இந்திய மற்றும் தெற்காசிய ஆய்வுகளின் வியட்நாம் இதழின் இலங்கை தொடர்பான விஷேட வெளியீடு

 இந்திய மற்றும் தெற்காசிய ஆய்வுகளின் வியட்நாம் இதழின் இலங்கை தொடர்பான விஷேட வெளியீடு

இந்திய மற்றும் தென்மேற்கு ஆசிய ஆய்வுகளுக்கான வியட்நாம் நிறுவனம் மற்றும் வியட்நாம் சமூக அறிவியல்  அக்கடமி ஆகியவற்றுடன் இணைந்து, இந்திய மற்றும் தெற்காசிய ஆய்வுகளுக்கான வியட்நாம் இதழின்  2021 செப்டம்பர் மாதத்திற்கான விஷேட வெளியீட்டை 2021 அக்டோபர் 22ஆந் திகதி வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டது.

இரு நாடுகளிலிருந்துமான புகழ்பெற்ற அறிஞர்களின் பங்களிப்புக்களுடன், இந்த விஷேட வெளியீடானது, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச இயக்கவியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பொருளாதாரம்,  வரலாறு, இராஜதந்திரம், முதலீடு, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகிய பகுதிகளை தழுவியதாக அமைந்திருந்தது.

வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, வியட்நாம் சமூக அறிவியல் அக்கடமியின் துணைத் தலைவர் பேராசிரியர் (கலாநிதி) டாங் நுயென் ஆன், வியட்நாமின் இந்திய மற்றும் தென்மேற்கு ஆசிய ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிலையான துணைப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி. பாம் காவோ குவொங், வியட்நாமிற்கான இலங்கைத் தூதுவர் பிரசன்ன கமகே, இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தன்ஹ் ட்ருக் அம்மையார் மற்றும் இலங்கையின் அனைத்து பங்களிப்பாளர்கள், வியட்நாம் அக்கடமியின் சமூக அறிவியல் கல்வியியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு அமைச்சின் சிரேஹ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன், ஹா-னோய் மற்றும் கொழும்பில் இந்த வெளியீட்டு விழா நடாத்தப்பட்டது. வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 51வது ஆண்டு நிறைவு மற்றும் வியட்நாம் சமூக அறிவியல் அக்கடமியின் 10வது ஆண்டு  நிறைவு அனுஷ்டானங்களுக்கு அமைய இந்த விஷேட வெளியீடு வெளியிடப்பட்டது.

பேராசிரியர் எமரிட்டஸ், பங்களாதேஷிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுதர்சன் செனவிரத்ன, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிறுவகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கலாநிதி கணேசன் விக்னராஜா, இலங்கை மத்திய வங்கியின் கலாநிதி சந்திரநாத் அமரசேகர மற்றும் திருமதி பூங்கோதை ரத்னவடிவேல், கொழும்பு பல்கலைக்கழகத்தின் திரு. ஜோர்ஜ் ஐ.எச். குக் மற்றும் கொள்கைக் கற்கைகள் நிறுவகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் திருமதி. நிமேஷா திஸாநாயக்க ஆகியோர், பிராந்தியத்தை மறுவரையறை செய்தல், அடையாளம் மற்றும் சித்தாந்தம்: வரலாற்று தெற்காசியாவின் முன்னோக்குகள், கோவிட்டுக்குப் பிந்தைய உலகம்: இலங்கை எவ்வாறு தெற்காக மாற முடியும், ஆசியாவின் துபாய், வியட்நாம் மற்றும் இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திப் பயணங்களின் ஒப்பீட்டு ஆய்வு, ஆசிய நட்பு நாடுகள்: ஆசிய நூற்றாண்டை நனவாக்க பாண்டுங்கை மறுபரிசீலனை செய்தல் (அணிசேரா இயக்கத்தின் 60வது ஆண்டு நிறைவு), இலங்கையின் மரக்கறி விவசாய முறைகளின் லாபம் மற்றும் போட்டித்தன்மையை மதிப்பீடு என்ற கருப்பொருள்களின் கீழ் மதிப்புமிக்க பங்களிப்புக்களை வழங்கினர். இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மற்றும் இலங்கையின் வாய்ப்புக்கள் - வியட்நாம் உறவுகள், ஏற்றுமதி நடவடிக்கைகளில் கோவிட்-19 இன் தாக்கம் மற்றும் இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் முறையே இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டி குறித்து வியட்நாமில் இருந்து திருமதி டிரான் என்கோக் டீம், திரு.  நுயென் டக் ட்ரூங் மற்றும் திருமதி பாம் துய் நுயென் ஆகியோர் பேசினர்.

இரு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களின் பங்களிப்புடன் பரந்த கண்ணோட்டங்களை வெளிப்படுத்தும் வகையில்,  இலங்கை - வியட்நாம் உறவுகள் குறித்து வியட்நாமிய மொழியில் ஒரு கல்வியியல் இதழ் வெளியிடப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும்.

தனது ஆரம்ப உரையில், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால, அன்பான மற்றும் சுமூகமான  இருதரப்பு உறவுகளைப் பாராட்டிய பேராசிரியர் (கலாநிதி) டாங் நுயென் ஆன், கடந்த இரண்டு ஆண்டுகளாக வியட்நாம் சமூக அறிவியல் அக்கடமிக்கும் இலங்கைக்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பைக் குறிப்பிட்டார்.

இலங்கை மற்றும் வியட்நாமின் பன்முக உறவுகள் மற்றும் இரு நாடுகளினதும் தலைவர்களினால் வளர்க்கப்பட்ட ஆழமான வேரூன்றிய பிணைப்பின் சிறந்த அம்சங்களையும் வெளியுறவுச் செயலாளர் கொலம்பகே எடுத்துரைத்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழான இலங்கை அரசாங்கத்தின் மூன்று முக்கிய தூண்களான தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு உறவுகள் ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார். கலாநிதி. குவாங் அவர்களால் நடாத்தப்பட்ட உற்சாகமான ஊடாடும் அமர்வில் இரு நாடுகளிலிருந்தும் பங்களிப்பாளர்கள் மற்றும் வியட்நாம் சமூக அறிவியல் அக்கடமியின் கல்வியியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டதுடன், இதில்  அவர்கள் பங்களித்த கருப்பொருள் துறைகளிலான முன்னோக்குகள் மற்றும் கருத்துகள் பகிரப்பட்டன.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இருதரப்புக் கூட்டுறவை மேலும் விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும்  வேண்டியதன் அவசியத்தை தூதுவர் கமகே தனது கருத்துக்களில் வலியுறுத்தினார்.

இலங்கைத் தூதரகம்,

ஹா-னோய்

2021 அக்டோபர் 26

Please follow and like us:

Close