வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்கை 2022 ஜூன் 30 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
மகிழ்ச்சிப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, இலங்கைக்கான சீனாவின் தொடர்ச்சியான உதவிகளை அமைச்சர் பீரிஸ் பாராட்டினார். இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்துள்ள எரிபொருள், உணவு மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை குறித்தும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தூதுவருக்குத் தெரிவித்தார். இந்த சவால்களை எதிர்கொள்வதற்காக, இருதரப்புப் பங்காளிகளும் சர்வதேச முகவர்களும் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
'ஒரே சீனக் கொள்கை' இல் இலங்கை தொடர்ந்தும் நிலைத்து நிற்கும் என சீனத் தூதுவரிடம் உறுதியளித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், சீனாவின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான இலங்கையின் தளராத ஆதரவை உறுதியளித்தார்.
ருவாண்டாவின் கிகாலியில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் பக்க அம்சமாக இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும் இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்குத் தேவையான உதவிகள் குறித்தும் 12 நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் நிதி உதவி மற்றும் இலங்கையின் கடனை மறுசீரமைத்தல் (சீர்திருத்தம் செய்தல்) மற்றும் மிக முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தூதுவருக்கு அவர் விளக்கினார்.
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் 'ஒரே சீனக் கொள்கை' தொடர்பான அதன் நிலையான நிலைப்பாட்டை சீனத் தூதுவர் பாராட்டினார்.
இலங்கைக்கு சாத்தியமான எல்லா வகையிலும் உதவிகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் இலங்கையுடன் தொடர்ந்தும் ஈடுபடும் என தூதுவர் குய் உறுதியளித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், சீன அரசாங்கத்தின் தளராத ஆதரவிற்காக இலங்கையின் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் சீனத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஜூலை 03