செயின்ட் பெனில்ட் ஹோட்டல், உணவகம் மற்றும் நிறுவன முகாமைத்துவப் பாடசாலையின் டி லா சால்லே கல்லூரி மற்றும் மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் சுற்றுலா சேவைகள் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம் குறித்த மெய்நிகர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை 2021 நவம்பர் 8-12 வரை முப்பத்திரண்டு இலங்கைப் பங்குதாரர்களுக்கு வெளிநாட்டு அலுவல்கள் திணைக்களம் - பிலிப்பைன்ஸின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு சபை ஆரம்பித்தது.
ஐந்து நாள் பயிற்சி வகுப்பின் போது, ஒத்திசைவான மெய்நிகர் விரிவுரைகள், கலந்துரையாடல்கள், விடயப் பகுப்பாய்வு, விளக்கக்காட்சிகள், விளக்க அமர்வுகள், ஹோட்டல் முகாமைத்துவம், வாடிக்கையாளர் சேவை மற்றும் விருந்தினர் உறவுகள், சுற்றுலா நிலைத்தன்மை முகாமைத்துவம் மற்றும் நெருக்கடி முகாமைத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. செயின்ட் பெனில்ட் ஹோட்டல், உணவகம் மற்றும் நிறுவன முகாமைத்துவப் பாடசாலையின் டி லா சால்லே கல்லூரியின் ஆசிரியர் குழாமைச் சேர்ந்த வளப் பேச்சாளர்கள் மற்றும் பாட நிபுணர்கள் இந்த பயிற்சி அமர்வுகளை எளிதாக்கினர்.
வெளிநாட்டு அலுவல்கள் திணைக்களம் - பிலிப்பைன்ஸின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு சபையின் பணிப்பாளர் நாயகம் லில்லிபெத் டீபேரா அம்மணி தனது ஆரம்ப உரையில், இந்தப் பாடநெறியானது 2019 இல் இலங்கைக்கான அவர்களின் தேவைகளை மதிப்பிடும் பயணத்தின் அடிப்படையில் இலங்கைக்கான அவர்களது நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டமாகும் எனக் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியானது பிலிப்பைன்ஸில் உள்ள இலங்கைப் பங்குதாரர்களின் தூதுக்குழுவுடன் உள்நாட்டுப் பயிற்சிக்காக நடாத்தப்படவிருந்தது. இருப்பினும், தற்போதைய கட்டுப்பாடுகள் விஜயத்திற்கு இடையூறாக அமைந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, பரஸ்பர நன்மைக்காக இரு நாடுகளும் அதன் அனுபவங்கள், நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சியில் பணியாற்றியமைக்காக, வெளிநாட்டு அலுவல்கள் திணைக்களம் - பிலிப்பைன்ஸின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு சபை மற்றும் செயின்ட் பெனில்ட் ஹோட்டல், உணவகம் மற்றும் நிறுவன முகாமைத்துவப் பாடசாலையின் டி லா சால்லே கல்லூரி மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை போன்ற இலங்கையின் வரிசை முகவர்களுக்கு தூதுவர் ஷோபினி குணசேகர தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களின் தொழில்துறையின் முக்கியத்துவத்தை முக்கியமானதொரு பொருளாதார நடவடிக்கையாகக் கருதி, தடையற்ற சுற்றுலா மீட்சிக்காக பங்குதாரர்களை ஊக்குவிக்கும் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
பங்களாதேஷிற்கான பிலிப்பைன்ஸ் தூதுவர் கௌரவ அலன் டெனிகா மற்றும் செயின்ட் பெனில்ட் ஹோட்டல், உணவகம் மற்றும் நிறுவன முகாமைத்துவப் பாடசாலையின் டி லா சால்லே கல்லூரியின் கல்வியாளர்களின் துணைவேந்தர் திரு. ஏஞ்சலோ மார்கோ யு. லாக்சன் ஆகியோர் இந்த நடவடிக்கைக்கான ஆதரவை வெளியிட்டனர்.
மெய்நிகர் பட்டமளிப்பு விழாவின் மூலமாக 2021 நவம்பர் 19ஆந் திகதி பயிற்சித் திட்டம் நிறைவுக்கு வந்தது.
தொழில்நுட்ப உதவித் திட்டம் என்பது பிலிப்பைன்ஸ் நிபுணத்துவம் பெற்ற பகுதிகளில் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள வெளிநாட்டு அலுவல்கள் திணைக்களம் - பிலிப்பைன்ஸின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு சபையின் தெற்கு ஒத்துழைப்பு முன்முயற்சியாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதன் மூலம் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் பரஸ்பர குறிக்கோளுடன் மேற்கூறியவை உட்பட பிலிப்பைன்ஸின் வெளிநாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் தொடர் நடவடிக்கைகள் அனைத்தும் இயைபானவையாக அமைகின்றன.
இலங்கைத் தூதரகம்,
மணிலா
2021 நவம்பர் 29