்டர்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன. 2020 டிசம்பர் 10ஆந் திகதி நன்கொடையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுடில்லியில் வதியும் இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவர் கலாநிதி. ரொன் மல்கா அவர்களுடனான மெய்நிகர் சந்திப்பின் போது, இலங்கையின் நன்றிகளை வெளியுறவுச் செயலாளர் கொலம்பகே இஸ்ரேல் அரசாங்கத்திற்குத் தெரிவித்தார். விவசாயம், தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் திறன் அபிவிருத்தி உள்ளிட்ட பல துறைகளிலான எதிர்கால ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்தும் இந்த மெய்நிகர் சந்திப்பின் போது இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
பயன்படுத்தப்படவுள்ள இந்த இரண்டு வென்டிலேட்டர்களும், சுகாதாரத் துறைக்கான ஆதரவாகவும், இதன் தேவை அதிகமுடைய தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலுள்ள பல கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் பங்களிப்புச் செய்யும்.
கொழும்பில் உள்ள இஸ்ரேலுக்கான கௌரவ துணைத் தூதுவர் விக்கி விக்ரமசிங்க மற்றும் வெளிநாட்டு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2020 டிசம்பர் 24