அன்டலியாவில் 'இலங்கையின் சுவை'

அன்டலியாவில் ‘இலங்கையின் சுவை’

துருக்கி, அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம், 2021 நவம்பர் 05 ஆந் திகதி அன்டலியாவில் உள்ள பிரபலமான அன்டலியா  கடற்கரைப் பூங்காவில் அமைந்துள்ள 'மை ஆசியா உணவகத்தில்' இலங்கையை விளம்பரப்படுத்துவதற்காக 'இலங்கையின் சுவை' உணவுக் காட்சியை ஏற்பாடு செய்தது. தூதுவர் எம். ரிஸ்வி ஹசன், எம்.எச்.பி கட்சியின் மாகாணத் தலைவர் திரு. ஹில்மி துர்கன் மற்றும் அன்டலியாவுக்கான இலங்கையின் கௌரவத் தூதுவர் திரு. அலி கம்புரோக்லு ஆகியோருடன் இணைந்து துருக்கி - இலங்கை இடையேயான நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் உறுப்பினர் அப்துர்ரஹ்மான் பஸ்கான் (அண்டலியா மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்) இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

மை ஆசியா உணவகத்தின் பங்குதாரரும், நிறைவேற்று சமையல்காரருமான திரு. சஹன் மொரட்டுவகே மற்றும் பிரபல்யமான  துருக்கிய சமையல்காரர் முஸ்தபா எரோல் ஆகியோர் இலங்கையின் பிரபலமான உணவு வகைகளான 'லம்ப்ரைஸ், அப்பம், கொத்து, ரொட்டி மற்றும் வட்டிலப்பம்' ஆகியவற்றை சமைத்து விருந்தினர்களைக் கவர்ந்தனர்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர் அப்துர்ரஹ்மான் பஸ்கான் (நாடாளுமன்ற உறுப்பினர்) பேசுகையில், ஒரு நட்பு நாட்டின் ஒரு  குறிப்பிட்ட கலாச்சாரத்தைப் பற்றிய புரிதல் அதன் உணவை அனுபவிப்பதன் மூலம் தொடங்குவதாகக் குறிப்பிட்டார். துருக்கியர்கள் இலங்கை உணவு வகைகளை ருசிப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதால், துருக்கியில் இலங்கையின் உணவு வகைகளை மேம்படுத்த தூதரகம் மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார். உண்மையான சிலோன் டீயை ருசிப்பது குறித்த தனது அனுபவத்தை திரு. பஸ்கான் விவரிக்கையில், 'இலங்கை என்று சொல்லும் போது, நாம் அனைவரும் சிலோன் டீயை நினைத்துப் பார்க்கிறோம், இது எமது குழந்தைப் பருவத்திலிருந்தே எமக்குத் தெரியும்' எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இலங்கையின் 'சித்தாலேப ஆயுர்வேத மற்றும் ஸ்பா' தயாரிப்புக்களின் தனித்துவத்தை  நேரில் காண அதிதிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இலங்கையின் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை முறைகளின் நன்மைகள் மற்றும் உள்ளூர் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய மருந்துகளின் பலன்கள் குறித்து இலங்கை ஆயுர்வேத வைத்தியர் செத்சிறி விஜேசிங்க விளக்கமளித்தார்.

இதில் ஏராளமான ஊடகவியலாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்துகொண்டு 'தூய சிலோன் டீ' உடன் பரிமாறப்பட்ட உணவு வகைகளை ருசித்தனர்.

இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2021 நவம்பர் 10

Please follow and like us:

Close