இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜாசின் பின் ஜாபிர் ஜாசிம் அல் சொரூர் புதிய வெளிநாட்டு அமைச்சர்  பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களுடன் சந்திப்பு

 இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜாசின் பின் ஜாபிர் ஜாசிம் அல் சொரூர் புதிய வெளிநாட்டு அமைச்சர்  பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களுடன் சந்திப்பு

2021 ஆகஸ்ட் 25ஆந் திகதி கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் ஜாசிம் அல் சொரூர் புதிய வெளிநாட்டு அமைச்சர்  பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்தார்.

இரு நாடுகளிலிருந்தும் உயர் மட்ட அரச விஜயங்களால் வலுவூட்டப்பட்ட கட்டார் அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், பொருளாதார வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். துறைமுக நகர விஷேட பொருளாதார வலயம், சர்வதேச நிதி நிலையம், சுற்றுலாத் துறை மற்றும் எரிசக்தித் துறை  முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழலை ஆராய்வதற்காக தூதுவர் சொரூருக்கு அமைச்சர் பீரிஸ் அழைப்பு விடுத்தார்.

அமைச்சர் பீரிஸின் கருத்துக்களை வரவேற்ற தூதுவர் சொரூர், தனது நேர்மையான பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் கட்டார் அரசாங்கம் உதவத் தயாராக இருப்பதை  மீண்டும் வலியுறுத்தினார். சவாலான நேரத்தில் அவசர சுகாதாரத் துறைத் தேவைகளை நீடிக்க கட்டார் அரசாங்கம் தயாராக இருக்கின்றமைக்காக அமைச்சர் பீரிஸ் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மற்றும் ஏனைய சர்வதேச மன்றங்களில் இலங்கை அரசாங்கததிற்கு  கட்டார் அரசாங்கம் அளித்த உறுதியான ஆதரவை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் நன்றியுடன் ஏற்றுக்கொண்டார்.

கட்டர் அரசின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்காக கட்டாரில் உள்ள இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர் சமூகத்தின் மதிப்புமிக்க பங்களிப்புக்களை தூதுவர் சொரூர் பதிவு செய்ததுடன், இலங்கையர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடையேயான வணிகப் பிரதிநிதிகளின் வழக்கமான பரிமாற்றங்கள் வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும்  கூட்டாட்சியை மேலும் விரிவாக்க உதவும் என அமைச்சர் பீரிஸ் மற்றும் தூதுவர் சொரூர் இருவரும் குறிப்பிட்டனர்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல்  பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஆகஸ்ட் 27

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close