ஆப்கானிஸ்தானிலுள்ள நிலைமை பற்றிய அறிக்கை

ஆப்கானிஸ்தானிலுள்ள நிலைமை பற்றிய அறிக்கை

ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதுடன், முன்னேற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. ஆப்கானிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும்  அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு மீள அழைத்து வருவதே எமது முதன்மையான கவலையாகும். ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பினால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இந்தியா, பாகிஸ்தான் அரசாங்கங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளிநாட்டு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கேட்டுக் கொண்டார். இந்த நோக்கத்திற்காக தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள மொத்தமான எண்பத்தாறு (86) இலங்கையர்களில், இதுவரை நாற்பத்தாறு (46) பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி, இருபது (20) இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளதுடன், வெளிநாட்டு அமைச்சு அவர்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கிடையில், இருபது (20) ஏனைய இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தலிபான்கள் பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதுடன், எந்த வெளிநாட்டினருக்கும் தீங்கு செய்ய மாட்டோம் என உறுதியளித்துள்ளமையை தெரிவிப்பதில் இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்ற அதே வேளை, அந்த உறுதிப்பாட்டை தொடர்ந்தும் மதிக்குமாறு தலிபான்களைக் கேட்டுக் கொள்கின்றது. இஸ்லாமியப் பாரம்பரியத்தைப் பின்பற்றி  ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொழில்களில் ஈடுபடலாம் மற்றும் பெண்கள் பாடசாலைகளுக்குச் செல்லலாம் என தலிபான்கள் அளித்த உறுதிமொழிகளைக் கண்டு இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்றது.

நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய பொறிமுறையொன்று  நிறுவப்படும் என தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பை இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்கின்றது.

தற்போது தலிபான் ஆட்சியில் இருப்பதால், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை உறுதிப்படுத்துமாறும்,  ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மக்களினதும் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்குமாறும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

ஒட்டுமொத்த தெற்காசியப் பிராந்தியத்திலும் சீர்குலைக்கும் விளைவை ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பான  இடத்தையும், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தையும் மேம்படுத்த முயலும் தீவிர மதவாதக் குழுக்களின் சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை கொண்டுள்ளது. அன்றாட நிலைமைகளை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.

சார்க் உறுப்பினர் என்ற வகையில், இது சம்பந்தமாக எந்தவிதமான பிராந்திய முயற்சிகளுக்கும் உதவுவதற்கு  இலங்கை தனது பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளது.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 ஆகஸ்ட் 21

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close