'இலங்கை நாள் - 2021' மற்றும் புத்தகம் மற்றும் கலாச்சார கண்காட்சி

‘இலங்கை நாள் – 2021’ மற்றும் புத்தகம் மற்றும் கலாச்சார கண்காட்சி

இலங்கையின் கலாச்சாரம், சிலோன் தேயிலை, சுற்றுலா மற்றும் இலங்கைத் தயாரிப்புக்களை ஓக்குவிக்கும் நோக்கில், ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ரஷ்ய அரச நூலகத்துடன் இணைந்து 'இலங்கை நாள் - 2021' ஐ ரஷ்ய அரச நூலகத்தின் ஓரியண்டல் இலக்கிய மையத்தின் மாநாட்டு மண்டபத்தில் 2021 நவம்பர் 23ஆந் திகதி ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்வில் இலங்கையின் கலாச்சாரம், வரலாறு, மரபுகள் மற்றும் தனித்துவமான பழக்கவழக்கங்கள், சிலோன் தேயிலை, அற்புதமான காட்சிகள் மற்றும் தீவு குறித்த விளக்கங்கள் தூதரக ஊழியர்களால் வழங்கப்பட்டன. ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்குதல் மற்றும் வீசா நடைமுறையிலான தளர்வு ஆகியவற்றுடன் எளிதாகப் பயணம் செய்வது குறித்து ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் பிரதிநிதி ஒருவர் எடுத்துக்காட்டினார். இலங்கையின் பாரம்பரிய நடனங்கள், ரஷ்ய இளைஞர்கள் மற்றும் தூதரகத்தால் நடாத்தப்பட்ட சிங்களப் பாடநெறியைக் கற்றுக் கொண்ட மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட சிங்களப் பாடல்கள் மற்றும் பட்டிக் ஆடைகள் மற்றும் இலங்கையின் திருமண ஆடைகள் உள்ளிட்ட பெஷன் ஷோ ஆகியவற்றின் வண்ணமயமான தொகுப்புக்களுடன் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலாச்சாரம், வர்த்தகம், சுற்றுலா, தேயிலை தொடர்பான தளங்கள் மற்றும் ரஷ்ய ஊடகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 50 விருந்தினர்கள், ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனித ஏ. லியனகே, ரஷ்ய அரச நூலகத்தின் பிரதிப் பணிப்பாளர் நடால்யா சமோலென்கோ மற்றும் ரஷ்ய மாநில நூலகத்தின் ஓரியண்டல் இலக்கிய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் மிகைல் மிலானின் ஆகியோர் கலந்துகொண்டனர். தொற்றுநோய் கட்டுப்பாடுகள் காரணமாக உள்நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தமையினால், நிகழ்வைப் பார்வையிட முடியாதவர்களால் தூதரகத்தின் சமூக ஊடகங்களின் மூலம் இணையவழியில் பார்வையிட முடிந்தது.

இந்த நிகழ்வின் போது, தேசிய கைவினைக் கழகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பல கலாச்சாரப் பொருட்களை அரச ஓரியண்டல் கலை அருங்காட்சியகத்திற்கும், பீட்டர் தி கிரேட் மியூசியம் மானுடவியல் மற்றும் இனவியல் அருங்காட்சியகத்திற்கும் (குன்ஸ்ட்கமேரா) தூதரகம் வழங்கியது. சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்யப் புத்தகங்கள் அரச நூலகம் மற்றும் ரஷ்ய அரச நூலகத்தின் ஓரியண்டல் இலக்கிய நிலையத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்தக் கண்காட்சியில் இலங்கை, சோவியத் ஒன்றியம், ரஷ்யா மற்றும் உலகின் ஏனைய நாடுகளில் வெளியிடப்பட்ட சிங்களம், தமிழ், ரஷ்யன் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலான ரஷ்ய அரச நூலகத்தின் புத்தகங்கள் அடங்கியிருந்தன. 2021 நவம்பர் 23 முதல் 30 வரை நூலக வாசகர்களுக்காக இந்தக் கண்காட்சி திறந்திருக்கும் என்பதுடன்,இது இலங்கையின் சிறந்த எழுத்தாளரான மார்ட்டின் விக்கிரமசிங்கவின் நாவல்கள் மற்றும் கதைகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட வெளியீடுகளை உள்ளடக்கியுள்ளது.

இலங்கையின் கலாச்சாரம் மற்றும் அன்றாட வாழ்வின் பல பொருட்கள், பாரம்பரிய உடைகள், சடங்குகள் மற்றும் நாடக நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் மர முகமூடிகள், இசைக்கருவிகள், நகைகள் மற்றும் பெட்டிகள், பித்தளைப் பொருட்கள், பட்டிக் ஓவியங்கள் போன்றவற்றை கண்காட்சிக்காக தூதரகம் வழங்கியது.

'இலங்கை நாள் - 2021' முன்முயற்சியை நடைமுறைப்படுத்துவதற்கு உதவிய அனைவருக்கும் தூதரகம் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

−         ரஷ்ய அரச நூலகத்தின் நிர்வாகம் மற்றும் ஓரியண்டல் இலக்கிய நிலையம்;

−         ஓய்வு மற்றும் கலாச்சாரத்திற்கான மார்ஃபினோ நிலையத்திலிருந்து நாட்டுப்புற குரல் ஸ்டுடியோ 'அஸூர் சபையர்' மாணவர்கள்;

−         பாரம்பரிய மற்றும் தேசிய நடனங்கள் மற்றும் பட்டிக் ஆடைகளின் மாதிரிக் காட்சியை நிகழ்த்திய இலங்கை மாணவர்கள்;

−         பட்டிக் ஆடைகளின் மாதிரி நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த தூதரகத்தின் பயிற்சியாளர்கள்;

−         இணையவழி சிங்கள பாடநெறியைக் கற்றுக் கொண்ட ரஷ்ய மாணவர்கள், சிங்களத்தில் ஒரு பாடலை நிகழ்த்தியவர்கள்;

−         அனைத்து இலங்கை மற்றும் ரஷ்யத் தன்னார்வலர்கள்;

−         நிகழ்வின் அனைத்து அனுசரணையாளர்கள் மற்றும் பலர்.

இலங்கைத் தூதரகம்,

மொஸ்கோ

2021 நவம்பர் 29

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close