கௌரவ அருண் ஹேமச்சந்திர 2024, நவம்பர் 21 அன்று வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சராக பதவியேற்றார்.
பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினராவார். தேசிய மக்கள் சக்தி (NPP) இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினராக, அவர் முக்கியமானதொரு தலைமைப்பங்கை வகிக்கிறார். பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர, தேசிய அறிவுசார் அமைப்பின் கீழ் திருகோணமலை மாவட்ட ஒருங்கமைப்பாளராகவும், மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) திருகோணமலை மாவட்டத் தலைவராகவும் பணியாற்றுகிறார். மேலும், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவியையும் அவர் வகித்து வருகிறார். பிரதி அமைச்சர், சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசியக் குழுவின் உறுப்பினராகவும், கிழக்கு மக்கள் குரலின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார்.
பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர, பிலிப்பைன்ஸின் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக அறக்கட்டளையில் உயிரியலில் இளங்கலை விஞ்ஞானப் பட்டமும்(BSc), லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலைப்பட்டமும் (LLB) பெற்றுள்ளார்.
தனது பொதுச் சேவை வாழ்க்கையில், பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், நெறிமுறை மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கும், இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலனைப் பாதுகாப்பதற்கும், சகலரையும் உள்ளடக்கிய நிர்வாகம் மற்றும் நிலைபேறான தேசிய வளர்ச்சிக்குப் பங்களிப்பதற்கும் தீவிர ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறார்.
பிரதி அமைச்சரின், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழித் தேர்ச்சியானது, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் அவரது பயனுறுதிமிக்க ஈடுபாட்டை வலுப்பெறச்செய்கிறது.