இலங்கைக்கான துருக்கித் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் மரியாதை நிமித்தம் சந்திப்பு

 இலங்கைக்கான துருக்கித் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் மரியாதை நிமித்தம் சந்திப்பு

இலங்கைக்கான துருக்கிக் குடியரசின் தூதுவர் டிமெட் செகெர்சியோலு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை ஆகஸ்ட் 25, புதன்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

துருக்கியின் வளமான நாகரீக வேர்களையும், உலகிற்கான அதன் ஆர்வமுள்ள கலாச்சாரங்களின் இணக்கமான  சகவாழ்வையும் இந்தக் கலந்துரையாடலின் போது வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் எடுத்துரைத்தார். அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் இலங்கை மற்றும் துருக்கிக்கு இடையேயான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர் பீரிஸ், தற்போதுள்ள சிறந்த உறவுகளை மேலும் உயர்த்துவதற்கான இலங்கையின் ஆர்வத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

புதிய நியமனத்திற்காக வெளிநாட்டு அமைச்சர் பீரிஸுக்கு பாராட்டுக்களை வழங்கி, இலங்கை மற்றும் துருக்கிக்கு இடையேயான பலதரப்பட்ட ஒத்துழைப்பின் வலுவான அரசியல் உறவுகள், வர்த்தகம், முதலீடு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளிலான ஒத்துழைப்பின் பன்முகத் தன்மையை தூதுவர் செகெர்சியோலு வலியுறுத்தினார். இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும்,  இலங்கைத் தேயிலை ஏற்றுமதிக்கான துருக்கிய சந்தையின் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.

பலதரப்பு அரங்குகளில் துருக்கி அளித்த ஆதரவுக்காக தனது ஆழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்த அமைச்சர்  பீரிஸ், பரஸ்பரம் ஆர்வமுள்ள பகுதிகளிலான ஒத்துழைப்பை வரவேற்றார்.

கோவிட்-19 தொற்றுநோயால் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் நாடுகளிடையேயான ஒற்றுமை மற்றும்  ஒத்துழைப்பின் அவசிய் இந்தக் கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டது. இந்த நிலையில், துருக்கி இலங்கைக்கு வென்டிலேட்டர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை இந்த ஆண்டு பெப்ரவரியில் நன்கொடையாக வழங்கியமையை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் நினைவு கூர்ந்தார்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல்  பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஆகஸ்ட் 27

Please follow and like us:

Close