இலங்கையின் வெளிவிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி ஜ.ச. இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அமைச்சர்கள் குழுவின் 23வது கூட்டம், கொழும்பு

இலங்கையின் வெளிவிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி ஜ.ச. இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அமைச்சர்கள் குழுவின் 23வது கூட்டம், கொழும்பு

மேன்மை தங்கியவர்களே, மாண்புமிகு அமைச்சர்களே, மாண்புமிகு இராஜாங்க அமைச்சர்களே, பிரதிநிதிகள் குழுத் தலைவர்களே, இந்து சமுத்திர விளிம்பு  சங்கத்தின் பொதுச் செயலாளர் அவர்களே, மரியாதைக்குரிய விருந்தினர்களே, நண்பர்களே, சீமாட்டிகளே மற்றும் சீமான்களே

உங்கள் அனைவருக்கும் ஆயுபோவன் மற்றும் காலை வணக்கம்.

எங்கள் அமைப்பை ஒன்றாக இணைக்கும் உயிர்நாடியும், எமது தனித்துவமான அடையாளங்கள் வரையறுக்கப்பட்ட கரைகளைக் கொண்டதுமான கம்பீரமான  இந்து சமுத்திரத்தை நோக்கிய வகையில், கொழும்பில், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அமைச்சர்கள் குழுவின் 23 வது கூட்டத்தின் தொடக்க அமர்விற்காக, உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சியும் கௌரவமும் அடைகின்றேன்.

சில கொந்தளிப்பான ஆண்டுகளுக்குப் பிறகு பல உயர்மட்டப் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தருவது ஊக்கமளிக்கும் காட்சியாகும். கடந்த 12 முதல் 18 மாதங்களில் நாம் அடைந்திருக்கும் முன்னேற்றம் மற்றும் மீட்சியானது, பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள எமது நண்பர்களின் அசைக்க முடியாத ஆதரவும்  ஒத்துழைப்பும் மற்றும் எமது மக்களின் மன உறுதியும் இல்லாமல் சாத்தியமில்லை.

இந்த உத்வேகத்துடனும் இந்த உற்சாகத்துடனும் இலங்கை இந்த அமர்வை நடாத்துகின்றது.

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைவராக பங்களாதேஷ் பணியாற்றிய காலத்தில் நல்கிய சிறப்பான தலைமைத்துவம் மற்றும் குறிப்பிடத்தக்க பணிகளுக்கு எங்களது ஆழ்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட  கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மிகவும் சவாலான காலகட்டங்களில் பங்களாதேஷ் இந்தப் பதவியை வகித்தது.

மேன்மை தங்கியவர்களே, சீமாட்டிகளே மற்றும் சீமான்களே

வரலாற்று ரீதியாக, சர்வதேச விவகாரங்களில் இலங்கை முக்கிய பங்காற்றியுள்ளது. 1976ல் நாங்கள் வழிநடத்திச் சென்ற அணிசேரா இயக்கத்தை ஸ்தாபிப்பதற்கு வழி வகுத்த பாண்டுங் மாநாட்டின் ஒரு பகுதியாக நாங்கள் இருந்தோம். எனவே, நமது வெளியுறவுக் கொள்கையானது, பிராந்தியத்திலும் மற்றும் அதற்கு  அப்பாலும் சமாதானம், ஸ்திரத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது.

1971ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இந்து சமுத்திரப் பகுதியையும் அதன் வான்பரப்பையும் சமாதான வலயமாக பிரகடனப்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் இலங்கை உலக அரங்கில் அழியாத முத்திரையைப் பதித்தது. இந்தத் தீர்மானம், அரசியல் எல்லைகள்  மற்றும் சித்தாந்தங்களைக் கடந்து, இந்து சமுத்திரத்தின் பரந்த பரப்பை ஒத்துழைப்பு, புரிதல் மற்றும் அமைதியின் அடையாளமாக மாற்றுவதற்கு முயன்றது. சமாதானம், ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் எமது தேசத்தின் நீடித்த உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கும் வகையில், இன்று, இந்த உன்னத முயற்சியை மகத்தான பெருமையுடன் திரும்பிப் பார்க்கின்றோம். பல்வேறு தொடர்ச்சியான சவால்களைத் தீர்ப்பதில் சர்வதேச சமூகம் பணியாற்றுவதற்கான வழிமுறையாக பலதரப்பு மற்றும் இராஜதந்திரத்தில் நாம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளோம்.

மேன்மை தங்கியவர்களே, சீமாட்டிகளே மற்றும் சீமான்களே

இந்த வரலாற்றுச் சூழலில், இந்து சமுத்திரத்தை ஒட்டிய கரையோர நாடுகளை ஒன்றிணைத்து பிராந்திய ஒத்துழைப்பையும் நிலையான அபிவிருத்தியையும் மேம்படுத்தும் நோக்கில், 1997ஆம் ஆண்டு ஸ்தாபக உறுப்பினராக, இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தில் இணைந்து கொண்டமைக்காக இலங்கை  பெருமை கொள்கின்றது.

அப்போதிருந்து, எங்கள் அமைப்பு பலமாக வளர்ச்சியடைந்துள்ளதுடன், இப்போது எங்கள் அமைப்பில் 23 உறுப்பு நாடுகள் மற்றும் 11 உரையாடல் பங்காளிகள்  என பல்வேறு ஆர்வங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளோம்.

எங்கள் சங்கத்தின் சாசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, இந்து சமுத்திரப் பகுதியில் சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துவதே இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் முதன்மை நோக்கங்களாகும். கண்கவர் இந்து சமுத்திரத்தில் உள்ள நாம் கவனம் செலுத்தாத பல்வேறு சவால்கள் மற்றும்  வாய்ப்புக்களை எதிர்கொள்ள இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் மூலம் எங்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பு உள்ளது.

