வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் பங்களாதேஷ் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

 வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் பங்களாதேஷ் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

டாக்காவில் உள்ள அரச விருந்தினர் மாளிகை பத்மாவில் இன்று (15/11) வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்  பங்களாதேஷ் வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி. ஏ.கே. அப்துல் மொமனை சந்தித்தார்.

பங்கபந்துவின் 100வது பிறந்தநாள் மற்றும் பங்களாதேஷின் சுதந்திரக் கொண்டாட்டத்தின் பொன்விழா ஆகியவற்றின் கூட்டுக்  கொண்டாட்டத்திற்காக 2021 மார்ச் மாதம் பங்களாதேஷிற்கு விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விஜயத்தையும், அதன் போதான கலந்துரையாடல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தமையையும், தனது விஜயத்தின் அனைத்து அம்சங்களையும் பிரதமர் பாராட்டியதாகவும் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் நினைவு கூர்ந்தார்.

சர்வதேச அரங்கில் குறிப்பாக மனித உரிமைகள் பேரவை மற்றும் பங்களாதேஷின் தற்போதைய கல்வி அமைச்சராக இருக்கும் முன்னைய வெளிநாட்டு அமைச்சர் தலைமை வகித்த பொதுநலவாய அமைச்சு நடவடிக்கைக் குழு ஆகியவற்றில் பங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெறும் நிலையான ஆதரவிற்கு வெளிநாட்டு அமைச்சர் தனது அன்பான பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இலங்கை பங்களாதேஷில் மேற்கொண்டுள்ள முதலீடான சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சார்ந்த  இரு நாடுகளுக்குமிடையிலான செயலூக்கமான வர்த்தக உறவுகள் குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர். சுமார் 110 இலங்கை நிறுவனங்கள் இங்கு  இயங்கி வருவதுடன் குறிப்பாக காப்புறுதி, வங்கி மற்றும் மின்சாரம் போன்ற சேவைத் துறைகளில் சிறந்து விளங்குகின்றன. இருப்பினும், தற்போது ஆண்டுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் அளவில் வர்த்தகத்தின் அளவை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

பங்களாதேஷூடனான முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கையில் இலங்கை ஆர்வமாக உள்ளதுடன், தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்வதில் மகிழ்ச்சி அடைகின்றது.

கப்பல் போக்குவரத்து மையமாக இலங்கை கவனம் செலுத்துவதால் கப்பல் துறையிலான ஒத்துழைப்பில் குறிப்பாக ஆர்வம் உள்ள அதே வேளை, பங்களாதேஷில் உள்ள சிட்டகொங் துறைமுகம் மற்றும் எமது நாட்டின் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்கள்  ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புகின்றது.

நாம் குறிப்பாக தீவன சேவைகள் மற்றும் கடலோர கப்பல் ஏற்பாடுகளை வலியுறுத்துகின்றோம். நேரம் மற்றும் கடல் மைல்கள்  குறைவதால், பங்களாதேஷுக்கும் இலங்கைக்கும் இடையிலான போக்குவரத்துப் பரிமாற்ற மையம் தொடர்பான ஒத்துழைப்பு பங்களாதேஷுக்கு நன்மை பயக்கும்.

மருத்துவ மாணவர்கள் மத்தியில் சிட்டகொங் பிரபலமாக இருப்பதால் கணிசமான எண்ணிக்கையிலான இலங்கை மாணவர்கள்  பங்களாதேஷில் கல்வி கற்று வருவதாக வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்தார்.

எமது நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பங்களாதேஷின் தாதியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் இலங்கை பரஸ்பரம் உதவ முன்வந்துள்ளது.

சுற்றுலாவைப் பொறுத்தமட்டில், கொழும்புக்கும் டாக்காவிற்கும் இடையிலான நேரடி இணைப்பு உதவிகரமாக உள்ளதுடன், கொழும்புக்கு விமானங்களை இயக்குவதற்கான தனியார் பங்களாதேஷ் விமான சேவையின் ஆர்வத்தை பங்களாதேஷ் அமைச்சர் தெரிவித்தார்.

இரண்டு அமைச்சர்களும், குறிப்பாக ஐயோராவின் கட்டமைப்பிற்குள் கடல் வளங்களை பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பு பரிமாணங்கள் குறித்த இரு நாடுகளுக்குமிடையேயான ஒத்துழைப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 நவம்பர் 15

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close