இந்திய வணிகர்களின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை மற்றும் மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்திற்கு இடையிலான ஊடாடும் அமர்வு

இந்திய வணிகர்களின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை மற்றும் மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்திற்கு இடையிலான ஊடாடும் அமர்வு

மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகமும், இந்திய வணிகர்களின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபையும் இணைந்து இந்திய வணிகர் சங்கத்தின் குழு உறுப்பினர்களுக்கும், தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான ஊடாடும் அமர்வை 2021 நவம்பர் 09ஆந் திகதி மும்பையில் உள்ள இந்திய வணிகர்களின் சபையின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்தன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக துணைத் தூதுவர் கலாநிதி. வல்சன் வேத்தோடி கலந்து கொண்டதுடன், அவரை தலைவர் திரு. ஜுசார் கொராக்கிவாலா மற்றும் பணிப்பாளர் நாயகம் திரு. அஜித் மங்ருல்கர் ஆகியோர் அன்புடன் வரவேற்றனர். இலங்கைக்கும் இந்தியாவின் மேற்குப் பிராந்தியத்திற்கும் இடையில் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாவை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, அதிகாரிகள் மற்றும் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

வரவேற்பு உரையின் போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால பன்முக இருதரப்பு உறவுகளை எடுத்துரைத்த இந்திய வணிகர்களின் சபையின் தலைவர்,  2021 செப்டம்பர் 29ஆந் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட 'இந்தியா - இலங்கை தற்போதைய வணிகச் சூழல், விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் துறைக்கான கூட்டு ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்கள்' மற்றும் 2017இல் இந்திய வணிகர்கள் சபையில் இருந்து இலங்கைக்கான வணிகத் தூதுக்குழு குறித்த வெபினார் போன்ற இந்திய வணிகர்களின் சபை தூதரகத்துடன் இணைந்து வெற்றிகரமாக நிறைவு செய்த சில முக்கிய விளம்பர நடவடிக்கைகளை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இலங்கை அரசாங்கம் வகுத்துள்ள அபிவிருத்தி சீர்திருத்தங்கள், முதலீடுகளுக்காக திறக்கப்பட்டுள்ள துறைகள் மற்றும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்தும், குறிப்பாக இந்திய ஊடகங்களின் ஊடக அறிக்கைகளில் வெளியிடப்படும் பல்வேறு பாதகமான சூழல்களைத் தெரிந்துகொள்வதற்கு ஆர்வமாக இருப்பதாக இந்திய வணிகர்களின் சபையின் பணிப்பாளர் நாயகம் சிறப்புரையின் போது குறிப்பிட்டார். இரு தரப்பினருக்குமான சாதகமான வெற்றிகரமான பொருளாதார சமன்பாட்டில், இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி செயன்முறையில் பங்கேற்பதற்கான இந்திய வணிகர்களின் சபை உறுப்பினர்களின் நலன்களையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்த சந்திப்பில் உரையாற்றிய மற்றும் குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த துணைத் தூதுவர், இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கினார். அவர் தனது உரையின் போது, இலங்கை அரசாங்கத்தின் வெற்றிகரமான தடுப்பூசித் திட்டம், சர்வதேச பயணிகளை வரவேற்க மற்றும் சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள், மருந்து வலயம், ஆடை வலயம், துறைமுக நகரம், மீன்பிடி மற்றும் விவசாயத் துறையில் வாய்ப்புக்கள், சாதகமான முதலீட்டுச் சூழல், பொருளாதார நிலைமையை மேம்படுத்துதல், விமானத் தொடர்பு மற்றும் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் போன்ற இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்தும் எடுத்துக்காட்டினார். ஹம்பாந்தோட்டை துறைமுகம், துறைமுக நகரம் மற்றும் இலங்கையில் சீனாவின் புவிசார் மூலோபாயம் சார்ந்த ஆர்வம் போன்ற பாதகமான பிரச்சாரங்களை அவர் தெளிவுபடுத்தினார். இலங்கையில் வெளிநாட்டு நாணயப் பிரச்சினை தொடர்பான பாதகமான ஊடக அறிக்கைகளை தெளிவுபடுத்திய அவர், இது ஒரு கட்டமைப்புப் பிரச்சினை அல்ல, மாறாக கோவிட் தொற்றுநோயின் காரணமாக ஒரு குறுகிய கால பணப்புழக்கப் பிரச்சினை மட்டுமே என்றும், இலங்கை மத்திய வங்கி நிலைமையை இயல்பாக்கும் இந்த செயன்முறையை ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் சீனாவின் அபிவிருத்தியடைந்து வரும் புவிசார் மூலோபாய செல்வாக்கு குறித்து வினவியபோது, இலங்கையர்களானிய நாம் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு குறித்து பெருமிதம் கொள்வதாகவும், நாம் ஒருபோதும் வேறு எந்த நாடுகளுக்கும் அடிபணிய மாட்டோம் என்றும், இலங்கையில் சீனாவின் பொருளாதார இருப்பு முற்றிலும் பொருளாதாரக் காரணிகளின் அடிப்படையிலானதாகும் என்றும் கலாநிதி. வேதோடி தெளிவுபடுத்தினார். பலம் வாய்ந்த நாடுகளின் வெளிநாட்டு அழுத்தங்களை மீறி இலங்கை எவ்வாறு பிரிவினைவாதப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து அறிவிக்கப்படாத கதிரியக்கப் பொருட்களைக் கொண்ட சீனக் கப்பல் அனுப்பப்பட்ட சம்பவங்கள் மற்றும் மாதிரிகள் மாசுபட்டதாக பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்ட சீன நிறுவனத்திடமிருந்தான உரச் சரக்கை இலங்கை ஏற்காத சமீபத்திய சம்பவங்களை அவர் எடுத்துக்காட்டினார். அதன் பின்னர், அனுமானங்களுக்கு அப்பால் இலங்கையில் உள்ள வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பு, குஜராத் பிரிவுடன் இணைந்து தூதரகம் ஏற்பாடு செய்துள்ள முதலீட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்ள அனைத்து பங்கேற்பாளர்களும் அழைக்கப்பட்டனர்.

