வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி கடமைகளை பொறுப்பேற்பு

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி கடமைகளை பொறுப்பேற்பு

எளிமையான முறையில் இடம்பெற்ற வைபவமொன்றில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இன்று (2022 ஜூலை 25) அமைச்சில் வைத்து கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். வெளிவிவகார  செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் அலி சப்ரி, உள்நாட்டு நிர்ப்பந்தங்களையும் கருத்தில் கொண்டு, இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அமைச்சின் ஆணையை செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு இதுவரை வழங்கப்பட்ட தலைமைத்துவத்திற்காக, பதவியிலிருந்து வெளியேறுகின்ற அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை அவர் பாராட்டினார்.

அமைச்சர் சப்ரி 2020 இல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2022 ஏப்ரல் 04ஆந் திகதி நிதி அமைச்சராக நியமிக்கப்படும் வரை, அமைச்சர் அலி சப்ரி 2022 ஆகஸ்ட் 12ஆந் திகதி முதல் நீதி அமைச்சராகப் பணியாற்றினார்.

நீதியமைச்சராக இலங்கை நீதித்துறையில் பரந்த அளவிலான சீர்திருத்தங்கள் உட்பட பல புதிய முயற்சிகளை ஆரம்பித்த அவர், நீதித்துறை சீர்திருத்தத் திட்டத்தினூடாக நூற்றுக்கும் மேற்பட்ட சட்டங்களைத் திருத்தியதுடன், அவற்றில் சில ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மாற்றியமைக்கப்படாத சட்டங்களாகும். அமைச்சர் அலி சப்ரி, நீதித்துறையின் டிஜிட்டல் மயமாக்கல், நாடு முழுவதும் நீதிமன்றங்களை விரிவுபடுத்துதல் மற்றும் காலதாமதமடைந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக விஷேட நீதிமன்றங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.

நிதியமைச்சர் என்ற வகையில், வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான சமீபத்திய பேச்சுவார்த்தைகளுக்கான இலங்கையின் தூதுக் குழுவை அவர் வழிநடத்தியிருந்தார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அமைச்சர் அலி சப்ரி சட்ட அறிக்கைகள் மற்றும் வெளியீடுகளில் தோன்றிய பல வழக்குகளுக்கான சட்டத்தரணியாக செயற்பட்டார். 2012 இல் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்ட அவர், 2009 இல் சட்டத்தில் சாதனை படைத்தமைக்காக ஆண்டின் சிறந்த இளம் நபருக்கான விருதைப் பெற்றார். அவர் 1997 இல் சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்கான இலங்கையின் துணைத் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஜூலை 25

 ​

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close