இலங்கை வெளிநாட்டுச் சேவையில் (எஸ்.எல்.எஃப்.எஸ்) இணைவதற்குரிய 40 தகுதியானவர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளமையை வெளிநாட்டு அமைச்சு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றது.
இது தொடர்பான 2021 ஏப்ரல் 09ஆந் திகதிய இல. 2,223 வர்த்தமானி அறிவித்தலை http://www.documents.gov.lk/files/gz/2021/4/2021-04-09(I-IIA)E.pdf இல் பெற்றுக் கொள்ளலாம்.
இலங்கை வெளிநாட்டுச் சேவை அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு அதிகாரமுடைய பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வகுக்கப்பட்டுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைய, பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் சில வருடங்களுக்கு ஒரு முறை வெளிநாட்டுச் சேவை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள்.
சேவையில் இணைவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வெளிநாட்டு அமைச்சில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதுடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் 67 தூதரகங்களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
இலங்கை வெளிநாட்டுச் சேவை (எஸ்.எல்.எஃப்.எஸ்) என்பது இலங்கையில் 1949 இல் நிறுவப்பட்ட ஒரு தனித்துவமான பொதுச் சேவையாகும். இது தொழில்சார் இராஜதந்திரிகளைக் கொண்ட சேவையாகும்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஏப்ரல் 09