இந்திய வணிகர்களின் சபை என்பது மும்பையில் வளமான பாரம்பரியத்துடன் கூடிய நீண்ட கால வணிக சங்கமாகும். ரிலையன்ஸ், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா, கோத்ரெஜ் போன்ற மும்பை மற்றும் இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பெரும்பாலான பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்திய வணிகர்களின் சபை உறுப்பினர்களாக உள்ளனர். இது 5000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன், அதனுடன் இணைந்த 150 க்கும் மேற்பட்ட வர்த்தக சங்கங்கள் உள்ளன. உள்ளூர் வணிகங்களின் நலன்களுக்கான உரிமைகளுக்காகப் போராடுவதற்காக 1907ஆம் ஆண்டு செப்டம்பர் 07ஆந் திகதி சில இந்திய வணிகர்களால் இந்த சபை நிறுவப்பட்டது. தேசத்தை கட்டியெழுப்புவதற்கான இந்த சபையின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மகாத்மா காந்தி 1931 இல் கௌரவ உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டார். மும்பையில் உள்ள சர்ச்கேட்டில் உள்ள சபைக் கட்டிடத்தின் அடிக்கல்லை ஸ்ரீ சர்தார் வல்லபாய் படேல் நாட்டினார். கொள்கை உள்ளீடுகளை வழங்குவதும், நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் நலன்களை மேம்படுத்துவதுமே தற்போதைய நேரத்தில் சபையின் முக்கிய செயற்பாடாகும்.

இந்த விஜயத்தின் போது தூதரகத்தின் கொன்சல் (வர்த்தகம்) சந்துன் சமீர துணைத் தூதுவருடன் இணைந்திருந்தார்.

துணைத் தூதரகம்,

மும்பை

2021 நவம்பர் 17

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close