இதன் வெளிச்சத்தில், புரவலன் தேசமாக, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளில் அழுத்தமான விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களை  எளிதாக்குவதற்காக எமது அமைப்பை வழிநடாத்தும் வாய்ப்பை நாங்கள் விரும்புகின்றோம்.

இன்று நாம் ஒன்றுகூடும் போது, முன்னால் இருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புக்களை நாம் உணர்ந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். எமது பிரதேசம்  பல்வேறு சிக்கலான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இந்த சவால்களுக்கு எமது கூட்டு முயற்சிகள் மற்றும் எமது பிராந்தியம், இந்து சமுத்திரம் மற்றும் எமது பாரம்பரியம் ஆகியவற்றிற்கு குறிப்பிட்ட புதுமையான மற்றும் உள்ளடக்கிய தீர்வுகளைக் கண்டறிவதற்கான வலுவான அர்ப்பணிப்பு தேவைப்படுகின்றது. 'பிராந்தியக் கட்டிடக்கலையை வலுப்படுத்துதல்: இந்து சமுத்திரத்தின் அடையாளத்தை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ள ஆலோசனையின் போது எமது அமைப்பு இந்த சவால்கள் குறித்து திறந்த மற்றும் வெளிப்படையான முறையில் கலந்துரையாடும்.

மேன்மை தங்கியவர்களே, சீமாட்டிகளே மற்றும் சீமான்களே

எமது பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள மக்களின் நிலையான அபிவிருத்தி மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் வகையில், ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம், முதலீட்டு ஊக்குவிப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டு வசதி, மீன்பிடி முகாமைத்துவம், இடர் முகாமைத்துவம், சுற்றுலா மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள், கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பசுமைப் பொருளாதாரம் மற்றும் பெண்கள் பொருளாதார அபிவிருத்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் என நாங்கள் நம்புகின்றோம். எமது அனைத்து முயற்சிகளிலும், தனியார் துறை, சிவில் சமூகம், கல்வி நிறுவனங்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலதரப்பட்ட பங்குதாரர்களின் குழுவை உள்ளடக்கியதன் முக்கியத்துவத்தை நாம் குறைத்து  மதிப்பிடக்கூடாது. அவர்களின் நிபுணத்துவம், படைப்பாற்றல் மற்றும் வளங்கள் ஆகியவை எமது கூட்டு வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கக்கூடிய விலைமதிப்பற்ற சொத்துக்களாகும்.

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் இந்தோ - பசிபிக் கண்Nhணட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளபடி, எமது அமைப்பு ஒருமித்த அடிப்படையிலான, பரிணாம மற்றும் ஊடுருவாத அணுகுமுறையின் மூலம் புரிந்துணர்வையும் பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பையும் கட்டியெழுப்பவும் விரிவுபடுத்தவும் முயற்சித்துள்ளது. இந்த விழுமியங்களை மேம்படுத்துவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், ஐக்கிய நாடுகளின் சாசனம் மற்றும் 1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் தொடர்பான ஐ.நா. சாசனம் உட்பட சர்வதேச சட்டத்தின்படி, வழிசெலுத்தல்  மற்றும் அதிகமான விமானங்களை செலுத்துவதற்கான சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்கும் எமது அமைப்பு ஒரு வழியாகும். இதன் மூலம் சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் அனைவருக்கும் பொருத்தமான வகையில் செழுமையைப் பேணுவதற்கு சாதகமாக பங்களிக்கின்றது.

மேன்மை தங்கியவர்களே, சீமாட்டிகளே மற்றும் சீமான்களே

எமது அமைப்பின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கும் நிலையில், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை அடைந்து  கொள்வதற்காக அர்ப்பணிப்புடனும் வலுவான ஈடுபாட்டுடனும் வழிநடத்துவோம் என உறுதியளிக்கின்றோம். இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் புதிய தலைவர் என்ற வகையில், இந்த முன்னுரிமைகளுக்கு இலங்கை உறுதியுடன் உள்ளதுடன், இந்து சமுத்திரத்தின் எல்லைக்கு மிகவும் வளமான, பாதுகாப்பான மற்றும் ஒன்றோடொன்று இணைந்த எதிர்காலத்தை உறுதிசெய்வதற்காக, எமது சக உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயற்படுவோம். இந்தக் கூட்டு முயற்சிகளின் மூலம், இந்து சமுத்திரப் பகுதியின் அடையாளத்தை வலுப்படுத்துவதையும், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையின் கலங்கரை விளக்கமாக நமது நிலையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

இறுதியாக, எமது வெற்றியும், வருங்கால சந்ததியினரின் வெற்றியும் இன்று நாம் எடுக்கும் முடிவுகளில் தங்கியுள்ளது. நாம் சரியான தெரிவுகளை மேற்கொண்டால், வருங்கால சந்ததியினர் தமது உரிமைகளுக்காக போராடிய தலைமுறையாக நம்மை நினைவு கூர்வார்கள். ஒரு செழிப்பான மற்றும் பாதுகாப்பான இந்து  சமுத்திரத்தை உருவாக்குவதற்கு எமக்கு முன் ஒரு தனித்துவமான வாய்ப்பு உள்ளது.

நான் உங்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், எமது அழகான நாட்டில் நீங்கள் மகிழ்ச்சியாக தங்கியிருப்பதற்கு வாழ்த்துகின்றேன்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close