2021 நவம்பர் 30ஆந் திகதி புது தில்லியில் இடம்பெற்ற இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்குடனான சந்திப்பின் போது, இந்தியாவுடனான காவல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆராய்ந்தார். அவருடன் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் துஷார கருணாதுங்கவும் இணைந்திருந்தார்.
குறிப்பாக, தீ விபத்துக்கள் சரியான நேரத்தில் மற்றும் திறமையான முறையில் கட்டுப்படுத்தப்படாதிருந்திருந்தால், இப் பிராந்தியத்தில் கடல் மாசுபாட்டின் பேரழிவுகரமான நிலைமைகளை விளைவித்திருக்கக் கூடிய, இலங்கையின் கடற்கரையில் இருந்த எம்.டி. நியூ டயமண்ட் மற்றும் எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல்களில் ஏற்பட்ட பேரழிவுகரமான தீயைக் கட்டுப்படுத்துவதில் வழங்கப்பட்ட உதவிகளைக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர் மொரகொட, இந்திய பாதுகாப்பு ஸ்தாபனம் பல வருடங்களாக பல துறைகளில் இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவுகளுக்காக அமைச்சர் சிங்கிற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
இலங்கை இராணுவ மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி வாய்ப்புக்களுக்காக அமைச்சர் சிங்கிற்கு நன்றிகளைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், எந்த நேரத்திலும் இந்தியாவில் சுமார் 700 இலங்கை இராணுவ மாணவர்கள் பயிற்சி பெற்று வருவதாகக் குறிப்பிட்டார். 2020 இன் ஆரம்ப மாதங்களில் காணப்பட்ட முடக்க நிலையின் போது, இலங்கை இராணுவ மாணவர்களை நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதற்காக இந்திய பாதுகாப்பு ஸ்தாபனம் எவ்வாறு ஆதரவளித்தது என்பதையும் நினைவு கூர்ந்த அவர், இந்த வசதிகளை வழங்கியமைக்காக அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். பாதுகாப்புத் துறையில் இந்தியப் பயிற்சி வாய்ப்புக்களை அதிக அளவில் பெற்ற ஒரே நாடாக இலங்கை விளங்குகின்றது. இலங்கை இராணுவ மாணவர்களுக்கு இந்தியாவில் மேலதிக பயிற்சி வாய்ப்புக்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு உயர்ஸ்தானிகர் பரிந்துரைத்தார்.
கோவிட்-19 தொற்றுநோயின் போது, மருத்துவப் பொருட்களுடன் கூடிய இராணுவ விமானங்களை அனுப்பி வைத்தமை, இந்தியக் கடற்படைக் கப்பல் 'சக்தி' யின் மூலம் இலங்கைக்குத் தேவையான மருத்துவத்தர ஒட்சிசனை அனுப்பி வைத்தமை, இலங்கைக் கடற்படைக் கப்பல் 'ஷக்தி' யின் மூலம் அதனை எடுத்துச் செல்வதற்கு வசதிகளை வழங்கியமை மற்றும் இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானம் மூலம் அவசரமாகத் தேவைப்படும் நனோ நைதரசன் உரங்களை விமானத்தில் எடுத்துச் சென்றமை போன்ற இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்காக பாதுகாப்பு அமைச்சர் சிங்கிடம் உயர்ஸ்தானிகர் மொரகொட தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்நிலையில், இலங்கைக்கு பெரிய அளவிலான ஒட்சிசன் ஜெனரேட்டரை நன்கொடையாக வழங்குவதற்கு இந்தியக் கடற்படை முன்வந்திருப்பதும் பாராட்டுக்குரியது.
வருடாந்த இருதரப்புக் கூட்டு இராணுவம் மற்றும் கடற்படை பயிற்சிகளை முன்னெடுப்பது தொடர்பில் இரு பிரமுகர்களும் கவனம் செலுத்தினர். கடந்த ஒரு வருடத்தில் கொழும்பு பாதுகாப்பு மாநாடு அடைந்துள்ள அபரிமிதமான முன்னேற்றத்தையும் அவர்கள் திருப்தியுடன் நினைவு கூர்ந்தனர்.
'இந்தியாவில் உள்ள இலங்கை இராஜதந்திரத் தூதரகங்களுக்கான ஒருங்கிணைந்த மூலோபாயம் 2021/2023' என்ற தனது கொள்கை வரைபடத்தின் பிரதியை உயர்ஸ்தானிகர் மொரகொட அமைச்சர் சிங்கிடம் கையளித்தார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
புது தில்லி
2021 டிசம்பர் 03