ஆசியாவிற்கான திறைசேரி துணைச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை இராஜாங்கச் செயலாளர் கெல்லி கெய்டர்லிங் தலைமையிலான அமெரிக்காவின் திறைசேரித் திணைக்களம் மற்றும் இராஜாங்கத் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பிரதிநிதிகளை, வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன 2022 ஜூன் 28 செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
பரஸ்பரம் நன்மை பயக்கும் மற்றும் இலங்கை மக்களின் நல்வாழ்வை நோக்கி பங்களிக்கின்ற இரு நாடுகளுக்குமிடையிலான வலுவான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு பங்காளித்துவத்தை வெளிவிவகாரச் செயலாளர் விஜேவர்தன வரவேற்றார். நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமையின் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் பல சவால்களை எதிர்கொள்வதில் அமெரிக்க ஆதரவின் சாத்தியமான பகுதிகள் குறித்தும் இலங்கைத் தரப்பு கலந்துரையாடியது. விஜயம் செய்திருந்த தூதுக்குழுவினர் இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட உரையாளர்களைச் சந்தித்து பொருத்தமான விடயங்கள் மற்றும் இலங்கையுடனான அமெரிக்காவின் நீண்டகால பங்காளித்துவத்தின் அம்சங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை வரவேற்றனர்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் அமெரிக்க திறைசேரித் திணைக்களம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் விஜயம் செய்திருந்த தூதுக்குழுவினருடன் இணைந்திருந்தனர். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இருதரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் (மேற்கு) மனிஷா குணசேகர, பொருளாதார அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் சந்தன வீரசேன மற்றும் அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் சதுர பெரேரா ஆகியோர் இச்சந்திப்பில் வெளிவிவகாரச் செயலாளருடன் இணைந்திருந்தனர்.
2022 ஜூன் 26 முதல் 29 வரையான அவர்களது விஜயத்தின் போது, இக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரை சந்தித்தனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 ஜூன் 28