ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது கூட்டத் தொடரை ஒட்டி, 2023 செப்டம்பர் 19ஆந் திகதி நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற உயர்மட்ட விழாவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி அணு ஆயுதங்களை தடை செய்வதற்கான ஒப்பந்தத்தில் இணைவதற்கான ஆவணத்தை கையளித்தார். இதன்படி, இந்த ஒப்பந்தத்தில் இலங்கை 69வது அரச தரப்பாகும்.
2017 ஜூலை 07ஆந் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் அணு ஆயுதங்களை தடை செய்வதற்கான ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தைகளில் இலங்கை பங்கேற்றதுடன், அதை ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவாக வாக்களித்த 122 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். 2016 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற திறந்த நிலைப் பணிக்குழு செயன்முறையில் பங்கேற்று இலங்கையும் பங்களிப்புச் செய்ததுடன், இது ஒப்பந்தப் பேச்சுவார்த்தை செயன்முறைக்கு வழிவகுத்தது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்த தீர்மானத்திற்கு ஆதரவாக தொடர்ச்சியாக வாக்களிப்பதன் மூலம் அனைத்து அரசுகளையும் 'சாத்தியமான விரைவான திகதியில்' ஒப்பந்தத்தில் இணைய அழைப்பு விடுக்கும் இந்த ஒப்பந்தம் உலகளாவிய ரீதியில் பின்பற்றப்படுவதை இலங்கை ஊக்குவித்துள்ளது.
50 ஒப்புதல்களைப் பெற்ற பின்னர், இது 2021 ஜனவரி 22 முதல் நடைமுறைக்கு வந்தது.
அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஒப்பந்தம் அணு ஆயுதங்கள் அல்லது ஏனைய அணு சார்ந்த வெடிக்கும் சாதனங்களை உருவாக்குதல், சோதனை செய்தல், தயாரித்தல், உற்பத்தி செய்தல், கையகப்படுத்துதல், வைத்திருத்தல் அல்லது சேமித்து வைப்பதை விட்டும் உறுப்பு நாடுகளைத் தடை செய்கின்றது.
அணு ஆயுதங்களை தடை செய்வதற்கான உடன்படிக்கையை இலங்கை அங்கீகரிப்பதானது, சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கு ஆதரவாக அணு ஆயுதக் குறைப்புக்கான தனது நீண்டகால உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. இந்த சூழலில், இலங்கையும் 2023 ஜூலை 25ஆந் திகதி விரிவான அணுசக்தி பரிசோதனை தடை ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளது.
ஐ.நா. வின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் ஆயுதக் குறைப்பு விவகாரங்களுக்கான உயர் பிரதிநிதி திருமதி. இசுமி நகாமிட்சு, வெளிவிவகார செயலாளர் திருமதி அருணி விஜேவர்தன, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மாண்புமிகு மொஹான் பீரிஸ் மற்றும் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், நியூயோர்க்கில் உள்ள இலங்கையின் நிரந்தரத் தூதரகம் மற்றும் ஐ.நா. சட்ட விவகார அலுவலகம் ஆகியன இந்த நிகழ்வில் கலந்துகொண்டன.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 செப்டம்பர் 20